“6-வது முறையாகவும் குஜராத்தில் ஓயாத மோடி அலை..!” | Gujarat Election Counting: BJP secures victory in the state

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (18/12/2017)

கடைசி தொடர்பு:17:08 (18/12/2017)

“6-வது முறையாகவும் குஜராத்தில் ஓயாத மோடி அலை..!”

நாட்டில் மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளான குஜராத் தேர்தல் வெற்றி பி.ஜே.பி-யைத் திக்குமுக்காட வைத்துள்ளது. பிரதமரின் சொந்த மாநிலத்தில் கிடைத்துள்ள வெற்றி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யை உற்சாக நடைபோட வைத்திருக்கிறது. ஏற்கெனவே 2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கும் பி.ஜே.பி., இந்தத் தேர்தல் வெற்றிமூலம் எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

மோடி

குஜராத்தை 1995-ம் ஆண்டிலிருந்து பி.ஜே.பி. தன் வசம் வைத்திருக்கிறது. 2002-ம் ஆண்டு முதல்வராக நரேந்திர மோடி பதவி ஏற்றபிறகு, அந்த மாநிலத்தையே பி.ஜே.பி-யின் கோட்டையாக மாற்றிவிட்டார். 22 ஆண்டுகளாக குஜராத் பி.ஜே.பி-யின் கோட்டையாக இருந்துவருகிறது. ‘‘இந்தத் தேர்தலில் பி.ஜே.பி. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்’’ என்று கருத்துக்கணிப்புகளில் சொல்லப்பட்டாலும்... பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி, பட்டேல் சமூகத்தினரின் போராட்டங்கள் உள்ளிட்டவை ஆளும் கட்சிக்குப் பின்னடைவைக் கொடுக்கும் என்று எதிர்க் கட்சிகள் நம்பிக்கையோடு இருந்தன. ஆனால், அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, மீண்டும் வெற்றிபெற்று சாதனை சரித்திரத்தில் இடம்பிடித்துவிட்டது பி.ஜே.பி.

ஒருகாலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த குஜராத்தில், 1990-ம் ஆண்டு பி.ஜே.பி. முதன்முதலாகத் தனது தலையைத் தூக்க ஆரம்பித்தது. அப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் 182 இடங்களில் போட்டியிட்ட பி.ஜே.பி., 67 இடங்களில் வெற்றிபெற்றது. 33.86 சதவிகித ஓட்டுகளை அந்தக் கட்சி பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு 33 இடங்களும் ஜனதா தளம் கட்சிக்கு 70 இடங்களும் கிடைத்தன. சுயேச்சைகள் 11 இடங்களில் வெற்றிபெற்றனர். அப்போது, பி.ஜே.பி. ஆதரவுடன் ஜனதா தளம் ஆட்சி அமைத்தது. 1990-ம் ஆண்டு மார்ச் முதல் அக்டோபர் வரை  8 மாதங்கள் அந்த ஆட்சி நீடித்தது. பின்னர், காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஜனதா தளம் ஆட்சியை நடத்தியது.

1995-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. 182 இடங்களில் போட்டியிட்டு 121 இடங்களில் மகத்தான வெற்றிபெற்றது. 42.51 சதவிகித ஓட்டுகளை வாங்கியது. 45 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் 32.99 சதவிகித ஓட்டுகளை வாங்கியது. இந்தத் தேர்தலில்  ஆட்சி அமைக்க முழு மெஜாரிட்டி கிடைத்ததால் ஜேசுபாய் பட்டேல் பி.ஜே.பி. முதல்வராகப் பதவி ஏற்றார். 1996-ம் ஆண்டு இரண்டு மாதங்கள் அங்கு, ஜனாதிபதி ஆட்சி இருந்தது. அதன்பின்னர், சங்கர் சிங் வகேலா முதல்வர் ஆனார். 

தேர்தல் பிரசாரம்

1998-ம் ஆண்டு நடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் பி.ஜே.பி. 117 இடங்களில் வெற்றிபெற்றதுடன், 44.81 சதவிகித ஓட்டுகளை வாங்கியது. காங்கிரஸ் கட்சி 53 இடங்களில் வெற்றிபெற்று 35.28 சதவிகித ஓட்டுகளை வாங்கியது. முழு மெஜாரிட்டியுடன் ஜேசுபாய் பட்டேல் முதல்வர் ஆனார். பின்னர், 2001-ம் ஆண்டு நரேந்திர மோடி முதல்வராகப் பொறுப்பேற்றார். 2002-ம் ஆண்டு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 49.85 சதவிகித ஓட்டுகளுடன் 127 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் முதல்வர் ஆனார் மோடி. காங்கிரஸ் கட்சி 39.59 சதவிகித ஓட்டுகளுடன் 51 இடங்களில் வெற்றிபெற்றது. 2007-ம் ஆண்டு நடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 49.12 சதவிகித ஓட்டுகளுடன் 117 இடங்களில் பி.ஜே.பி. வெற்றிபெற்றது. மீண்டும் முதல்வர் ஆனார் மோடி. 39.63 சதவிகித ஓட்டுகளுடன் 59 இடங்களில் காங்கிரஸ் ஜெயித்தது. 

2012 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் பி.ஜே.பி. 115 இடங்களில் வென்றது. வாங்கிய ஓட்டுகள் 48.30 சதவிகிதம். காங்கிரஸ் கட்சி 61 இடங்களில் வென்றது. வாங்கிய ஓட்டுகள் 40.59 சதவிகிதம். பின்னர், நாடளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, 2014-ம் ஆண்டு மே மாதம், மோடி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனந்தி பென் பட்டேல் முதல்வராகப் பொறுப்பேற்றார். முதல்வர் பதவியில் இருந்த ஆனந்தி பென், 808 நாள்கள் கழித்து தன் பதவியை ராஜினாமா செய்தார். விஜய் ரூபானி புதிய முதல்வராகப் பொறுப்பேற்றார். அவருடைய தலைமையில்தான் 17-வது சட்டமன்றத் தேர்தலை பி.ஜே.பி. சந்தித்தது. இந்தத் தேர்தலில் கடந்த 9 மற்றும் 14-ம் தேதிகளில் நடந்த இருகட்ட வாக்குப்பதிவுகளில் 68.41 சதவிகித ஓட்டுகள் பதிவாயின. இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. மதியம், இரண்டரை மணி நேர நிலவரப்படி 103 இடங்களில் பி.ஜே.பி-யும், 72 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் ஓர் இடத்திலும், சுயேச்சைகள் 6 இடங்களிலும் முன்னணியில் இருந்தன.

இந்தத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பி.ஜே.பி. பெறவில்லை என்றாலும், கடந்த தேர்தலைவிட குறைவான சீட்களைப் பெற்று மீண்டும் ஆட்சியமைக்க இருக்கிறார்கள். 22 ஆண்டுகால ஆட்சியின் சலிப்பின் வெளிப்பாடு இது என்று சொல்லப்பட்டாலும், மோடி மந்திரம் குஜராத்திலும் வேலை செய்திருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்