Published:Updated:

மும்பை: கனமழையால் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விபத்து! - 7 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி

மீட்புப் பணி
மீட்புப் பணி

மும்பையில் பெய்த கனமழையால் குடியிருப்புக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து 11 பேர் உயிரிழந்தனர்.

மும்பையில் செவ்வாய்கிழமை இரவிலிருந்து கனமழை பெய்துவருகிறது. புதன்கிழமையும் இந்த மழை விடவில்லை. இதனால் மேற்கு மும்பையிலுள்ள மலாட் என்ற இடத்தில் நியூ கலெக்டர் காம்பவுண்டில் குடியிருப்புக் கட்டடம் ஒன்று இரவில் இடிந்து விழுந்துவிட்டது. இது குறித்து உடனே தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினரும் போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. ஏழு பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

உயிரிழந்தவர்களில் ஏழு பேர் குழந்தைகள். காலை வரை இடிபாடுகளில் யாரும் சிக்கியிருக்கிறார்களா என்று தீயணைப்புத்துறையினர் தேடிப்பார்த்தனர். இந்தக் கட்டடம் இடிந்து விழுந்தபோது அருகிலுள்ள கட்டடத்தின் மீது விழுந்ததில் அந்தக் கட்டடமும் தற்போது இடியும் நிலையில் இருக்கிறது.

மீட்புப் பணி
மீட்புப் பணி

எனவே, அதில் வசிப்பவர்கள் அந்தக் கட்டடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர். சம்பவ இடத்துக்கு மாநில அமைச்சர் அஸ்லாம் ஷேக் வந்து நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், `மழை காரணமாக கட்டடம் இடிந்து விழுந்துள்ளது’ என்றார். இடிந்து விழுந்த கட்டடம் இரண்டு மாடிகள்கொண்டது. இந்தப் பகுதியில் அதிகமானோர் சட்டவிரோதமாகக் குடிசை வீட்டின் மீது இரண்டு அல்லது மூன்று மாடிகளைக் கட்டிவிடுகின்றனர். இதனால் இது போன்று மழை நேரங்களில் இடிந்துவிடுகிறது. ஏற்கெனவே இடிந்து விழும் நிலையில் இருக்கும் கட்டடங்களிலிருந்து காலி செய்யும்படி மாநில அரசு, பொதுமக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

மும்பையில் ஒரு நாள் பெய்த கனமழைக்கே மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது குறித்து பா.ஜ.க., மாநகராட்சியைக் குற்றம்சாட்டியிருக்கிறது. ஆனால் ரயில்வே நிர்வாகம் சரியாக சாக்கடையைத் தூர்வாரவில்லை என்று மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. நேற்று மழையால் மத்திய ரயில்வேயில் புறநகர் ரயில் சேவை ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மும்பையில் இன்றும் தொடர்ந்து மழை பெய்துவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு