வெளியிடப்பட்ட நேரம்: 09:43 (16/12/2017)

கடைசி தொடர்பு:09:58 (16/12/2017)

கங்கையில் ‘பிளாஸ்டிக்’ பொருள்கள் பயன்படுத்தத் தடை

கங்கை நதி அருகே பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தத் தடை விதிப்பதாக, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

கங்கை

கங்கையில் பக்தர்கள் அதிக அளவில் பிளாஸ்டிக் குப்பைகளை விட்டுச்செல்வதால், கங்கை நதியும் அதன் கரையும் அதிக அளவில் மாசுபடுகிறது. இதனால், சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்படுகிறது. மேலும், கங்கை நதியின் சுற்றுச்சூழலைக் காக்க, நதியிலும் நதிக்கரையிலும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர் எம்.சி. மேத்தா மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்ற போது, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவரும், நீதிபதியுமான ஸ்வதந்தர்குமார், கங்கை நதி மற்றும் நதிக்கரையில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டுக்குத் தடை விதிப்பதாக உத்தரவிட்டார். மேலும், உத்தரகாண்ட் மாநிலத்தில், கங்கை நதி ஓடும் புனித ஸ்தலங்களான ஹரித்துவார், ரிஷிகேஷ் போன்ற இடங்களில் மெல்லிய பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், கத்திகள், கப்புகள் போன்றவற்றைப் பயன்படுத்தவும் நீதிபதி தடை விதித்தார்.