வெளியிடப்பட்ட நேரம்: 20:32 (06/12/2017)

கடைசி தொடர்பு:08:05 (07/12/2017)

முற்றுப்புள்ளி வைக்கப்படாமல் நீளும் பாபர் மசூதி விவகாரம்.. ஒரு பார்வை!

பாபர் மசூதி, babur masjid

டிசம்பர் 6, 1992,. 450 ஆண்டுகளுக்குமேல் பழைமையான பாபர் மசூதி இடித்துத் தகர்க்கப்பட்டது. எப்படி இந்த இடிப்பு நடந்தது? அப்போதைய மத்திய அரசு இதனைத் தடுக்காமல் என்ன செய்துகொண்டிருந்தது? சர்ச்சைக்குரிய அந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்பன போன்ற கேள்விகள் தொடர்கின்றன. தற்போது, உச்ச நீதிமன்றத்தில் பாபர் மசூதி வழக்கின் இறுதி விசாரணை தொடங்கி, அதன் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கி.பி. 1526-ம் ஆண்டு... இப்ராஹிம் லோடியை பானிபட் யுத்தக் களத்தில் வென்று பாபர் தன் ராஜ்ஜியத்தை ஏற்படுத்தினார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு மசூதியைக் கட்டும் பணியை ஆளுநர் மிர் பக்கியிடம் அவர் ஒப்படைத்தார். மிர் பக்கி, பாபர் மசூதியைக் கட்டத் தேர்ந்தெடுத்த நிலம், ராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்பும் பகுதி. ஆனால், ஆளுநர் மிர் பக்கி பாபர் மசூதியை அந்த இடத்திலேயே அமைத்துவிட்டார். அந்தப் புள்ளியில் தொடங்கியது சிக்கல். அழகிய கம்பீர வடிவத்தில் பாபர் மசூதி எழுந்து நின்றது. ஆனால், அதற்கு முன்பு அந்த இடத்திலிருந்தது என்ன? ராமர் கோவில் என்கிறது இந்துக்கள் தரப்பு. ராமர்கோயில் இல்லை; வேறு ஏதேனும் கட்டடமாகக்கூட இருந்திருக்கலாம் என்கிறது முஸ்லிம் தரப்பு. ‘எங்களின் ராமர் கோவிலை அழித்துவிட்டு ஒரு மசூதியா, அதுவும் ராம ஜென்மபூமியில்?’ இந்தக் கோபத்துக்கும் பாபர் மசூதியின் அதே வயதுதான். ஆனால், இந்தக் கோபத்தை வெறியாக மாற்றியதிலும், பாபர் மசூதி இடிப்பு நடவடிக்கையை முடித்துக் காட்டியதிலும் சில அமைப்புகளுக்கு முழுமையான பங்கிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

babri masjid, பாபர் மசூதி

இந்த வெறுப்பும், சிக்கலும் ஏதோ 1990-ம் ஆண்டுவாக்கில் உருவானது அல்ல. பிரிட்டிஷ் இந்தியாவிலேயே இந்தச் சிக்கல் எழுந்து நீதிமன்றத்துக்குச் சென்றுவிட்டது. 1853-ல் நிர்மோஹி அகாரா முதன்முதலில் இந்தச் சிக்கலுக்கு வடிவம் கொடுத்தது. தொடர்ந்து வன்முறை வெடிக்க, அப்போதைய அரசு 'சர்ச்சைக்குரிய நிலத்தில் கோயில் கட்டவோ, அந்த இடத்தை வழிபாட்டுத் தலமாகப் பயன்படுத்தவோ கூடாது' எனத் தடை விதித்தது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு, வன்முறையைத் தவிர்க்க ஒரு மதில் சுவர் எழுப்பப்பட்டது, ஒரு பாதி இந்துக்களுக்கும் மற்றொரு பாதி முஸ்லிம்களுக்கும் எனப் பிரித்துக் கொடுக்கப்பட்டது. 1883-ல் இந்துக்கள் தங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கோவில் கட்ட முனைந்தார்கள். இதனை இஸ்லாமியர்கள் எதிர்க்க, அப்போதைய துணை ஆணையர் கோயில் கட்டுவதற்குத் தடை விதித்தார். தொடர்ந்து ரகுபர் தாஸ் என்னும் இந்து சாது ஒருவர், 1885-ல் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்ய, பல மேல்முறையீடுகளுக்குப் பிறகு வந்த தீர்ப்பு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. ‘இந்துக்களின் புராதன நம்பிக்கையைக் காயப்படுத்தி அவ்விடத்தில் மசூதியைக் கட்டியது தவறு என்றாலும், காலம் கடந்த பிறகு இப்போது அதற்கான தீர்வைத் தேடுவது முறையல்ல’ என்கிறது அந்தத் தீர்ப்பு.

தொடர்ந்து சின்னச்சின்ன பிரச்னைகள் அவ்வப்போது தொடர்ந்தாலும் 1943-ல், அயோத்தியில் பெரும் வன்முறை ஏற்பட்டு, அதில் மசூதியின் வெளி மதில் சுவரும், ஒரு குவிமாடமும் சேதப்படுத்தப்பட்டது. அவற்றை பிரிட்டிஷ் அரசு திரும்பக் கட்டித் தந்தது குறிப்பிடத்தக்கது. 1949 டிசம்பர் 23 நள்ளிரவில், இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர், மசூதிக்குள் நுழைந்து ராமர் - சீதை சிலைகளை வைத்தனர். காலையில், பலர் கூட்டம்கூட்டமாக அந்தச் சிலைகளைப் பார்க்கக் கிளம்பி வர, அரசு மசூதியின் கதவை இழுத்து அடைத்தது. அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு சொன்னதற்கேற்ப விக்கிரகங்களை வெளியே எடுக்கச் சொல்லி உத்தரப் பிரதேச உள்துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி ஆணை பிறப்பித்தார். ஆனாலும், ஃபைசாபாத் துணை ஆணையர் கே.கே.நாயர், ‘விக்கிரகங்களை வெளியே எடுத்தால் இந்துக்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்’ எனக் கூறி இந்த நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தொடர்ந்து நிர்மோஹி அகாராவும், சன்னி வக்ஃப் வாரியமும் ஃபைசாபாத் நீதிமன்றத்தில் மசூதியை உரிமை கொண்டாடி வழக்குப் பதிவு செய்தன.

பாபர் மசூதி, babri masjid

இந்தக் காலகட்டங்களில் ஆர்.எஸ்.எஸ், பாரதிய ஜன சங்கத்தைத் தோற்றுவித்தது. ஃபைசாபாத் துணை ஆணையராக இருந்த கே.கே.நாயர், பாரதிய ஜன சங்கத்தில் இணைந்தார். ராமஜென்ம பூமியில் வழிபாடுகள் மறுக்கப்பட்டதை இந்துக்கள் தங்கள் பிறப்புரிமை மறுக்கப்பட்டதாகவே எடுத்துக்கொண்டனர். ‘தங்களின் பூமியில் ஒரு இஸ்லாமிய மசூதி நிறுவப்பட்டிருக்கிறது’ என்ற எண்ணம் வலுவானது. 1980-ல் ஜனதாக் கட்சி உடைந்து பாரதிய ஜனதா கட்சி உருவானது. அதே காலகட்டத்தில் அயோத்தி குறித்த சர்ச்சைகள் தேசிய அளவில் மிகப்பெரும் வன்முறையாக வெடிப்பதற்கான எல்லா அறிகுறிகளும் தென்படத் தொடங்கின. இதற்கிடையில், சில விவகாரங்களால் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, பாபர் மசூதியின் கதவுகளைத் திறந்துவிட முடிவெடுத்தார்.

இதற்கு நடுவில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு ராமஜென்ம பூமிகுறித்து மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்த 1984-ல் ரத யாத்திரைகளைத் தொடங்கின. இதன் பின்புதான் ராஜீவ் காந்தி, பாபர் மசூதியின் கதவுகளைத் திறக்க ஆணை பிறப்பித்தார். நாடெங்கிலுமிருந்து செங்கற்கள் எடுத்துவரப்பட்டு, ராமர் ஆலயத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா நடத்தப்பட்டது. இரு தரப்பினரிடையேயும் சலசலப்பு உண்டாகத் தொடங்கியது. 1991-ல் உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பி.ஜே.பி வெற்றிபெற்று கல்யாண் சிங் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். 1992 டிசம்பர் 6 அன்று பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும் பாபர் மசூதி முன்பு பூஜைகள் செய்வதற்காகக் குழுமினர். இதற்கு முன்பே வன்முறைகளைத் தவிர்க்கவேண்டி, சுமார் 20,000 ராணுவ வீரர்களை அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் அரசு அயோத்தியைச் சுற்றி நிறுத்தியிருந்தது. ஆனாலும், அவர்களுக்குப் படையை உபயோகப்படுத்தக் கூடாது எனக் கட்டளை விடுக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில்தான், ஒருவர் குவிமாடத்தில் ஏறி உடைக்கத் தொடங்க, சரிந்தது 450 ஆண்டுகள் பழைமையான பாபர் மசூதி. இந்து அமைப்புகள் ‘மசூதி உடைக்கப்பட மாட்டாது’ என நரசிம்மராவுக்கு அளித்திருந்த உறுதியும் தகர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடந்த வன்முறைகளால் சூறையாடப்பட்ட உயிர்களின் எண்ணிக்கை 2000-க்கும் அதிகம். பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய  நாடுகளிலும் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்தன. அப்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, ஐக்கிய நாடுகள் அமைப்பு வரை சென்று பாகிஸ்தானில் உள்ள இந்துக்களைக் காக்க வலியுறுத்தியது. 

இன்று, பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. 1992-க்குப் பிறகு பி.ஜே.பி. உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இன்றுவரை ராமஜென்ம பூமி சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. முற்றுப்புள்ளி வைக்கப்படாமல் பல நூறு வருடங்களாக இந்த வேற்றுமை தொடர்கிறது.