Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உம்பத்தாவ்... மேகாலயா மலைக்கிராமமும் மேரி டீச்சரும்..!

மேகாலயா

உம்பத்தாவ். மேகாலயா மாநிலத்திலிருக்கும் சின்னஞ்சிறிய கிராமம். மலைக்கிராமம். தலைநகரம் ஷில்லாங்கிலிருந்து 3 மணி நேரத்துக்கும் மேலாக பல மலைகளைக் கடந்து, நெடுஞ்சாலைகளில் ஊர்ந்துதான் உம்பத்தாவுக்குப் போக முடியும். வழியில் பல இடங்களில் சாலை சிம்ரனின் இடுப்பளவுக்கே இருக்கும். நின்று, நிதானமாக எதிரில் யாரும் வரவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டே பயணம் தொடர்ந்தாக வேண்டும். இந்தியாவுக்கு மேகலாயா போன்ற வடகிழக்கு மாநிலங்கள் எப்படியோ, அப்படி மேகாலயாவுக்கு உம்பத்தாவ் போன்ற கிராமங்கள். அரசின் பார்வையில் படாத மூலையில் முடங்கிக்கிடக்கும்.

உம்பத்தாவுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மொத்தமே 300 வீடுகள்தான். நினைத்தால் மழைபொழியும். ஆனால், ஊர்மக்கள் குடிதண்ணீருக்காக பல கிலோமீட்டர்கள் நடக்கிறார்கள். அந்த மலையின் அமைப்பு அப்படி. விவசாயம் செய்கிறார்கள். கால்நடைகள் வளர்க்கிறார்கள். வேறு என்ன செய்வார்கள் என நினைத்துக்கொண்டே ஒவ்வொரு தெருவாக கடந்து வந்தபோதுதான் அந்தப் பள்ளிக்கூடம் என் கண்ணில்பட்டது. HDFC வங்கி இந்த ஊருக்காக தனது CSR நிதியிலிருந்து சில உதவிகளை செய்திருக்கிறது. அதற்காக வைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகை மூலம்தான் அது பள்ளி என்பதே தெரிந்தது. அந்தப் பள்ளியும் அதனால் உதவிபெற்றிருக்கிறது. 
உள்ளே சென்று, ஓர் ஆசிரியையிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டேன். “ங்ஞணயழநமணங்” இப்படி ஏதோ சொல்லிவிட்டு சென்றுவிட்டார். மேகாலயா மக்களில் பெரும்பாலானோர் பேசும் மொழியின் பெயர் காசி. அது இப்படித்தான். அந்த மொழியில் மெல்லினமும் இடையினமும் மட்டும்தானோ என எண்ண வைக்கும் அளவுக்கு மென்மையானது. சில நிமிடங்களில் இன்னொரு ஆசிரியை வந்தார். அவர் பெயர் மேரி.

"How can i help you?"

சுத்தமான உச்சரிப்பு. தெளிவான ஆங்கிலம். அவர் அந்த கிராம மக்களிடமிருந்து வித்தியாசமாக தெரிந்தார். என்னை அறிமுகம் செய்துகொண்டு அந்தப் பள்ளியைப் பற்றி கேட்டேன். அவருக்கு ஆச்சர்யம். முகம் நிறைந்த சந்தோஷத்துடன் இன்னொரு அறைக்கு அழைத்துச் சென்றார். அது ஸ்மார்ட் கிளாஸ் ரூம். HDFC வங்கி அமைத்து தந்திருக்கிறார்கள்.

“இங்கிருக்கும் பல கிராமங்களுக்கும் இதுதான் ஒரே பள்ளி. இந்த மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் பல சிரமங்கள் இருந்தன. சொற்களால் எடுத்துச் சொல்வதை விட விஷுவலாக காட்டுவது அவர்களுக்கு எளிதில் புரிகிறது. எங்களுக்கும் வேலை எளிதாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. அதனால், விரைவில் பாடங்களை முடித்துவிட்டு மற்ற விஷயங்களைச் சொல்லித்தர நேரம் கிடைக்கிறது” என்றவர் அடுத்த அறைக்கு அழைத்துச் சென்றார். 

டீச்சர் மேரி

சுவர் முழுக்க மாணவர்கள் கையால் எழுதிய பாடங்கள். ”சுவரில் கிறுக்காதே” என்பதுதானே பள்ளியிலும் வீட்டிலும் நம் குழந்தைகளுக்கு இடப்படும் முதல் கட்டளை? அங்கே, மாணவர்கள் நான்கு சுவர்களிலும் எழுதி வைத்திருக்கிறார்கள். உண்மையில் எனக்கு அதுதான் ஸ்மார்ட் க்ளாஸ் ரூமாக தெரிந்தது. மேரி எனக்கு வித்தியாசமாக தெரிந்தார். அந்தப் பள்ளி இயங்கும் முறையே ஆச்சர்யமாக இருந்தது. அத்தனை மாற்றத்துக்கும் மேரிதான் காரணமாக இருந்திருக்கிறார். அவரைப் பற்றிக் கேட்டேன்.

”என் பூர்வீகம் அருகிலிருக்கும் கிராமம்தான். ஆனால், நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஷில்லாங்கில். எனக்கு கிடைத்த கல்வியும் மற்ற வசதிகளும் என்னை ஷில்லாங்கிலிருந்து டெல்லிக்குகூட எடுத்துச்சென்றிருக்கும். ஆனால், எனக்கு என் கிராம மக்களும் என்னுடனே முன்னேற வேண்டும் என ஆசை. அதற்கு ஒரே வழி கல்விதான். நாட்டின் மற்ற பகுதியிலிருக்கும் எந்தவொரு குழந்தைக்கும் கிடைக்கும் அதே தரமான கல்வி, என் மக்களுக்கும் கிடைக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். அதனால்தான் நான் இந்தக் கிராமத்துக்கே இடம் பெயர்ந்துவிட்டேன். இந்த மக்களுக்கு கல்வியைத் தருவதுதான் இனி என் ஒரே நோக்கம்” என முடித்தார் மேரி.

நாட்டின் வளர்ச்சிக்கும், தரமான கல்விக்கும் ஸ்மார்ட் க்ளாஸ் ரூம்கள் உதவலாம். ஆனால், நிஜமான வளர்ச்சிக்கு அவை மட்டுமே போதாது. மேரிக்களும் தேவை. மேரிக்கள் தான் தேவை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ