வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (13/12/2017)

கடைசி தொடர்பு:12:50 (13/12/2017)

ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் மதுகோடா குற்றவாளி ! - சி.பி.ஐ நீதிமன்றம் அதிரடி

நிலக்கரி ஊழல் வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா உள்ளிட்ட ஆறு பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்து உத்தரவிட்டது சி.பி.ஐ நீதிமன்றம்.

மதுகோடா

சுயேச்சையாக ஜெயித்து, முதல்வர் நாற்காலியைப் பிடித்து அத்தனை மாநில அரசியல்வாதிகளையும் வியக்க வைத்தவர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான மதுகோடா! இப்போது நிலக்கரி ஊழல் புகாரில் தனியொரு அரசியல்வாதியாகச் சிக்கி, பல ஊழல் முன்னோடிகளையும் திகைக்க வைத்திருக்கிறார். கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் மதுகோடா.

தனது பதவிக்காலத்தில் தனது செல்வாக்கால் மாநிலத்தின் பல நிலக்கரிச் சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்தார். இதனால் மதுகோடாமீது கடுமையான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை வழக்காக எடுத்த சிபிஐ, மதுகோடா, நிலக்கரித்துறை முன்னாள் செயலர் ஹெச்.சி.குப்தா, ஜார்க்கண்ட் முன்னாள் தலைமைச் செயலர் ஏ.கே. பாசு, நிலக்கரித்துறைச் செயலர் ஹரிஷ் சந்திரா உள்ளிட்ட 15 பேர்மீது வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கின் மீதான விசாரணை பல ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த வழக்கில் இன்று ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா உள்ளிட்ட ஆறு பேரை குற்றவாளிகள் என சிபிஐ நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும், இந்தக் குற்றவாளிகளுக்கான தண்டனை நாளை அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.