அமெரிக்காவில் ஹைதராபாத் மாணவர் மீது துப்பாக்கிச்சூடு!

அமெரிக்காவின் சிகாகோ நகரில், ஹைதராபாத் மாணவர்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், அவர் படுகாயமடைந்தார். 


தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் மீர்பேட் பகுதியைச் சேர்ந்த முகமது அக்பர் என்பவர், சிகாகோவில் உள்ள டீவ்ரி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு பயின்றுவருகிறார். கடந்த மூன்று வருடங்களாக சிகாகோவில் இருக்கும் அவர், விப்பிள் தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்துவருகிறார். இந்த நிலையில், தனது குடியிருப்புக்கு அருகில் உள்ள அல்பேனி பார்க் பகுதியில் கார் பார்க்கிங்கிற்குச் சென்றுள்ளார். காரை நிறுத்துவது தொடர்பாக அக்பருடன், அடையாளம் தெரியாத நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியநிலையில், அக்பரை அந்த அடையாளம் தெரியாத நபர் சுட்டதாகத் தெரிகிறது.  படுகாயமடைந்த அக்பர், அங்குள்ள மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்துப் பேசிய அவரது தந்தை முகமது யூசுப், ‘கார் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த காரை நோக்கிச் சென்றபோது, எனது மகன் அந்நாட்டு நேரப்படி காலை 8.45 மணிக்கு சுடப்பட்டிருக்கிறார். மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவரைப் பார்க்க அமெரிக்கா செல்ல வேண்டும். இதற்காக தெலங்கானா அரசு மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரிடம் உதவி கேட்டிருக்கிறோம்’ என்றார். துப்பாக்கிக் குண்டால் அவரது வலது தாடை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், உடனடியாக இரண்டு அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அக்பரின் சகோதரர்கள் தெரிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!