மோடியின் ஆயுதமும் குஜராத் தேர்தல் முடிவும்!

அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையைவிட அதிக இடங்களில் பா.ஜ.க முன்னிலை வகித்து வருகிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில், பா.ஜ.க 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 

modi
 

182 சட்டசபை உறுப்பினர்களைக்கொண்ட குஜராத் சட்டசபைக்கு, கடந்த 9 மற்றும் 14-ம் தேதிகளில் தேர்தல் நடந்தது. இந்த மாநிலத்தில், தொடர்ந்து 22 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக பா.ஜ.க உள்ளது. இதனால், இந்த முறை ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள பிரதமர் மோடியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்

rahul
 

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களால் குஜராத் மக்களுக்கு பா.ஜ.க மீது அதிருப்தி ஏற்பட்டது. இந்த அதிருப்தி, இன்றைய தேர்தல் முடிவுகளில் அப்பட்டமாக வெளியாகியுள்ளது.  வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே பா.ஜ.க, காங்கிரஸ்  மாறி மாறி முன்னிலை வகித்தன. ஒருகட்டத்தில் காங்கிரஸ், பா.ஜ.க-வைவிட பத்து தொகுதிகளில் முன்னிலை வகித்தது.  இது, பா.ஜ.க-வுக்கு கண்டிப்பாக கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

'குஜராத் மண்ணின் மைந்தன்' என்று அழைக்கப்படும் பிரதமர் மோடி, குஜராத்தில் இரண்டாம் கட்ட பிரசாரத்தின்போது மக்கள் மத்தியில் கண்ணீர்விட்டு அழுதார். ”ஏன் என்னை வெறுக்கிறார்கள்?  குஜராத்தில் நான் ஒரு தாழ்த்தப்பட்டவர் என்பதாலா” என்று வேதனைப்பட்டார். ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு ஆகியவற்றைத் தாண்டி, மோடியின் அன்று சிந்திய கண்ணீர்தான் இன்று வெற்றியை தேடித் தந்ததாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

குஜராத்தைத் தொடர்ந்து, இமாசலப் பிரதேசத்திலும் பா.ஜ.கவின் வெற்றி உறுதியாகியுள்ளது. 68 சட்டமன்ற உறுப்பினர்களைக்கொண்ட இமாசலப் பிரதேசத்துக்கு, கடந்த நவம்பர் மாதம் 9-ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த மாநிலத்தில் ஏற்கெனவே காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்த இரு மாநிலங்களிலும் பா.ஜ.க-வே ஆட்சியைப் பிடிக்கும் எனத் தேர்தலுக்குப் பின் வந்த கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. அதன்படி, பா.ஜ.க இரு மாநிலங்களையும் கைப்பற்ற உள்ளது. இருப்பினும் காங்கிரஸ், இரு மாநிலத் தேர்தலிலும் பா.ஜா.க-வுக்கு கடுமையான போட்டியாளராகத் திகழ்ந்து, இனிவரும் காலங்களில் பா.ஜ.க மிகவும் கவனமாகக் காய் நகர்த்த வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!