ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு இங்கிலாந்து மன்னிப்புக் கேட்க வேண்டும்! லண்டன் மேயரின் குரல் | London mayor calls for UK apology over Jallianwala Bagh massacre in India

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (06/12/2017)

கடைசி தொடர்பு:21:52 (06/12/2017)

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு இங்கிலாந்து மன்னிப்புக் கேட்க வேண்டும்! லண்டன் மேயரின் குரல்

பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலாபாக்கில் நடந்த படுகொலைக்கு இங்கிலாந்து அரசு மன்னிப்புக் கோர வேண்டும் என்று லண்டன் நகர மேயர் சாதிக் கான் கருத்துத் தெரிவித்துள்ளார். 


பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இந்தியா வந்துள்ள சாதிக் கான், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோவில் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்த்தப்பட்ட பூங்கா உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றார். ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய சாதிக் கான், அந்த நிகழ்வு தொடர்பாக இங்கிலாந்து அரசு மன்னிப்புக்கோர வேண்டும் என்று கோரியுள்ளார். 

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘ஜாலியான் வாலாபாக்கில் கடந்த 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ல் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட பூங்காவுச் சென்று, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன். இந்தப் படுகொலை சம்பவத்துக்கு இங்கிலாந்து அரசு முறையான மற்றும் முழுமையான மன்னிப்பைக் கோர வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். இங்கிலாந்தில் தற்போது தெரெசா மே தலைமையிலான பழைமைவாத கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், லண்டன் மேயர் சாதிக் கானோ, எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவர். அதேநேரம், இங்கிலாந்து வெளியுறவுத் துறை சாதிக் கானின் கோரிக்கை குறித்து இதுவரை எந்தக் கருத்தும் கூறவில்லை.   

பஞ்சாப் மாநிலம் ஜாலியான் வாலாபாக்கில் ஜெனரல் டயர் தலைமையிலான ஆங்கிலேய வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சிறிய சந்துபோன்ற நுழைவுவாயில் வழியாக வெளியேற முடியாமல் கூட்டத்தில் சிக்கியும் பலர் உயிரிழந்தனர். ஜாலியன் வாலாபாக் படுகொலை என்று வரலாற்றில் பதிவானது.