வெளியிடப்பட்ட நேரம்: 15:24 (14/12/2017)

கடைசி தொடர்பு:15:38 (14/12/2017)

மசினக்குடியில் யாரைத்தேடி அலைகிறான் ரிவால்டோ? - நெகிழவைக்கும் யானையின் பாசம்!

சினக்குடி பகுதியில் ரிவால்டோ' என்கிற காட்டு யானை வெகுபிரபலம். அந்த யானைக்கு 'ரிவால்டோ' என்ற பெயர் எப்படி வந்தது என்பதில் இருந்துதான் தொடங்குகிறது கதை.

மனிதர்கள் மீது யானை காட்டும் பாசம்

வழக்கமாக மனிதப் பரிச்சயமற்ற, ஒரு முரட்டுத்தனமான காட்டு யானையாகத்தான் அதுவும் இருந்தது. ஒருநாள் காட்டுப்பன்றிகளுக்கு வைத்த பொறியில் சிக்கி, அதன் தும்பிக்கை முனை துண்டாகிவிட்டது. அப்போதிருந்து உணவைத் தும்பிக்கையில் எடுத்து உண்ண மிகவும் சிரமப்பட்டது. செய்வதறியாத நிலையில், அந்தப் பகுதியில் உள்ள விடுதிக்குப் பக்கத்தில் வந்து நின்றது அந்த யானை. முதலில் யானையைப் பார்த்து மிரண்டாலும், பிறகு அதன் நிலையைக் கண்டு பரிதாபம் பிறந்தது அந்த விடுதி உரிமையாளர் மார்க்குக்கு.

வனத்துறைக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. புண் ஆறினாலும் அதனால் பழைய வேகத்துடன் உணவை எடுத்து உண்ண முடியவில்லை. தேவையான உணவை உண்ண முடியாததால் மெலிந்துபோய், மார்க் விடுதியையே சுற்றிச் சுற்றி வந்தது. அந்தக் காட்டு யானை தன் உதவியை நாடுவதைப் புரிந்துகொண்ட மார்க், `இந்த யானைக்கு நாமே உணவை ஊட்டிவிட்டால் என்ன?' என நினைத்தார். கொஞ்சம் உதறல் எடுத்தாலும் உணவை எடுத்துக்கொண்டு அதன் அருகில் தைரித்துடன் சென்றார். மார்க்கை, மனதார ஏற்றுக்கொண்டு அவர் தந்த உணவால் பசியாறியது அந்த யானை.

பிரேசில் கால்பந்து வீரர் ரிவால்டோ'வின் தீவிர ரசிகரான மார்க், அந்த யானைக்கும் அதே பெயரைச் சூட்டி, தனது செல்லமாக்கிக்கொண்டார். நாளடைவில் ரிவால்டோ ஊருக்குள் வந்தால், ரிவால்டோ வந்துட்டான்...' என்று சொல்லும் அளவுக்கு பாப்புலரானது. உதகையிலிருந்து கல்லட்டி வழியாக முதுமலைக்குச் செல்லும் பாதையில்தான் ரிவால்டோ சுற்றித் திரியும். சுற்றுலாப் பயணிகள் செல்ஃபி எடுக்கும் அளவுக்கு ரிவால்டோ மனிதர்களுடன் நெருக்கம் காட்டியது. 

ஆண் யானைகள், விருப்பத்துக்குரியவரை மட்டுமே தன் தந்தங்களைத் தொட அனுமதிக்கும். காட்டு யானையான ரிவால்டோவிடம் `பாகுபலி' ஸ்டைலில் தந்தத்தைப் பிடித்து விளையாடுவார் மார்க். ஒருநாள் மார்க் திடீரென இறந்துவிட, ரிவால்டோ அநாதையானது. மார்க் இறந்துவிட்டார் என்பதை அறியாமலேயே தினமும் அவரைத் தேடி வரும் ரிவால்டோ, உணவு விடுதிக்கு அருகே நின்று சிறிது நேரம் பிளிறும். மார்க் வருகிறாரா எனப் பார்த்துவிட்டு, ஏமாற்றத்துடன் காட்டுக்குள் செல்லும். 

ரிவால்டோவுக்கும் மார்க்குக்கும் உள்ள உறவு இப்படியென்றால், ருக்மணிக்கும் குட்டி சங்கரனுக்குமான பந்தம் வேற லெவல். பாலக்காட்டிலிருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் கோங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன். புகழ்பெற்ற பஞ்சவாத்தியக் கலைஞரான இவரின் மனைவி ருக்மணி. இந்த ஊர் பகவதி அம்மன் கோயிலில் `குட்டி சங்கரன்' என்ற ஆண் யானை உள்ளது. விஜயனைத் திருமணம் முடித்து கோங்காட்டுக்கு மருமகளாக ருக்மணி வரும்போது,  குட்டி சங்கரனுக்கு 11 வயது. கோயில் விழாக்களுக்கு விஜயனும் குட்டி சங்கரனும் சேர்ந்தே போவார்கள்.

ருக்மணி, தினமும் காலையில் எழுந்ததும் பகவதியை வணங்க கோயிலுக்குப் போவார். குளித்து நெற்றி நிறைய திருநீற்றுடன் அழகுற கோயில் முன் நின்றுகொண்டிருப்பான் குட்டி சங்கரன். வீடு திரும்புகையில், குட்டி சங்கரனுக்குப்  பிரசாதம் கொடுப்பது ருக்மணியின் வழக்கம். நாள்கள் செல்ல இருவரும் இணைபிரியாத நண்பர்களாகிவிட்டனர்.

குட்டி சங்கரன் யானையுடன் ருக்மணி

pic courtesy: manorama

ஒருநாள், ருக்மணியின் வீட்டுக் கதவை சிலர் தடதடவெனத் தட்டினர். ``பாகன் குடித்துவிட்டு ரோட்டில் படுத்துக்கிடக்கிறார். குட்டி சங்கரன் ரோட்டில் கலாட்டா பண்றான். பயங்கர டிராஃபிக் ஜாம். நீங்க வந்து சொன்னதால்தான் அவன் கேட்பான்'' என்றனர் பதட்டத்துடன். ருக்மணி, சம்பவ இடத்துக்கு ஓடினார். நடுரோட்டில் பாகன் கிடக்க, யானை அங்குமிங்கும் சுற்றிக்கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கோழிக்கோடு சாலையின் இரு பக்கங்களிலும் நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றிருந்தன. சுற்றியிருந்தவர்களோ... ``சேச்சி, நீங்க பக்கத்துல போனீங்கனா உங்ககூட வந்துடுவான். போங்க... போங்க'' என்று கூச்சலிட்டனர்.

தைரியத்தை வரவழைத்துக்கொண்டு குட்டி சங்கரனை நெருங்கிய அவர், ``இந்தா... வா... நட!'' என்று தந்தத்தைப் பிடிக்க, ருக்மணி குரல் கேட்டதும் பெட்டிப்பாம்பாக அடங்கி அவருடன் நடக்க ஆரம்பித்தான் குட்டி சங்கரன். ருக்மணிக்கோ பெருமை தாளவில்லை. `இவ்வளவு பெரிய உருவம், நம்ம வார்த்தைக்குக் கட்டுப்படுதே!' எனத் தன்னைத்தானே கிள்ளிப்பார்த்துக்கொண்டார். கூட்டம் ஆர்ப்பரித்தது. 

விஷயம் கேள்விப்பட்டு, ருக்மணியைச் சந்திக்க கோங்காடு கிராமத்துக்குப் போனோம். `ருக்மணி' என்ற பெயரைச் சொன்னதுமே `விஜயனோட பாரி' என்று வீட்டைக் காண்பித்தனர். கதவைத் திறந்தால், குட்டி சங்கரன் புகைப்படம்தான் வரவேற்றது. ``சென்னையிலிருந்து வர்றோம்'' என்றதும் அவருக்கு வியப்பு தாங்கவில்லை. ``எங்க ஸ்நேகம் அங்கே வரை பரவிடுச்சா?'' என்று சிரித்தபடி வரவேற்றார்.

``இந்த ஊருக்குக் கல்யாணம் பண்ணி வந்தப்போ... முதன்முதலா குட்டி சங்கரன்கிட்டதான் நான் ஆசி வாங்கினேன். ரெண்டு பேருக்கும் 40 ஆண்டுகால நட்பு. எங்க வீட்டுக்காரர் ஊர் ஊரா பஞ்சவாத்தியம் வாசிக்கப் போவார். குட்டி சங்கரனும் அவர்கூட கோயில் கோயிலாகப் போவான்.  காலையில கண் விழிச்சதும் என்னைப் பார்க்கலைன்னா பிளிறத் தொடங்கிடுவான். அதனால டைமுக்கு அவன் முன்னாடி போய் நின்னுடுவேன். பிரசாதத்தை அவன் வாயில ஊட்டிவிடணும். அப்பதான் அமைதியாவான். தும்பிக்கையில கொடுத்தால் வாங்க மாட்டான். ஊட்டிவிட்டாத்தான் சாப்பிடுவான்.

எங்கேயாவது கோயில் விழாக்களுக்குப் போயிட்டு நைட் லேட்டா வந்தாலும் என் வீட்டுல லைட் எரிஞ்சதுனா வீட்டு முன்னாடி நிப்பான். நான் ஏதாவது சாப்பிடக் கொடுத்தாதான் போவான். எந்த ஒரு விசேஷம்னாலும் சாமிக்குப் படைச்சுட்டு குட்டி சங்கரனுக்கும் கொடுத்துட்டுத்தான் நாங்க சாப்பிடுவோம். பத்து வருஷங்களுக்கு முன்னாடி என்னோட கணவர் இறந்துட்டார். அதுக்கு அப்புறம்தான் என் மேல குட்டி சங்கரன் ரொம்பவே பாசமாகிட்டான்'' என்று சொல்லும்போதே ருக்மணியின் குரல் உடைந்து தழுதழுக்கிறது. 

பொதுவாக செப்டம்பர் முதல் ஜனவரி வரை யானைகளுக்கு இனப்பெருக்கக் காலம். ஆண் யானைகளுக்குக் கண்களின் மேல் பகுதியில் உள்ள மெல்லிய துவாரம் வழியாக மதநீர் வடியும். வளர்ப்பு யானைகளைப் பட்டினிபோட்டு, உடல் வலுவை இழக்கச்செய்து சகஜ நிலைக்குக் கொண்டுவருவார்கள். பாகனைத் தவிர வேறு யாரும் அதனிடம் அந்தச் சமயத்தில் நெருங்க முடியாது. குட்டி சங்கரனுக்கு மதநீர் வழியும் நேரத்தில்கூட, ருக்மணி பிரசாதம் கொடுக்கத் தவறியது இல்லையாம்.

மனிதர்களை வெல்ல மட்டுமல்ல. யானைகளை வெல்லவும் அன்புதான் ஆயுதம்... அங்குசம் அல்ல!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்