வெளியிடப்பட்ட நேரம்: 10:06 (11/12/2017)

கடைசி தொடர்பு:10:52 (11/12/2017)

“கெளரி லங்கேஷுக்கு சாவில்லை!” - ஆவணப்படம் சொல்லும் உண்மை #GauriLankesh

                                                                                                                                                          

“ஒன்றல்ல, இரண்டல்ல... கெளரியின் உடலில் பாய்ந்த ஏழு குண்டுகள் நம் இதயங்களையும் துளைத்தன” - என்னும் கன்னடமொழிப் பாடலில் தொடங்குகிறது நம் கெளரி (Our Gauri) ஆவணப்படம்.

கெளரி லங்கேஷ் Gauri Lankesh

மூத்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் பெங்களூரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் கேள்விக்குறியாக்கியது. எளிய மக்களின் உரிமைகள், இந்துத்துவ அரசியலால் நிகழ்த்தப்படும் கொடுமைகள், வன்முறைகள் எனப் பல்வேறு தளங்களில் மிகத்தீவிரமாக இயங்கியவர் கெளரி லங்கேஷ். 

பெடஸ்ட்ரியன் பிக்சர்ஸ் (Pedestrian Pictures) தயாரிப்பில், ப்ரதீப் தீபு இயக்கிய `நம் கெளரி’ (Our Gauri) ஆவணப்படம் பனுவல் புத்தக நிலையத்தில் திரையிடப்பட்டது. பத்திரிகையாளர் கெளரி லங்கேஷின் அரசியல் சித்தாந்தங்கள், எளிய மக்களுடனான இணக்கம், அசாத்திய துணிச்சல், தனிமனித சுபாவம் என அவரது பல முகங்களை 67 நிமிடங்களில் ஆவணப்படுத்தியிருக்கிறார் ப்ரதீப் தீபு. அக்டோபர் மாதம் வெளியான இந்த ஆவணப்படம், தற்போது யூடியூபில் வெளியிடப்பட்டிருந்தாலும், நாடு முழுவதும் பொது இடங்களில் திரையிடல் நிகழ்வுகளும், அதைத் தொடர்ந்த உரையாடல்களும் தொடர்ந்து நடத்தப்பட்டுவருகின்றன.

Pradeep dipu“கெளரி லங்கேஷ் எளிய மக்களுக்கு நெருக்கமானவர். இந்துத்வ அரசியலுக்கு எதிரான தீவிர செயற்பாட்டாளர். பாபாபுடன்கிரி என்னும் 400 வருட பழைமை வாய்ந்த மலைகிராம தர்காவை, தத்தாத்ரேயர் கோயில் எனக் கூறி மதப் பிரச்னையை சில இந்து மதவாத சக்திகள் உருவாக்கின. 2003-ல், பாபாபுடன்கிரி தர்கா காவிமயமாக்கப்படுவதை எதிர்த்து, சிக்மகளூரில் நடந்த போராட்டங்களில்தான் கெளரியை முதன்முதலாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கெளரி கொலை செய்யப்பட்ட பிறகு அவரைக் குறித்து அறிந்துகொண்டவர்கள் ஏராளம். இந்த ஆவணப்படம் என் தனிப்பட்ட அஞ்சலி மட்டுமல்ல, அவரது அரசியல் தெளிவையும், சமூக நல்லிணக்கத்துக்கு ஆதரவான அவரது தீராத உழைப்பையும் ஆவணப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முயற்சி. வலதுசாரி இயக்கங்களுக்கு எதிராக, அமைதியை விரும்புவர்கள் கொண்டாடிய கெளரி லங்கேஷின் வாழ்க்கையை ஆவணப்படுத்தியிருக்கிறோம். கௌரியைப் பற்றிய ஆவணப்படத்தை யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் திரையிட்டுக்கொள்ளலாம் என்றும், திரையிடலுக்கு தான் வரமுடியாவிட்டாலும், நிச்சயம் பெங்களூரிலிருந்து யாராவது வந்து கலந்துகொள்வார்கள்.” - கெளரி லங்கேஷின் பொது வாழ்வை ஆவணப்படுத்திய முயற்சியைக் குறித்துக்கேட்டபோது, இப்படித் தெரிவித்தார் கெளரி லங்கேஷின் நண்பரும், ஆவணப்பட இயக்குநருமான ப்ரதீப் தீபு.

மதவெறியர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், எளிய மக்களுக்கும், நல்லிணக்கத்தை விரும்பிய தோழர்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனியவராகவும் விளங்கிய கெளரியின் இறுதி மரியாதை காட்சிகளுடன் தொடங்கியிருக்கிறார் இயக்குநர். ஆவணப்படம் முழுவதும், கெளரியுடன் இணைந்தே செயல்பட்ட பல தளங்களைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களின் பேட்டியையும், கெளரியைக்குறித்து அவரது குடும்பத்தினரின், சக ஊழியர்களின் நிலைப்பாட்டை, கெளரி மீதான அன்பைப் பதிவு செய்திருக்கிறார் தீபு.

கௌரி லங்கெஷின் பதினைந்து ஆண்டுகால நண்பரும் சக பத்திரிகையாளருமான சிவசுந்தர், “கௌரி 2002-ம் ஆண்டு வரை ஆங்கிலப் பத்திரிகையில் பணியாற்றி வந்தார். அந்தச் சமயம் அவரது Shivasundar gaurilankeshதந்தை பத்திரிகையாளர் லங்கேஷ் இறந்தபோதுதான் ‘லங்கேஷ் பத்ரிகே’வை நடத்துவதற்காக தன் தந்தையின் சிறு பத்திரிகையில் தன் பணியைத் தொடர்ந்தார். லங்கேஷின் அதே வேகம் கெளரியிடமும் இருந்தது. ஆங்கிலப் பத்திரிகையாளரான அவர், கன்னடப் பத்திரிகையைத் தொடங்கிய மிகச் சிறு காலத்துக்குள் கன்னட மொழியில் சிந்திக்க, கன்னட மொழியில் உணர்வுகளை, நிகழ்வுகளை தெளிவாக கடத்துவதற்குக் கற்றுக்கொண்டார். கெளரியை நினைக்கும்போதெல்லாம் `வெறுக்கவேண்டியவற்றை வெறுக்க வேண்டிய அளவுக்கு வெறுக்கவில்லை என்றால், விரும்பவேண்டிய அன்பான ஒன்றை, உங்களால் விரும்பவோ, அன்புசெலுத்தவோ முடியாது’ என்னும்  பாப்லோ நெருதாவின் வார்த்தைகள்தான் நினைவுக்கு வரும். சாதி அமைப்பை தீவிரமாக வெறுக்கவில்லையென்றால்,  எளிய மக்களுடன் நம்மால் இணக்கமாக இருக்கமுடியாது. ஆணாதிக்கத்தின் வேரை என்னால் பார்க்க முடியவில்லையென்றால், ஒரு பெண் அனுபவிக்கும் அவமதிப்பையும், துயரையும் என்னால் உணர முடியாது. மதவெறியின் மீது கெளரிக்கு இருந்த வெறுப்புக்குப் பின்னால், மக்களின் மீதான பேரன்பு இருந்தது. சிலர் அதைத்தான் உணரவில்லை. கெளரி சாகவில்லை. ஏனெனில், கெளரி சாகாமல் இருப்பதால்தான், இந்த உலகம் வாழ்கிறது” என்று கண்ணீரைத் துடைத்தபடி அவர் பேசியது ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.

“அவர்களின் பாகவத புராணத்தில், `இறந்தவர்கள் உங்கள் எதிரியாக இருந்தாலும் அவர்களை அவமதிக்காதீர்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், கெளரி இறந்த சில நிமிடங்களில் சிலர் அதைக் கொண்டாடினார்கள்.  விஷ்வனி டெய்லி என்னும் பத்திரிகையின் ஆசிரியர், நக்சல் ஆதரவாளர் கொல்லப்பட்டார் என்று ட்விட்டர் பக்கத்தில் மரணச்செய்தியை எழுதிவிட்டு, அடுத்தநாள் அவர் நடத்தும் பத்திரிகையில், இடதுசாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார் கெளரி என்று செய்தி வெளியிட்டார். முதல்நாள் நக்சல் ஆதரவாளர். அடுத்த நாள் அவர்களாலே சுட்டுக்கொல்லப்பட்டாரா? ஊடகங்கள் அவர்களது பொய்களை அவர்களே எழுதிக்கொண்டார்கள். `நக்சல் எழுத்தாளர்’ என்றும், `சிட்டி நக்சலைட்’ என்றும் சில ஊடகவியலாளர்களாலேயே குற்றம் சாட்டப்பட்டார்.” - லங்கேஷ் பத்ரிகேவிலும், கர்நாடக ஜனசக்தியிலும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதும் பத்திரிகையாளர், ஹெச்.வி வாசு இதைத் தெரிவித்திருக்கிறார்.  

                                                                                                                 கெளரி லங்கேஷ்                                    

ஹூப்ளி இத்கா மைதான வழக்கில், அன்றைய மத்தியப் பிரதேச முதல்வர் உமா பாரதியின் மீது கெளரி பதிந்த வழக்கு, எடியூரப்பா கர்நாடக முதல்வராக இருந்தபோது, இந்து குழுக்களால் தாக்கப்பட்ட 25 தேவாலயங்களைச் சேர்ந்தவர்களுக்காக அவர் போராடிய விதம், நக்சலிசத்தை ஏற்காவிடிலும், அவர்களைப் புரிந்துகொள்ள கெளரி எடுத்துக்கொண்ட முயற்சி, நாடு முழுவதும் எழுச்சி பெற்ற இளைஞர் போராட்டங்களுக்கான அவரது ஆதரவு, குறிப்பாக கன்ஹையா குமார், உமர் காலித், ஜிக்னேஷ் மேவானி போன்றோரிடம் அவருக்கிருந்த தோழமையும், அவர்களைக் தன் குழந்தைகளாக பாவித்த நேசம் என கெளரி லங்கேஷின் பொதுவாழ்வைக் குறித்த சீரான சித்திரத்தை பதிவாக்கியிருக்கிறார் தீபு. கெளரியின் இளமைக்காலம், பத்திரிகையாளராக அவர் தன்னை வளர்த்துக்கொண்ட விதம், கெளரியின் பண்பு எத்தகையது என்பதை விவரித்திருக்கிறார் கெளரி லங்கேஷின் தங்கை கவிதா லங்கேஷ். கெளரியின் இழப்பால் துயருறும் குடும்பத்தினர், செயற்பாட்டாளர்கள் என பலரது குரல்களின் மூலம், கெளரியை வெளிக்காட்டியிருக்கிறார் இயக்குநர் ப்ரதீப் தீபு.

பத்திரிகையாளர் சிவசுந்தர் கூறியதைப்போல், கெளரி லங்கேஷைப் போன்றவர்கள் சாகாமல் இருப்பதால்தான் உலகம் வாழ்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்