வெளியிடப்பட்ட நேரம்: 04:45 (18/12/2017)

கடைசி தொடர்பு:07:42 (18/12/2017)

ராகுல் காந்திக்கு அனுப்பிய நோட்டீஸை திரும்பப் பெற்ற தேர்தல் ஆணையம்..!

தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பிய நோட்டீஸை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றது. 


குஜராத் சட்டப்பேரவைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னதாக, குஜராத் தேர்தல் பற்றி ராகுல் காந்தி அளித்த பேட்டிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. ஓட்டுப்பதிவு முடிவதற்கு முந்தைய 48 மணி நேரத்துக்குள், தேர்தல் தொடர்பான பேட்டியை ஒளிபரப்புவது, மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளை மீறிய செயல் ஆகும். இதுபற்றி தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து, அந்தப் பேட்டிகளை ஒளிபரப்பாது நிறுத்துமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேலும், இந்த விதிமீறலில் ஈடுபட்டவர்கள்மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யுமாறு குஜராத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டது. அத்துடன், பேட்டி அளித்த ராகுல் காந்தியிடம் விளக்கம் கேட்டு, அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் 18-ம் தேதி மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறியது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பிய நோட்டீஸை தேர்தல் ஆணையம் இன்று இரவு திரும்பப் பெற்றது.