”அமர்நாத் கோயிலை அமைதி மண்டலமாக அறிவிக்கவில்லை”: மறுக்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

அமர்நாத் கோயிலை அமைதி மண்டலமாக அறிவிக்கவில்லை என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விளக்கம் அளித்துள்ளது.

அமர்நாத்

இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலுக்கு ஒவ்வோர் ஆண்டும் பனிலிங்கத்தை தரிசிக்க இந்தியா மட்டுமன்றி, பல வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. யாத்திரையாக வரும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துதர மாநில நிர்வாகத்துக்கு 2012-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அமர்நாத் கோயில் சார்பில் குழு அமைத்து, பக்தர்களுக்குத் தேவையான வசதிகள்குறித்து ஆராய்ந்து வருகிறது. அமர்நாத் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குச் செய்துத் தரப்படும் வசதிகள்குறித்து கடந்த மாதம் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கோயில் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியிருந்தது. அதில், `கோயிலில் பக்தர்களுக்குக் கழிவறை வசதி இல்லை. ஆனால், சாலையோரங்களில் கடைவைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரவில்லை' எனத் தீர்ப்பாயம் குற்றம் சாட்டியிருந்தது.

இந்நிலையில், "ஒலி மாசு காரணமாக கோயிலுக்குள் மணி அடிக்க மற்றும் பக்தர்கள் சத்தமாக மந்திரங்கள் கூறவும், பக்தர்கள் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்படுகிறது” என அமர்நாத் குகைக்கோயில் நிர்வாகத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்ததாக நேற்று செய்தி வெளியானது. இந்நிலையில், இதை மறுத்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், பனிலிங்கத்தின் முன்னால் மட்டும் அமைதியை பராமரிக்க வேண்டும் என்றும் குகைக் கோயிலில் மந்திரங்கள் சொல்வதற்கோ பஜனைப் பாடல்கள் பாடுவதற்கோ தடை இல்லை என்றும் அறிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!