உள்நாட்டில் தயாரான முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஐ.என்.எஸ் கல்வாரி கடற்படையில் இணைந்தது!

உள்நாட்டில் தயாரான முதல் நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் கல்வாரியை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 


இந்தியக் கப்பற்படைக்கு 3 நீர்மூழ்கிக் கப்பல்களை பிரான்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் பணி, மும்பையில் உள்ள மாஸாகான் கட்டுமான நிறுவனம் மேற்கொண்டுவந்தது. அந்தவகையில், முதல் உள்நாட்டுத் தயாரிப்பான ஐ.என்.எஸ் கல்வாரி நீர்மூழ்கிக் கப்பல், முறைப்படி கடற்படையில் இன்று இணைந்தது. மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், ஐ.என்.எஸ் கல்வாரி கப்பலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘மேக் இன் இந்தியா திட்டத்துக்கு சிறந்த உதாரணம், இந்தக் கப்பல்’ எனப் புகழாரம் சூட்டியுள்ளார். 

67.5 மீட்டர் நீளமும், 12.3 மீட்டர் உயரமும்கொண்ட இந்த நீர்மூழ்கிக் கப்பல், டீசல் மற்றும் மின்சக்திமூலம் இயங்கக்கூடியது. அதிநவீன தொழில்நுட்பத்துடன் சத்தமே இல்லாமல் இதன் என்ஜின் இயங்கும் என்பதால், மற்ற நாட்டு ரேடாரால் இதைக் கண்டுபிடிப்பது கடினம். அதிக எடைகொண்ட டோர்பிடோக்கள் எனப்படும் ஏவுகணைகளைச் சுமந்துசெல்லும் திறன்பெற்ற ஐ.என்.எஸ் கல்வாரி, கடலுக்கு அடியில் இருந்தாலும் கடலின் மேற்பரப்பில் இருந்தாலும் அவற்றைச் செலுத்தும் திறன்பெற்றது. அதேபோல, பிரான்ஸ் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள எக்ஸோசெட் ஏவுகணைகளும் இந்தக் கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஒரு ஏவுகணை மூலம் எதிரி நாட்டின் மிகப்பெரிய கப்பல்களைக்கூட சுட்டு வீழ்த்திவிட முடியும்.   
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!