வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (06/12/2017)

கடைசி தொடர்பு:16:35 (06/12/2017)

பி.ஜே.பி-யை கலக்கத்தில் ஆழ்த்திய கருத்துக்கணிப்பு! - குஜராத் கள நிலவரம் #GujaratElections2017

ஒகி புயல் பாதிப்பு

ரபரப்பாக சட்டசபைத் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் குஜராத் மாநிலத்தில் 'ஒகி' புயல் தாக்கத்தால், ஓரிரு இடங்களில் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.

'ஒகி' புயல் செவ்வாய்க்கிழமை வரை குஜராத் மாநிலத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்தநிலை இன்று மாறிவிட்டது. சூரத் கடல் பகுதியில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தப் புயல் சின்னம் வலுவிழந்து குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறிவிட்டது. அகமதாபாத் வானிலை ஆய்வு மையம் இதனை உறுதிசெய்துள்ளது. அதிவேகத்தில் வீசிய காற்று மற்றும் கடல்பகுதியின் மேற்பரப்பில் குளிர்ந்த சூழ்நிலை போன்ற சாதகமற்ற நிலைமை காரணமாக ஒகி புயல் வலுவிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூரத் மற்றும் வடக்கு குஜராத்தின் சில பகுதிகளில் இன்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. ஒகி புயல் வலுவிழந்துள்ள போதிலும், வடக்கு மகாராஷ்டிரா - தெற்கு குஜராத் கடல் பகுதியில் இன்றிரவுவாக்கில் கரையைக் கடக்கும் என்று தெரிகிறது. இதன் காரணமாக, கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குஜராத்தில் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளக்கூடிய வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, குஜராத்தில் மோசமான வானிலை காரணமாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 5) ரத்து செய்யப்பட்டது. மோர்பி, துங்கிராத், சுரேந்திர நகர் உள்ளிட்ட இடங்களில் ராகுல் பிரசாரம் செய்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், புயல் அச்சுறுத்தலால் அப்பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் அவர் தன் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டார்.

குஜராத் தேர்தல் - பி.ஜே.பி. பிரசாரம்

இதேபோல் சூரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசார பொதுக்கூட்டமும் தள்ளிவைக்கப்பட்டது. பி.ஜே.பி. தலைவர் அமித் ஷா, பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மேற்கொள்ளவிருந்த பிரசாரப் பேரணிகளும் புயல் அச்சுறுத்தலால் ரத்துசெய்யப்பட்டன. குஜராத் சட்டசபைத் தேர்தல் காங்கிரஸுக்கும், பி.ஜே.பி-க்கும் இடையேயான போட்டி என்பதை விடவும், குஜராத் மக்களின் எதிர்காலத்தைப் பற்றியது என்று ராகுல் காந்தி ஏற்கெனவே தன் பிரசாரத்தின்போது தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி இந்நிலையில், குஜராத் சட்டசபைத் தேர்தல் குறித்து அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், இந்தத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கும், பி.ஜே.பி-க்கும் ஏறக்குறைய சமபலம் வாய்ந்ததாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பி.ஜே.பி. கூடாரத்தை மேலும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் தேர்தல் பிரசார உத்தியை வேறுவகையில் மாற்றி, பிரசார பேரணியை மேலும் தீவிரப்படுத்த பி.ஜே.பி. முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, அக்கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து அடுத்த ஓரிரு நாளில் கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்கவிருக்கும் ராகுல் காந்திக்கு, குஜராத் தேர்தல் மிகுந்த சவால் நிறைந்த ஒன்றாகவே அமைந்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே ராகுல்காந்தி, குஜராத்தின் பல்வேறு நகரங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். குஜராத் தேர்தல் முடிவுகள், காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமாக இருக்கும்பட்சத்தில், அது ராகுலுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய பரிசாக அமையும். ஆனால், பி.ஜே.பியோ இந்தத் தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற உத்வேகத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்காக, நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களை பிரசாரக் களத்தில் இறக்கி விட்டுள்ளது. 

குஜராத்தில் டிசம்பர் 9-ம் தேதி முதல்கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள 89 தொகுதிகளில் நாளை பிரசாரம் முடிவடைய உள்ளது. இரண்டாம்கட்டமாக 93 தொகுதிகளில் வரும் 14-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. குஜராத் மக்களின் தலையெழுத்து என்னவாகப் போகிறது என்பது அடுத்த ஒருவார காலத்திற்குள் முடிவாகி விடும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்