வெளியிடப்பட்ட நேரம்: 12:42 (14/12/2017)

கடைசி தொடர்பு:12:42 (14/12/2017)

வங்கி வாராக்கடன் பிரச்னை பற்றி என்ன கூறுகிறார் மோடி?

பிரதமர் மோடி

ங்கிகளின் வாராக்கடன்களை அதிகரிக்கச் செய்து, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மிகப்பெரிய ஊழல் செய்ததாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியின்போது, குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்குமாறு வங்கிகளுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாகவும் ஃபிக்கி-யின் 90-வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் மோடி தெரிவித்துள்ளார்.

பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து, நான்காவது ஆண்டு நடைபெறும் நிலையில், வங்கிகளின் வாராக்கடன் பற்றி பிரதமர் திடீரென்று பேசுவது விந்தையாக உள்ளது. மேலும், வங்கிகளில் உள்ள வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகை தொடர்பாக பரவலாக தகவல்கள் வெளியான நிலையில், அதுதொடர்பான பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.

அவர் மேலும் பேசுகையில், "வங்கிகளின் வாராக்கடன் பிரச்னை பெரிதாக உருவெடுத்துள்ளது. முந்தைய ஆட்சியில் இருந்த பொருளாதார நிபுணர்கள், தந்துவிட்டுச் சென்றுள்ள பரிசு. காங்கிரஸ் ஆட்சியின்போது நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின் ஊழல், 2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழல் ஆகியவற்றைவிட மிகப்பெரிய ஊழல் வங்கி வாராக்கடன் ஊழல்தான். 

முந்தைய ஆட்சியின்போது சில நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் கடன்தான், வாராக்கடன்களாகி, தற்போது மிகப்பெரும் தலைவலியாக வங்கிகளுக்கு உருவெடுத்துள்ளது. 

நிதித் தீர்வு மற்றும் வைப்புத் தொகை காப்பீடான எஃப்.ஆர்.டி.ஐ மசோதாகுறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. வங்கி வாடிக்கையாளர்களின் நலனையும், அவர்களின் வைப்புத்தொகையையும் பாதுகாக்க மத்திய அரசு முன்னுரிமை அளித்துவருகிறது. நாட்டில் உள்ள வங்கிகளின் ஸ்திரத்தன்மையை அதிகரிப்பதே மத்திய அரசின் நோக்கம். வங்கிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் வைப்புத்தொகை பாதுகாக்கப்படுவதன் மூலம் தேச நலன் உறுதிசெய்யப்படும். எனவே, மத்திய அரசின் மசோதா குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்" என்றார். 

ஏழைகளின் பிரச்னைகளை உணர்ந்து, அவற்றுக்கு தீர்வு ஏற்படுத்தி இருப்பதாகவும், கடந்த மூன்றாண்டுகளில் மத்திய அரசு ஏழைகளின் நலனில் அக்கறை கொண்டு செயலாற்றி வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். ஏழை மக்களுக்கு தமது அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களையும் அவர் எடுத்துரைத்தார்.

வங்கிகள் வாராக்கடன் பற்றி, மூன்றாண்டுகள் கழித்துப் பேசும் பிரதமர், அந்தக் கடன் தொகைகளை வசூலிக்க இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

விஜய் மல்லையா போன்ற தொழிலதிபர்கள், வெளிநாடு செல்லும் வரை அவர்களைக் கட்டுப்படுத்தாமல், அதன் பின்னர் வழக்குகள் போடுவதும், சொத்துகளை ஏலம் விடுவதும் எந்த வகையில் சரியாக அமையும் என்பதை பிரதமர் தான் விளக்க வேண்டும்.

டீமானிடைசேஷன் மூலம் வங்கிகளுக்கு, இந்தியா முழுவதும் உள்ள சாமான்ய மக்களின் பணம்தான் போய்ச் சேர்ந்ததே தவிர, கறுப்புப் பணம் ஒழிந்ததா என்பதை மத்திய அரசால் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை.

சேகர் ரெட்டிகளும், அம்பானிகளும், அதானிகளும் வங்கிகளின் வாசல்களில் நின்றதாக யாரும் சொல்ல முடியாது. எனவே, வங்கிகளின் வாராக்கடன்களை எதிர்கொள்ள சாமான்ய மக்களின் வங்கி வைப்புத்தொகைதான் தீர்வா? என்பதை மத்திய அரசும், பிரதமர் மோடியும் சற்றே சிந்தித்துப் பார்த்தால், மக்களின் அதிருப்தியில் இருந்து தப்பலாம்.

சாமான்யர்களுக்கு ஒரு சட்டம்; கோடீஸ்வர தொழிலதிபர்களுக்கு ஒரு நியதி என போக்கு, பி.ஜே.பி அரசிலும் தொடர்வதுதான் வேடிக்கை. இந்தநிலை மாற வேண்டும் என்பதே, இந்தியா முழுவதும் உள்ள சாமான்ய, நடுத்தர மக்களின் குரல் என்பதை பிரதமர் மோடி உணர்வாரா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்