அரசியலிலிருந்து ஓய்வுபெறுகிறார் சோனியா!

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி நாளைப் பொறுப்பேற்க உள்ளநிலையில், அரசியலிலிருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளதாகச் சோனியா காந்தி அறிவித்துள்ளார். 


நாட்டின் பழைமையான கட்சிகளில் முக்கியமானதானக் கருதப்படும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகச் சோனியா காந்தி கடந்த 20 வருடங்களாக இருந்து வருகிறார். அவரின் கணவர் ராஜீவ்காந்தியின் மரணத்துக்குப் பின்னர், ஏறக்குறைய 7 ஆண்டுகள் கழித்து கடந்த 1997-ல் காங்கிரஸ் கட்சியின் தலைவராகச் சோனியா பொறுப்பேற்றார். அவர் தலைமையில் காங்கிரஸ் கட்சி பல ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முதன்முறையாக ஆட்சி அமைத்தபோது, சோனியா பிரதமராவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் மரணங்கள் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்ற விமர்சனம் இருந்ததால், பிரதமராக மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டார்.

அதன் பின்னர் 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடந்தது. 2014-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அதன்பின்னர், காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்திக்கு விட்டுக் கொடுத்து சோனியா விலக வேண்டும் என்ற கருத்து பரவலாக எழுந்தது. இந்தச் சூழலில், சமீபத்தில் நடந்த காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதனால், காங்கிரஸ் தலைவராக ராகுல் தேர்வு செய்யப்படுவது உறுதியானது. அதுகுறித்து நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி, காங்கிரஸ் தலைவராக ராகுல் பதவியேற்க இருக்கிறார். 

இந்தநிலையில், அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்க விரும்புவதாகச் சோனியா அறிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவராக நீண்டகாலம் பதவி வகித்தவர் என்ற பெருமைபெற்ற சோனியா, `எனது வேலையில் இருந்து ஓய்வுவெடுக்க விரும்புகிறேன்’ என்றார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல்நாளில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார். அதேநேரம், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியாவே தொடர்ந்து நீடிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 2019-ம் ஆண்டு வரை அவர் இந்தப் பதவியில் நீடிக்க இருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!