வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (14/12/2017)

கடைசி தொடர்பு:07:28 (14/12/2017)

சத்தமாக மந்திரம் கூற, செல்போன் பேச அமர்நாத் கோயிலில் தடை!

அமர்நாத் கோயிலுக்குள் சத்தமாக மந்திரங்கள் ஓத தடைவிதித்து பக்தர்களுக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.

அமர்நாத் கோயில்

இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலுக்கு ஒவ்வோர் ஆண்டும் பனிலிங்கத்தை தரிசிக்க இந்தியா மட்டுமன்றி, பல வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. யாத்திரையாக வரும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துதர மாநில நிர்வாகத்துக்கு 2012-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அமர்நாத் கோயில் சார்பில் குழு அமைத்து, பக்தர்களுக்குத் தேவையான வசதிகள்குறித்து ஆராய்ந்து வருகிறது. அமர்நாத் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குச் செய்துத் தரப்படும் வசதிகள்குறித்து கடந்த மாதம் தேசிய பசுமை தீர்ப்பாயம் கோயில் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியிருந்தது. அதில், `கோயிலில் பக்தர்களுக்குக் கழிவறை வசதி இல்லை. ஆனால், சாலையோரங்களில் கடைவைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரவில்லை' எனத் தீர்ப்பாயம் குற்றம் சாட்டியிருந்தது.

இந்நிலையில், ஒலி மாசு காரணமாக கோயிலுக்குள் மணி அடிக்க மற்றும் பக்தர்கள் சத்தமாக மந்திரங்கள் கூறவும், பக்தர்கள் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்லவும் தடை விதிப்பதாக அமர்நாத் குகைக்கோயில் நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள கடைசி சோதனைச் சாவடியிலிருந்து பக்தர்கள் ஒரு வரிசையில் நின்று செல்ல வேண்டும். மேலும் பக்தர்களின் உடைமைகளை வைப்பதற்காகக் கோயில் தரப்பில் அறை அமைத்துத் தர வேண்டும் என்றும் பல நிபந்தனைகளைக் கோயில் நிர்வாகத்துக்கு விதித்துள்ளது தேசிய பசுமை தீர்ப்பாயம்.