வெளியிடப்பட்ட நேரம்: 19:01 (06/12/2017)

கடைசி தொடர்பு:19:49 (06/12/2017)

”நடிகைகளைக் கிண்டலடிப்பதுதான் கலையுரிமையா?” - சினிமா மேதாவிகளுக்கு ஒரு கேள்வி

நடிகைகள்

'த்மாவதி' திரைப்படத்தை ஆதரிக்க நடத்தப்பட்ட கூட்டம் அது. ஆனால், சம்பந்தமே இல்லாமல் அதில் அமலா பால் மற்றும் தீபிகா படுகோனை கீழ்த்தரமான வார்த்தைகளில் சாடியிருக்கிறார் எடிட்டர் லெனின். நடிகைகளைப் பொதுவெளியிலும், மேடைகளிலும் அவமானப்படுத்துவது என்பது, எதிர்க்கேள்வியற்ற லைசன்ஸ்டு செயலாகிவருவதை அவர்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டுமா? 

லெனின்சமீபத்தில், ஓர்  ஆங்கிலப் பத்திரிகைக்கு நடிகை அமலா பால் அளித்த பேட்டி குறித்து, 'பத்மாவதி' திரைப்பட ஆதரவுக் கூட்ட விழா மேடையில் பேசினார் எடிட்டர் லெனின். கையில் அந்தப் பேட்டியின் நகலை வைத்தபடி மைக்கில் பேசினார். எனில், இந்தக் கூட்ட மேடையில் அமலா பாலை சாடுவதற்கு, அவர் முன்னரே திட்டமிட்டு வந்திருக்கிறார் என்று எடுத்துக்கொள்ளலாமா? அதற்கான அவசியம் என்ன? 

சம்பந்தப்பட்ட பேட்டியில், அமலா பால் 'திருட்டுப்பயலே' படத்தில் நடித்த தன் அனுபவங்களைப் பகிர்ந்திருந்தார். அதில் பாபி சிம்ஹாவுடன் நடித்த காதல் காட்சிகளைப் பற்றியும் பேசியிருந்தார். இந்தப் பேட்டி ஆபாசமாக இருக்கிறது என்று பேசினார் எடிட்டர் லெனின். 

''என் தொப்புளுக்கு ஏன் இவ்வளவு மரியாதை அப்படீனுலாம் அமலா பேசுறா'' என்று அமலா பாலை ஒருமையில் குறிப்பிடுகிறார். ''சீ... எவ்வளவு அசிங்கமா இருக்கு?'' என்று நாகரிகமற்ற வார்த்தைகளைப் பேசுகிறார். ''சீ அப்படீன்னு சொல்றேன், ஏன்னா அவ்வளவு தைரியம் இருக்கு எனக்கு. இந்த நடிகர், நடிகை பசங்கள நம்பாதீங்க'' என்கிறார். '' சிஜி(CG) -ல தொப்புளுக்குள்ள போயி...'', ''அப்பர் ஹேண்ட்னா எப்படி...'' என்றெல்லாம் எழுதக்கூடத் தரமற்ற வார்த்தைகளைப் பேசுகிறார். ''படுகோனே அவங்க அப்பனை போனு சொல்லிட்டா'' என்று தீபிகா படுகோனையும்  ஒருமையில் சாடுகிறார். கமல், ரஜினியையும் அவர் சாடினாலும், அவர்களை 'அவர்' என்றே குறிப்பிடுகிறார். 

பொதுவாக, ஒரு நடிகரைப் பேட்டி எடுப்பவர்கள், 'உங்களின்  அடுத்த இலக்கு அரசியலா?' என்று கேட்கிறார்கள். அதுவே ஒரு நடிகையிடம் கேட்கப்படும் கேள்விகள் அவரின் பெர்சனல் வாழ்க்கை அல்லது கிளாமர் பற்றியதாகவே இருக்கிறது. ஒரு நடிகை கிளாமராக நடிப்பது என்பது, கதை சார்ந்தோ அல்லது கமர்ஷியல் அம்சமாகவோ சேர்க்கப்படும். ஆக, அது அவர்களின் பணியில் ஓர் அங்கம். ஆனால், சினிமா துறையில் நடிகைகள் நிலைத்து நிற்பதற்கு அழகும் கிளாமரும் மட்டும் போதாது. அதைத் தாண்டி, நடிப்பு, நடனம், நேரந்தவறாமை, திட்டமிடுதல் என அவர்கள் தரும் உழைப்பு நம் கண்கள் அறியாதது. ஆனால், பெரும்பாலும் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையையும், அந்தரந்த விஷயங்களையும் மையப்படுத்தி பேசுவதுதான் எப்போதும் பரபரப்பைக் கிளப்புகிறது. 

சம்பந்தப்பட்ட பேட்டியில், அமலா பாலின் தொப்புள் போஸ்டரைப் பற்றி அந்த நிருபர் கேட்டதால்தானே, அவர் அதற்கான பதிலை அளித்திருப்பார்? அந்த போஸ்டரும்கூட இயக்குநரின் படைப்புச்  சார்ந்த ஒரு முடிவு. அதில் அமலா பாலின் பங்கு, அவரின் பேட்டி எல்லாம் அவருடைய பணி சார்ந்த ஒரு விஷயம். இதற்கு ஏன் இவ்வளவு அநாகரிக வார்த்தைகள் அவர் மீது பாயவேண்டும்? 'விவாகரத்தான ஒரு நடிகை அதிலிருந்து மீண்டும் வந்து, தொடர்ந்து 'ஹீரோயினா'கவே நடிப்பது என்பது பெருங்குற்றம்' என்று நினைக்கும் பொதுபுத்தியின் மௌனமும், கோபமும்கூட இங்குக் கவனிக்கப்பட வேண்டியதாகிறது. 
 
நடிகைகள்ஒரு திரைப்பட நடிகையைப் பற்றி, அதே துறையைச் சேர்ந்த ஒருவர், பொதுவெளியில் இவ்வளவு கீழ்த்தரமான வார்த்தைகளில் பேசியிருப்பது, முதல் முறையா என்ன? இந்த 'வெர்பல் அப்யூஸ்', நம் ஹீரோயின்கள் பலர் கடந்துவந்ததுதான். சில மாதங்களுக்கு முன், பிரபல இயக்குநர் டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகாவைப் பொதுமேடையில் அவர் கண்ணீர்விடும் அளவுக்கு விமர்சித்துப் பேசினார். தன்ஷிகா பேசும்போது டி.ராஜேந்தரின் பெயரைக் குறிப்பிட மறந்த 'குற்றத்துக்கு'தான் அந்த ஏளனப்பேச்சு. தன்ஷிகா காரணமில்லாமல் அவமானப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்க, அப்போது மேடையில் அமர்ந்திருந்த சக நடிகர்கள் டி.ராஜேந்தரின் பேச்சை ரசித்துச் சிரித்தார்கள். நடிகர் சங்கத் தலைவரான விஷால், பிறகு அதற்கு ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டது ஆறுதல். 

சில ஆண்டுகளுக்கு முன், நடிகை குஷ்பு ஒரு பேட்டியில், திருமணத்துக்கு முன் பாலுறவு குறித்துக்குக் கேட்கப்பட்ட கேள்விக்கு 'திருமணத்திற்குமுன் பெண்கள் பாதுக்காப்பாக பாலுறவு வைத்துக்கொள்ள வேண்டும்' என்று கூறிய கருத்துக்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. அவர் மீது 23 வழக்குகள் பதிவாயின. ஆனால், அப்போது அவர் மீது தொடுக்கப்பட்ட 'வெர்பல் அப்யூஸ்'களுக்கு எந்தக் காவல்நிலையம், நீதிமன்றத்தில் முறையிடுவது? நடிகைகளைப் பொறுத்தவரை 'டேக்கன் ஃபார் கிரான்டன்ட்' என்பதுதான் இந்தச் சமூகத்தின் மனநிலை எப்போதும். 

நடிகைகள் மட்டுமா, உச்சபட்சமாக, மக்களுக்கான பிரச்னைகளுக்காகக் களத்தில் நிற்கும் பெண் அரசியல்வாதிக்கே இந்த நிலைமைதானே நம் நாட்டில்? சமீபத்தில், நீட் பிரச்னைக்காக தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் பிரச்னையின்போது, அதைப் பற்றிப் பேசிய தோழர் பாலபாரதியை, 'அந்தப் பொம்பளைய சட்டமன்றத்தில் நான் பார்த்ததேயில்ல' என்று 'புதிய தமிழகம்' கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியதையும் பார்த்தோம்தானே? இன்னும், குடிசைத்தொழில் முதல் கார்ப்பரேட் அலுவலகங்கள்வரை, பெண்களை ஏளனப்படுத்துவது என்பதை நகைச்சுவையாகவும், ஆண் உரிமையாகவும் நினைக்கும், நம்பும் மனங்கள் இங்கு ஏராளம்.  

ஜென்டில்மென், வெரி ஸாரி! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்