வெளியிடப்பட்ட நேரம்: 11:55 (08/12/2017)

கடைசி தொடர்பு:11:55 (08/12/2017)

“நாப்கின் விழிப்புஉணர்வு இருக்கட்டும்... முதலில் விஸ்பர் என்ற பெயரை மாற்றுங்கள்!” - கொதிக்கும் பெண்கள் #UnWhisper

ஷ்ரேயா குப்தா - தாரா நாப்கின்

“2017 முடிந்து 2018 புத்தாண்டு இன்னும் சில நாள்களில் பிறக்கப்போகிறது. ஆனால், 'மாதவிடாய்' என்கிற வார்த்தை இன்றும் மிரட்சியாகவே பார்க்கப்படுகிறது. மாதவிடாய் குறித்த சரியான ஒரு விவாதமே இங்கில்லை'' என்கிற ஷ்ரேயாவும் தாராவும் இணைந்து change.org இணையதளத்தில் ‘Whisper’ (ரகசியம்) என்ற பெயரை, ‘Roar’ (கர்ஜனை) என்று மாற்றும்படி, ஒரு பெட்டிஷன் போட்டிருப்பது, சமூக வலைதளங்களில் ஒரு சிறிய அளவிலான விவாதத்தைத் தொடங்கியிருக்கிறது. மேலும், யூடியூபில் இது குறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்கள். 

ஷ்ரேயா நாப்கின்“விஸ்பர் நிறுவனம் உண்மையாகவே, மாதவிடாய் குறித்த விவாதத்தை ஏற்படுத்த விளம்பரங்கள் வழியே முயற்சி செய்கிறார்கள். அதுகுறித்த விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளையும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்கள். ஆனால், அதுபோன்ற விளம்பரங்களைப் பார்க்காதவர்களும் விஸ்பர் என்ற பெயரினை தெரிந்துவைத்திருப்பார்கள். எம்பவரிங்காக விளம்பரங்களை விஸ்பர் வெளியிடுவதைத் தாண்டி, அதன் பெயர்தான் அதிக அளவில் கவனம் பெற்றுள்ளது. எனவேதான் அதன் பெயரை மாற்ற வேண்டும் என்கிறோம். 'விஸ்பர்' என்பது, உலகம் முழுவதும் நாப்கின்களையும் இன்னும் சில பொருள்களையும் விற்கும் நிறுவனம். எனவே, அது இன்னும் பெரிய அளவிலான விவாதத்தை உருவாக்கும் என்பதால் இப்படிச் செய்தோம். விஸ்பர் நாப்கின்கள் சில நாடுகளில் ‘ஆல்வேஸ்’ என்றும், சில நாடுகளில் ‘விஸ்பர்’ என்றும் வெளியாகிறது. நம் பெண்கள் எப்போதுமே மாதவிடாய் காலத்தில் இருக்கிறோம் என்கிற உண்மையை மறைக்க முயன்றுகொண்டே இருப்பார்கள். மாதவிடாய் என்பது, இயற்கையான விஷயம் என்பதை நம் வீட்டுச் சட்டங்களும் மறுத்துவிடுகின்றன. மாதவிடாய் காலத்தில் பெண்களைத் தீண்டத்தகாதவர்களாகவே நடத்துகிறார்கள்” என்று ஆதங்கப்படுகிறார் தாரா. 

“நம் நாட்டில் இன்னும் நிறைய இடங்களுக்கு நாப்கின் சென்றடையவில்லை. அந்தப் பெண்கள் இன்றும் துணியைத்தான் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு நாப்கின்களைக் கொண்டுசேர்க்கும் வேலையைச் சமூக ஆர்வலர்கள் செய்துவருகிறார்கள். நாப்கின்களை மக்கவைத்தல், டிஸ்போஸ் செய்தல் என்பதில் உள்ள சுற்றுச்சூழல் பிரச்னையையும் மறுக்கவில்லை. அது இன்னொரு பெரிய விவாதம். தற்போது நாப்கின்களுக்கு பதிலாக, மென்ஸ்ட்ரூவல் கப்ஸ் சந்தையில் வரத் தொடங்கியுள்ளன. அதுபற்றி எல்லாம் பேச முதலில் ஒரு விவாதத்தினை தொடங்க வேண்டும்” என்கிறார் ஷ்ரேயா. தாரா - நாப்கின்

“என் அலுவலகத்தின் ஒரு குறும்படத்துக்காக வாங்கிய நாப்கின்கள் என் பையில் இருந்தன. அதனைப் பார்த்த ஓர் அக்கா, என் பையை கீழேவைத்து, துப்பட்டாவால் பையை மூடினார். 'ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?' எனக் கேட்க, 'இங்கே நிறைய ஆண்கள் இருக்கிறார்கள்' என்றார். மாதவிடாய் சமயத்தில் அவர் வீட்டில் மதம் சார்ந்த விஷயங்களில் அவர் பங்கெடுக்க தடுக்கப்படுவதையும் பகிர்ந்தார். நான் அவரிடம் மாதவிடாய் குறித்த விஷயங்களை விளக்கினேன். இப்படி ஒவ்வொருவரும் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும்” என்கிறார் தாரா.

“நாப்கினுடைய உற்பத்தி செலவு அதிகமாக இருக்கிறது என்றாலும், நாட்டின் சரிபாதியான பெண்களின் நலனைக் கருத்தில் நிறுத்தி, நாப்கினுக்கான வரிச்சலுகையை அரசு அளிக்க வேண்டும். அப்போதுதான் இதுகுறித்த புரிதல் அனைத்துப் பெண்களுக்கும் சென்று சேரும்” என்கிறார்கள் இருவரும்.

இங்கே சில ஆண்களுக்கு மாதவிடாய் குறித்த புரிதல் இருந்தாலும், இன்னும் அது பரவலாக்கப்பட வேண்டும். பெண்களுடன் ஆண்களுடன் சேர்ந்துதான் இந்த ‘ரகசியங்களை’ உடைக்க முடியும்.


டிரெண்டிங் @ விகடன்