வெளியிடப்பட்ட நேரம்: 09:35 (08/12/2017)

கடைசி தொடர்பு:09:35 (08/12/2017)

மணிசங்கர் ஐயர் நீக்கம் திட்டமிட்ட விளையாட்டே! ஜெட்லி பதிலடி

பிரதமர் மோடியைத் தரம்தாழ்ந்து விமர்சித்த மணிசங்கர் ஐயரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. 

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியைப் பெயர் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்திருந்தார். இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர், ‘பிரதமர் மோடி ஒரு இழிவான மனிதர். அவருக்கு மரியாதை தெரியாது’ என்று பேசியிருந்தார். குஜராத் தேர்தல் நாளை தொடங்க இருக்கும்நிலையில், மணிசங்கர் ஐயரின் இந்த விமர்சனம் தேசிய அளவில் புயலைக் கிளப்பியது. இந்த விவகாரம்குறித்து மணிசங்கர் ஐயர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியே கூறினார். இதையடுத்து, தனது கருத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும், அதற்காக மன்னிப்புக் கேட்பதாகவும் மணிசங்கர் ஐயர் பின்வாங்கினார். இருப்பினும், அவரைக் கட்சியின் அடிப்படைஉறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து நீக்கியதாக காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அறிவித்து, இதுதொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பியுள்ளது. 

இந்தவிவகாரம் குறித்து பா.ஜ.க. தலைவர்கள் பலரும் மணிசங்கர் ஐயருக்குக் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட விவகாரம்குறித்து கருத்துத் தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான அருண் ஜெட்லி, ’பிரதமர் மோடி மீதான மணிசங்கர் ஐயரின் விமர்சனம் சாதியரீதியிலானது. இதுதொடர்பாக மன்னிப்பு கேட்பது, பின்னர் அவரைக் கட்சியில் இருந்து திட்டமிட்டே நீக்குவது என இந்த விளையாட்டை மக்கள் இப்படித்தான் பார்க்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.