வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (18/12/2017)

கடைசி தொடர்பு:15:40 (18/12/2017)

”பின்னடைவுதான்; ஆனால் தோற்கவில்லை” : கலகலக்கும் காங்கிரஸ் கூடாரம்

'குஜராத் தேர்தலில் பின்னடைவுதான் என்றாலும், காங்கிரஸுக்குத் தோல்வியில்லை' என்றே உற்சாகக்குரல்கள் காங்கிரஸ் ஆதரவாளர்களிடம் எதிரொலித்து வருகின்றன.

ராகுல் காந்தி

குஜராத் தேர்தல் முடிவுகள், நாட்டின் அரசியல் போக்கையே நிர்மானிக்கப்போகும் அளவுக்கு மிகவும் அதிகப்படியாகவே பேசப்பட்டது. குஜராத் தேர்தலில் ஐந்து முறை ஆட்சியிலிருந்த பா.ஜ.க-வை எதிர்கொள்ள நேரடியாகக் களமிறங்கியது காங்கிரஸ். சூறாவளிப் பிரசாரங்கள் குஜராத்தில் மட்டுமே அதிகப்படியாக மேற்கொள்ளப்பட்டன. தேர்தல் நெருங்கும் வேளையில், காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றார் ராகுல் காந்தி. புதிய தலைவர் கிடைத்த உற்சாகத்தை நாடு முழுவதும் காங்கிரஸ் ஆதரவாளர்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடினர்.

இந்த உற்சாக மனநிலையைத் தகர்க்கும் வகையில், குஜராத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் மத்தியில் இடியாக வந்து விழுந்தது. குஜராத்தில் ஆறாவது முறையாக மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது பா.ஜ.க. இந்த முடிவு இடிபோல விழுந்தாலும், காங்கிரஸ் தொண்டர்கள் துவண்டுவிழப்போவதில்லை என்றே ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். 

காங்கிரஸ் கட்சிக்குத் தோல்வி என்றாலும், எந்த மாநிலத்திலும் பெரிய வித்தியாச அளவில் பா.ஜ.க முன்னிலை பெறவில்லை. இதனால் வரும் காலங்களில், ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் மிகப்பெரும் தாக்கத்துடன் முன்வரும் என்றே ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர்.