Published:Updated:

``பயமா இருக்கு சார்!” - 1 கோடி மதிப்புள்ள பீர் பாட்டில்களுடன் போக்கிடமின்றி தவிக்கும் 11 லாரிகள்

பீர் லாரிகள்
பீர் லாரிகள்

ரூ.1 கோடி மதிப்புள்ள பீர் பாட்டில்களுடன் தமிழகப் பகுதியி்ல் நின்றுகொண்டிருக்கும் லாரிகளை புதுச்சேரிக்குள் நுழைய அனுமதிக்காவிட்டால் அவற்றை கோவாவுக்கே திருப்பி அனுப்பிவிடுவோம் என்று எச்சரித்திருக்கிறது விழுப்புரம் காவல்துறை.

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி முதல் மே மாதம் 3-ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. மருந்தகங்கள், மளிகை மற்றும் காய்கறிக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் நேரக் கட்டுப்பாட்டுடன் திறக்கப்படுகின்றன. வேறு எந்தக் கடைகளையும் திறப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. குறிப்பாக கள் மற்றும் சாராயக்கடைகள், மதுபானக் கடைகள் திறக்கப்படாததால் மது பிரியர்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் கள்ளச்சந்தையில் மது விற்பனை களைகட்டத் தொடங்கியது. ரூ.500 விலையுள்ள மதுபாட்டிலின் விலை ரூ.5,000 வரை விற்கப்பட்டு வருகின்றது.

புதுச்சேரி
புதுச்சேரி

மதுக்கடை உரிமையாளர்கள், காவல்துறை மற்றும் கலால்துறை மூன்று தரப்பினரும் சிண்டிகேட் அமைத்து கள்ளச்சந்தையை செயல்படுத்துகிறார்கள் என்று கிளம்பிய புகாரையடுத்து, களத்தில் குதித்தார் துணைநிலை கவர்னர் கிரண் பேடி. அதையடுத்து கள்ளச்சந்தைக்கு துணைபோனதாக காவல்துறை கலால்துறை அதிகாரிகளின் அதிரடி மாற்றங்களுக்குப் பின் கள்ளச்சந்தை மது விற்பனை ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதேபோல கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்ததாக இதுவரை 89 மதுக்கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கிடையில் மது கிடைக்காததால் உஷ்ணமான மது பிரியர்கள், மதுக்கடைளை உடைத்து மதுபாட்டில்களைக் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகமாக அரங்கேறி வருகின்றன.

பீர் பாட்டில்களோடு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் லாரிகள்
பீர் பாட்டில்களோடு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் லாரிகள்

புதுச்சேரியைப் பொறுத்தவரை சில மது வகைகள் அங்கேயே உற்பத்தி செய்யப்பட்டாலும், கோவா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து அதிகமாக மது வகைகள் இறக்குமதி செய்வது வழக்கம். அதன்படி ரூ.1 கோடி மதிப்புள்ள பீர் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி கோவாவில் இருந்து புதுச்சேரியை நோக்கிக் கிளம்பிய 11 லாரிகள், மறுநாள் 25-ம் தேதி இரவு தமிழகத்தின் எல்லையான ஓசூர் பகுதியை வந்தடைந்தன. ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக லாரிகளை தமிழகத்திற்குள் அனுமதிக்க மறுத்தது கிருஷ்ணகிரி காவல்துறை.

அதனால் ஏப்ரல் 14-ம் தேதிவரை லாரிகள் அங்கேயே நின்றதால் மது ஏற்றிச் செல்வதற்கான பர்மிட் தேதி முடிவடைந்தது. அதையடுத்து புதிய பர்மிட் வாங்கிக்கொண்டு புதுச்சேரிக்குக் கிளம்பிய லாரிகள் கடந்த 18-ம் தேதி புதுச்சேரி எல்லைப் பகுதிக்கு வந்தது. ஆனால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நேரத்தில் வெளிமாநில வாகனங்களை அனுமதிக்க முடியாது என்று புதுச்சேரி போலீஸ் கைவிரித்துவிட்டது.

கிரண் பேடி
கிரண் பேடி

அதனால் வேறு வழியின்றி புதுச்சேரி எல்லையை ஒட்டியிருக்கும் தமிழகப் பகுதியில் 11 லாரிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. கவர்னர் கிரண் பேடிக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டதும், அந்த லாரிகளுக்கு தமிழக போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்று புதுச்சேரி காவல்துறை மூலம் கடிதம் அனுப்பும்படி கூறியிருக்கிறார். அதேபோல மதுக்கடைகளின் உரிமையாளருக்கும், லாரிகளின் உரிமையாளர்களுக்கும் கடிதம் அனுப்பும்படி கூறியிருக்கிறார்.

அதேசமயம் இதுகுறித்து நம்மிடம் பேசிய விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமார், ”புதுச்சேரிக்கு பொருள்களை ஏற்றிவந்த லாரிகள் அந்த மாநிலத்திற்குள்தான் இருக்க வேண்டும். லாரிகள் புதுச்சேரிக்குள் செல்லவில்லை என்றால் அந்த லாரிகள் அனைத்தும் கோவாவுக்கு திருப்பி அனுப்பப்படும்” என்றார்.

லாரி ஓட்டுநர்கள்
லாரி ஓட்டுநர்கள்

இந்நிலையில் நம்மிடம் பேசிய அந்த லாரி ஒட்டுநர்கள், “நாங்க வீட்டைவிட்டு கெளம்பி 1 மாசமாகுது. சரியா சோறு தண்ணிகூட இல்லாமல் கஷ்டப்படுறோம். ஊரடங்கு உத்தரவால பாண்டிச்சேரிக்குள்ள விட முடியாதுன்னு போலீஸ் சொல்லுது. இங்கே இருக்க முடியாதுனு தமிழக போலீஸ் சொல்லுது. நாங்க என்ன பண்றதுன்னே தெரியலை. டாஸ்மாக் கடையை உடைச்சி சரக்கை திருடுதாங்கனு எல்லா சரக்கையும் கவருமெண்டே போலீஸ் பாதுகாப்போட பத்திரமா வெச்சிருக்காவ. பாண்டிச்சேரியிலயும் பாரை உடைச்சி சரக்கை திருட ஆரம்பிச்சிட்டாவ.

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார்
விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார்

இந்த நெலமைல இவ்ளோ மதிப்புள்ள சரக்கோட எந்த பாதுகாப்பும் இல்லாம நடு ரோட்டுல உசுர கையில புடுச்சிக்கிட்டு நிக்கறோம். நைட்ல ஒருத்தர் மாத்தி ஒருத்தர் கொஞ்ச நேரம் தூங்கிட்டு லாரிகள பாத்துக்கிட்டு இருக்கோம். நைட்ல சின்னதா சத்தம் கேட்டாகூட குலை நடுங்கிப் போவுது. அதனால எங்களுக்கும் எங்க வண்டி, சரக்குக்கு பாதுகாப்பு குடுத்தா புண்ணியமா போவும்” என்று கலங்குகின்றனர்.

இதற்கிடையே, புதுச்சேரி அரசு அனுமதிக்காததால் விழுப்புரம் மாவட்ட எல்லையில் பாதுகாப்பின்றி நிற்கும் மதுபான லாரிகள் ஓட்டுநர்கள், தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

``நாங்கள் ரூ.1 கோடி மதிப்புள்ள மதுபானங்களுடன் பாதுகாப்பின்றி சாலையில் நிற்கிறோம். இரவு நேரத்தில் கத்தியுடன் மர்ம நபர்கள் எங்களை மிரட்டி மதுபானங்கள் கேட்கின்றனர். எங்கள் உயிருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதால், போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். உடனடியாக நடவடிக்கை இல்லையெனில் தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என டிரைவர்கள் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு