இந்தியாவை உலுக்கிய ஊழலின் கதை! 2ஜி தீர்ப்பு: பூதமா புஸ்வாணமா? - பகுதி 1 | 2G Spectrum Judgement series part 1

வெளியிடப்பட்ட நேரம்: 11:07 (15/12/2017)

கடைசி தொடர்பு:12:04 (21/12/2017)

இந்தியாவை உலுக்கிய ஊழலின் கதை! 2ஜி தீர்ப்பு: பூதமா புஸ்வாணமா? - பகுதி 1

2ஜி

‘17,60,00,00,00,000 ரூபாய் ஊழல்’ என இந்தியப் பத்திரிகைகள் ஓர் அதிகாலையில் செய்தி வெளியிட்டன. 2010 நவம்பர் 11-ம் தேதி வெளியான அந்தச் செய்தி இந்தியாவை உலுக்கியது. இந்தியாவைப் பார்த்து உலகம் அதிர்ந்தது. இந்த அவமானங்கள் அத்தனைக்குமான ஊழலின் ஊற்றுக்கண் தமிழகத்தில் இருந்ததால், தமிழகம் தலைகுனிந்தது. நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளாக இருந்த பி.ஜே.பியும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் அனல் கக்கும் விவாதங்களைக் கிளப்பின. அந்த அனலின் வெப்பத்தில் மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சிகளாக இருந்த காங்கிரஸ்-தி.மு.க புழுவாய்த் துடித்துப் போயின. தமிழகத்தில் ஆளும்கட்சியாக இருந்த தி.மு.க தலைவர்கள் மட்டுமல்ல... அடிமட்டத் தொண்டனும் அவமானத்தால் தலைகாட்ட முடியாமல் தவித்தான். ஆ.ராசா மட்டும் தைரியமாக எல்லாவற்றுக்கும் விளக்கம் கொடுத்துக் கொண்டே இருந்தார்; ஊழலே நடக்கவில்லை என்று உறுதியாகச் சொன்னார். ஆனால், 2ஜி ஊழல் எதிர்ப்பு இரைச்சலில், ஆ.ராசாவின் குரல் அமுங்கிப் போனது. 

2ஜி வழக்கில் தொடர்புடையவர்கள்

7 ஆண்டுகளுக்கு மேல் இழுத்தடித்த விவகாரத்தில், டிசம்பர் 21-ம் தேதி தீர்ப்பு வெளியாகப் போகிறது. தமிழகத்தில் தொடங்கி... இந்தியாவை கலக்கி... உலகை அதிரவைத்த 2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் வெளியாகப்போகும் தீர்ப்பு பூதமாக இருக்குமா? புஷ்வாணமாக பொய்க்குமா? என்பதற்கு 21-ம் தேதி வரை காத்திருக்க வேண்டும். அதற்கு முன், அந்த வழக்கு கடந்து வந்த பாதை!  

கருத்துக் கணிப்பில் தொடங்கிய கதை!

நெருப்பில் எரியும் தினகரன் பத்திரிகை அலுவலக வாயில்

2007 மே 9-ம் தேதி, ‘தினகரன்’ நாளிதழில் ஒரு கருத்துக்கணிப்பு வெளியானது. அதில் ‘கருணாநிதிக்கு அடுத்தபடியாக தி.மு.கவின் தலைமைப் பதவியை வகிக்கும் தகுதி யாருக்கு இருக்கிறது?’ என்ற கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. கருணாநிதியின் வாரிசுகளில் ஸ்டாலின் அதில் முதலிடத்தைப் பிடித்தார். அழகிரி மிகக் குறைவான வாக்குகளையும், கனிமொழி அதற்கும் குறைவான வாக்குகளையும் வாங்கியிருந்தார். கழகத்தின் தலைமைப் பதவியைக் கைப்பற்ற ஸ்டாலின், அழகிரி ஆகிய இருவருக்கும் கடும் மோதல் நடந்து வந்த சமயம் அது என்பதால், கட்சியில் அந்தக் கருத்துக்கணிப்பு கடும் கொந்தளிப்பைக் கிளப்பியது. அழகிரிக்கான செல்வாக்கைக் குறைத்து மதிப்பிட இது பயன்பட்டுவிட்டது என்பதால், அவரது ஆதரவாளர்கள் மதுரை மாநகரில் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர். உணர்ச்சியால் தூண்டப்பட்ட குழுவினர், மதுரையில் இருக்கும் ‘தினகரன்’ மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள். உள்ளுக்குள் புகுந்து அடித்து நொறுக்கினார்கள். அந்தக் கலவரத்தின் முடிவில் மூன்று உயிர்கள் பலியாயின. 

மகனா? மருமகனின் மகனா? 

தினகரன் நாளிதழ், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கோ கருணாநிதியின் குடும்பத்துக்கோ அந்நியமானது அல்ல. கருணாநிதியின் அக்கா சண்முகசுந்தரத்தம்மாளின் மகன்களில் ஒருவரான ‘முரசொலி’ மாறன், கருணாநிதிக்கு மருமகன் முறை.
அந்த மருமகன் மாறனுக்கு கலாநிதி, தயாநிதி ஆகிய இரண்டு மகன்கள். அதில் கலாநிதியால் நடத்தப்படும் பத்திரிகைதான் ‘தினகரன்’. அந்த நேரத்தில் மாறனின் மற்றொரு மகன் தயாநிதிமாறன், கருணாநிதியால் கைபிடித்து அரசியலுக்கு அழைத்து வரப்பட்டு தி.மு.க. சார்பில் மத்திய சென்னை நாடாளுமன்ற தேர்தலில் நிறுத்தப்பட்டார். அதில் வெற்றி பெற்ற அவர், 2004-ம் ஆண்டு மத்திய அமைச்சரவையில் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக கருணாநிதியால் அமரவைக்கப்பட்டு அழகு பார்க்கப்பட்டார். ஆனால், அவரே கருணாநிதியின் மகன்களின் ஒருவரை முன்னிலைப்படுத்தி, ஒருவரை பின்னுக்குத் தள்ளி தேவையற்ற கருத்துக் கணிப்பை வெளியிட்டார். கருணாநிதியின் மருமகன் முரசொலிமாறனின் மகன் வெளியிட்ட கருத்துக் கணிப்பை, கருணாநிதியின் மகன் அழகிரி எதிர்த்தார். அதன் விளைவாக மூன்று உயிர்கள் பலியாயின. ஆரம்பகாலத்தில் தி.மு.க-வின் தயவால் வளர்ந்த கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் தொலைக்காட்சியில், ‘தி.மு.க ரவுடிகள் அராஜகம்’ என நொடிக்கொரு செய்தி ஒளிபரப்பானது. மகனா... மருமகனின் மகனா..! என வந்தபோது, கருணாநிதி, மகன் பக்கம் நின்றார். தி.மு.க தயாநிதி மாறனிடம் விளக்கம் கேட்டது; தயாநிதி அவருடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். கட்சியை விட்டே அவர் விலக்கி வைக்கப்பட்டார். அதற்கு அடுத்து தி.மு.க-வில் பல அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டன. 

ஆ.ராசா வந்தார்!

தயாநிதி வகித்தத் தொலைத்தொடர்புத் துறை தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவுக்கு ஒதுக்கப்பட்டது. அதுவரை தயாநிதிமாறனின் தோள்களில் கைபோட்டு நடந்த கருணாநிதி, ராசாவின் தோளுக்குத் தன் கையை மாற்றினார். ஒருகட்டத்தில் கருணாநிதியின் ‘வளர்ப்பு மகனைப்’ போல ஆ.ராசா வலம்வரத் தொடங்கினார். மே 16, 2007-ல் ஆ.ராசா மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆ.ராசா வருவதற்கு முன்பே, 2ஜி அலைக்கற்றை ஏலத்துக்கு 150 விண்ணப்பங்கள் வந்திருந்தன. ஆனால், ஏலம் நடத்தப்படவில்லை. ஸ்வான் டெலிகாம் நிறுவனம் பிப்ரவரி மாதமே விண்ணப்பித்து இருக்கிறது. அதாவது தயாநிதி மாறன் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோதே அது விண்ணப்பித்துவிட்டது. ராசா பொறுப்பேற்ற பிறகு, செப்டம்பர் மாதம் 24-ம் தேதி யூனிடெக் நிறுவனம் விண்ணப்பிக்கிறது. அதற்கு மறுநாள் அந்த நிறுவனத்துக்கு அனுமதி கடிதம் கொடுக்கப்படுகிறது. அதைக் கொடுத்த கையோடு மற்ற நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வாங்குவதை ராசா நிறுத்தச் சொல்கிறார்.  

இயற்கை நீதிக்கு எதிரானது!

ராசா அப்படி அறிவித்தபோது, அப்போதைய தொலைத் தொடர்புத் துறைச் செயலாளர் மாத்தூர், இது இயற்கை நீதிக்கு எதிரானது. 1 அக்டோபர் 2007 வரை விண்ணப்பிக்கலாம் என்று நாம் முதலில் சொல்லிவிட்டு, திடீரென தேதியை மாற்றுவது தவறானது. அப்படிச் செய்ய விதிமுறையில் இடம் இல்லை” என ராசாவை எச்சரிக்கிறார். அதேபோல் நிதித்துறையைச் சேர்ந்த மனு மாதவன் என்பவரும் ராசாவை எச்சரிக்கிறார். மாத்தூர் இவ்வாறு மறுத்ததும், அவர் விடுப்பில் சென்ற ஒரு நாள் அன்று, தொலைத் தொடர்புத் துறை கமிஷனின், தொழில்நுட்ப உறுப்பினராக இருந்த ஸ்ரீதரன் என்பரிடம் கையெழுத்து வாங்கிக் கொள்கிறார். அதன்பின் சித்தார்த் பெகுரா என்பவரை ராசா தொலைத் தொடர்புத்துறை செயலாளராக கொண்டுவருகிறார். அவர் ராசா சொன்னதை அப்படியே நிறைவேற்றிக் கொடுக்கிறார். 2ஜி ஊழலுக்கான வேலைகள் வேகமாகத் தொடங்கின.  

ஆ.ராசா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின்

ராசா முடிவின் பின்னணி 

25 செப்டம்பர் 2007 அன்று வரை பெறப்பட்ட விண்ணப்பங்களை மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என ராசா அறிவித்ததற்குக் காரணம், அப்படிச் செய்தால் டெல்லியில் உள்ள ஒரே ஒரு நிறுவனத்துக்கு மட்டுமே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்படும். அந்த நிறுவனம் ஸ்வான் டெலிகாம். இந்த நிறுவனமும் ராசாவும் அத்தனை நெருக்கம். ராசா சுற்றுச்சூழல்துறை அமைச்சராக இருந்தபோது, ஸ்வான் டெலிகாம் நிறுவனம் ரியல் எஸ்டேட் தொழில் செய்துகொண்டிருந்தது. அப்போதே அந்த நிறுவனத்துக்கு ஆதரவாகப் பல தடையில்லாச் சான்றுகளை வழங்கியவர் ராசா. அப்போது ஏற்பட்ட நெருக்கம் காரணமாக ராசா அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக 2ஜி அலைக்கற்றையைப் பெறுவதற்கான தேதியை மாற்றினார். தங்களுக்கு நெருக்கமான ஆ.ராசா தொலைத் தொடர்புத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதும், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்த ஸ்வான் நிறுவனம், தொலைபேசி சேவைக்கு தொழிலை மாற்றியது. 

2ஜி ஊழல் தொடக்கம்!

2007 அக்டோபர் மாதம் 1-ம் தேதி ஷாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா ஆகியோர் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் இயக்குநர்களாகப் பொறுப்பேற்கின்றனர். அதே ஆண்டு, அதே மாதம் 18-ம் தேதி டிபி குழும நிறுவனங்கள், ஸ்வான் டெலிகாம் நிறுவன பங்குகளை வாங்குகின்றன. 49.90 லட்சம் மதிப்புள்ள பங்குகள் கைமாற்றப்படுகின்றன. 

2008 ஜனவரி 10-ம் தேதி மத்தியத் தொலைத் தொடர்புத்துறை அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில், மதியம் 2.45 மணிக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. 2ஜி அலைக்கற்றைக்கான உரிமம் பெற விரும்பும் நிறுவனங்கள் தங்களின் விண்ணப்பங்களை 45 நிமிடத்துக்குள் தொலைத் தொடர்புத்துறை தலைமையகத்துக்கு வரவேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தது. அதனால், பல நிறுவனங்கள் விண்ணப்பங்களைக் கொடுக்கவும், நேரில் போகவும் முடியவில்லை. ஆனால், ஸ்வான் டெலிகாம் உள்ளிட்ட 13 நிறுவனங்கள் மட்டும், 2007 நவம்பர், அக்டோபர் மாதங்கள் தேதியிட்டு தயாராக ஆயிரத்து 600 கோடிக்கு டி.டி.எடுத்து தயாராக வைத்திருந்தன. ஸ்வான் டெலிகாம், லூப் டெலிகாம், ஸ்பைஸ், ஐடியா, டேட்டாகாம்/வீடியோகான், ஷ்யாம் டெலிகாம், டாடா டெலி சர்வீஸ், யுனிடெக் நிறுவனங்கள் மட்டும் 2ஜி அலைக்கற்றையைப் பெற்றன. அங்குதான் இந்த விவகாரத்தின் வில்லங்க முடிச்சும் போடப்பட்டது. 

தொடரும்...


டிரெண்டிங் @ விகடன்