நேரு குடும்பத்திலிருந்து 6 வது நபர்! - காங்கிரஸ் தலைவரானார் ராகுல் | Rahul Gandhi Selected as Congress Chief

வெளியிடப்பட்ட நேரம்: 17:56 (11/12/2017)

கடைசி தொடர்பு:17:56 (11/12/2017)

நேரு குடும்பத்திலிருந்து 6 வது நபர்! - காங்கிரஸ் தலைவரானார் ராகுல்

காங்கிரஸ் கட்சியின் தலைவராகக் ராகுல் காந்தி இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். 

ராகுல்

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான இறுதி தேதியாக டிசம்பர் 4-ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது. அன்றைய தினம் ராகுல் காந்தி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட மூத்த நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். வேட்பு மனுவைத்தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் டிசம்பர் 11-ம் (இன்று) தேதியாகும். தலைவர் பதவிக்கு ராகுல் காந்தியைத் தவிர வேறு யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை. இதனால் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி அதிகாரபூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பைத் தேர்தல் நடத்தும் அதிகாரி முல்லப்பள்ளி ராமச்சந்திரன் வெளியிட்டார். ராகுல் காந்தியுடன் சேர்த்து 89 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. ஆனால், அவையனைத்தும் ராகுலை தலைவராக முன்மொழிந்தே தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இதனால் ராகுல் காந்தி போட்டியேயின்றி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். 

டிசம்பர் 16-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்கிறார். கட்சியின் 87 வது தலைவர் இவர் ஆவார். காங்கிரஸ் கட்சி பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் கீழ் இந்தியா இருந்தபோது, 1885-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆங்கிலேயர்கள்தான் இக்கட்சியைத் தோற்றுவித்தவர்கள். கடந்த 17 ஆண்டுகளாகச் சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறார். உடல்நிலை ஒத்துழைக்காததால் அவர் பதவியை ராகுலிடம் ஒப்படைக்கிறார். நேரு குடும்பத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர் ஆகியிருக்கும் 6 வது நபர் ராகுல் காந்தி ஆவார். குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், ராகுல் தலைவராகி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.