வெளியிடப்பட்ட நேரம்: 07:55 (13/12/2017)

கடைசி தொடர்பு:07:55 (13/12/2017)

முத்தப் போட்டியில் பங்கேற்ற எம்.எல்.ஏ-க்களுக்கு நோட்டீஸ்!

ஜார்க்கண்ட் முத்தப்போட்டிஜார்க்கண்ட் மாநிலம், பகூர் மாவட்டத்தின் ஜூமாரியா கிராமத்தில் நடந்த தம்பதிகள் முத்தப்போட்டியில் பங்கேற்றதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, அக்கட்சியின் தலைவர் சிபு சோரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

லித்திப்பாரா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சைமன் மராண்டி, கடந்த சில தினங்களுக்கு முன் தம்பதிகளுக்கான முத்தப் போட்டியை ஏற்பாடுசெய்திருந்தார். அதில், மற்றொரு எம்.எல்.ஏ-வான ஸ்டீபன் மராண்டியும் கலந்துகொண்டார். இதுதொடர்பான காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின     

எம்.எல்.ஏ-க்கள் முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது தொடர்பாக அம்மாநிலத்தில் பி.ஜே.பி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் விமர்சனம்செய்திருந்தன. 

இந்நிலையில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜே.எம்.எம் கட்சியின் தலைவருமான சிபு சோரன், தன் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் இருவருக்கும் அந்தப் போட்டியில் கலந்துகொண்டது தொடர்பாக ஒருவாரத்தில் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

பழங்குடியின மக்கள் தங்களின் பாரம்பர்ய விழாவைக் கொண்டாடியபோது, தம்பதிகள் ஒருவருக்கொருவர் முத்தமிட்டு நடனமாடிக் கொண்டதுடன், போட்டிபோட்டு முத்தம் அளித்த காட்சிகள், சமூக வலைதளங்களிலும், செய்தித் தொலைக்காட்சிகளிலும் வெளியாகின. அதிலும், இதுபோன்றதொரு நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினரே முன்னிலை வகித்தது சர்ச்சைக்குள்ளானது. 

இந்தப் போட்டியை சைமன் மராண்டி ஏற்பாடுசெய்திருந்தார். அதில் மற்றொரு எம்.எல்.ஏ-வான ஸ்டீபன் மராண்டியும் கலந்துகொண்டார். அவர்கள் இருவருக்கும் விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக ஜே.எம்.எம். தலைவர் தெரிவித்திருப்பதை, பி.ஜே.பி. மாநில துணைத் தலைவர் ஹேம்லால் முர்மு உறுதிப்படுத்தினார். அவர்களைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று பி.ஜே.பி கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க