“நான் சானிட்டரி நாப்கின் யூஸ் பண்ண மாட்டேன். நீங்க..?!” ஐ.நா நல்லெண்ண தூதர் தியா மிர்சா | I don't use sanitary napkins on my periods: Actress Dia Mirza speaks at UN meet

வெளியிடப்பட்ட நேரம்: 13:26 (11/12/2017)

கடைசி தொடர்பு:14:13 (11/12/2017)

“நான் சானிட்டரி நாப்கின் யூஸ் பண்ண மாட்டேன். நீங்க..?!” ஐ.நா நல்லெண்ண தூதர் தியா மிர்சா

தியா மிர்சா


மீபத்தில், ஐக்கிய நாடுகள் சபையில், இந்தியாவின் சுற்றுச்சுழலுக்கான நல்லெண்ணத் தூதராக பாலிவுட் நடிகை தியா மிர்சா பதவியேற்றிருக்கிறார். கென்யாவின் தலைநகரமான நைரோபியில், ஐக்கிய நாடுகள் சபையின் மூன்றாம் சுற்றுச்சுழல் மாநாடு நடந்தது. இதில் 193 நாடுகள் கலந்துகொண்டன. சுற்றுச்சுழல் தொடர்பாகவும், திடக்கழிவு மேலாண்மை, மறுசுழற்சி, மறுசீரமைப்பு தொடர்பாகவும் பல தீர்மானங்கள்  எடுக்கப்பட்டன.

நிகழ்வில் பேசிய தியா மிர்சா, “மறுசுழற்சிக்கு எதிரான சானிட்டரி நாப்கின்கள் நம்  நாட்டின் சுற்றுச்சுழலைப் பாதிக்கின்றன. அதனால்தான், நான் மாதவிடாய் காலத்தில் சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன். ஒரு நடிகையாக நான் இதைக் கூறுவது கவனத்துக்குரிய விஷயம். ஏனென்றால், பல சானிட்டரி நாப்கின் நிறுவனங்கள் அவர்களின் விளம்பரங்களில் நடிக்க என்னை அணுகினார்கள். ஆனால், நான் அந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டேன்” என்று தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், “பெண்கள் சானிட்டரி நாப்கினுக்குப் பதிலாக, சுற்றுச்சுழலைப் பாதிக்காத, மக்கும் தன்மைகொண்ட நாப்கின்களை (biodegradable napkins) பயன்படுத்தவேண்டும். நான் அதைத்தான் செய்கிறேன். நம் நாட்டில் நீண்டகாலமாக பெண்கள் மாதவிடாய் காலங்களில் காட்டன் துணிகளைத்தான் பயன்படுத்திவந்தனர். ஆனால் இப்போதோ, ரசாயனங்களால் உருவாக்கப்பட்ட நாப்கின்களைப் பயன்படுத்துகின்றனர். அவையெல்லாம், பெண்களின் உடல் ஆரோக்கியத்துக்கும், சுற்றுச்சுழலுக்கும் மிகவும் ஆபத்தானவை. இந்தியப் பெண்கள் சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, அதற்கு மாற்றுவழியைச் சிந்திக்க வேண்டும்” என்று கூறினார்.

இந்தியாவில் 12% பெண்கள் சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துகிறார்கள். இவர்களால் அவர்களின் வாழ்நாள் முழுக்கப் பயன்படுத்தப்படும் சானிட்டரின் நாப்கின்களின் மொத்த எண்ணிக்கை தோராயமாக 21.3  மில்லியன். இவற்றுக்கு மாற்றாக தற்போது, டீகிரேடபிள் நாப்கின்கள், துணி நாப்கின்கள், ஹெர்பல் நாப்கின்கள் ஆகியவையெல்லாம் பிரபலமாகிவருகின்றன. செலிப்ரிட்டி பெண்கள் அவற்றுக்கு வெளிச்சம் பாய்ச்சும்போது, அதற்கான விழிப்பு உணர்வு அதிகரிக்கும். அந்த வகையில், வெல்டன் அண்ட் வெல்கம் தியா மிர்சா!

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது குறித்தும், காற்று மாசுபாடு பற்றிய விழிப்பு உணர்வு நமக்குத் தேவை என்றும் கூறிய தியா மிர்சா, ''நான் மூங்கிலில் செய்த டூத்பிரஷையே பயன்படுத்துகிறேன். பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன்.  நாம் செய்யும் சின்னச் சின்ன விஷயங்களே பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். அப்படியான முயற்சியாகத்தான் இத்தகைய பழக்கங்களைப் பின்பற்றுகிறேன். எனக்கு எலெக்ட்ரிக் கார்கள் பயன்படுத்துவது மிகவும் பிடிக்கும். அது சுற்றுச்சுழலுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தாதவை. இந்திய அரசாங்கம், இதுபோன்ற பொருள்களுக்கு வரிச் சலுகை அளிக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

தியா மிர்சா, ஏற்கெனவே  Wildlife Trust of India  என்ற அமைப்பின் தூதராகப் பணியாற்றிவருகிறார். தற்போது, இந்தியா சார்பாக  ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சுழலுக்கான நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சுழலுக்கான தலைவர் ஈரிக்  சொல்ஹிம் கூறுகையில், “சுற்றுச்சுழல் தொடர்பாக இந்தியா காற்று மாசுபாடு உள்ளிட்ட பல சவால்களைச் சந்தித்துவருகிறது.  தியா மிர்சாவின் பங்களிப்பு, இந்தியாவின் சுற்றுச்சுழல் மேம்பாட்டுக்கு உதவும் என்று நம்புகிறோம்” என்றார்.

தியா மிர்சா சுற்றுச்சுழலுக்கு ஆதரவாக மட்டுமல்ல, பெண்கள்மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைக்கு எதிராகவும் குரல் கொடுத்திருக்கிறார். ''பெண்கள்  பாலியல் வன்முறையைப் பற்றி இப்போது வெளிப்படையாகப் பேசுகின்றனர்.  இது திரைத்துறையில் மட்டும் நடக்கும்  விஷயமல்ல. கல்விக் கூடங்கள் முதல் கார்ப்ரேட் அலுவலகங்கள்வரை நடக்ககூடியதுதான். ஹாலிவுட்டில், பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுடன் பணியாற்றுவதை, பெண்கள் நிறுத்த ஆரம்பித்திருக்கின்றனர். பணியிடங்களில் பாலியல் வன்முறையைத் தடுக்க இதுதான் சிறந்த வழி” என்று அவர் குரல் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்