வெளியிடப்பட்ட நேரம்: 18:05 (18/12/2017)

கடைசி தொடர்பு:18:05 (18/12/2017)

குஜராத் தேர்தல் 2017: பச்சை டீ-ஷர்ட்..கருப்பு ட்ரவுசர்...ஸ்போர்ட்ஸ் ஷூ.. - ஜிக்னேஷ் மெவானி ஜெயித்த பின்னணி!

மொத்தம் 63.41 சதவிகித வாக்குப்பதிவு, நோட்டாவுக்கு வாக்களித்த 2 லட்சம் வேட்பாளர்கள் எனப் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது 2017 குஜராத் சட்டமன்றத் தேர்தல். ‘பி.ஜே.பி-யின் கோட்டை’ குஜராத் எனப்பட்டாலும்,  2012 தேர்தலில் வெற்றிபெற்ற 119 இடங்களுடன் ஒப்பிடுகையில், இந்த முறை வெற்றிச் சதவிகிதம் குறைவாகவே உள்ளது. பி.ஜே.பி-யின்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள்தாம்  அவர்களின் இந்தச் சிறுசறுக்கலுக்குக் காரணமாக இருக்கும் என்று ஊகிக்கலாம். ஆனால், இந்தமுறை தேர்தலில் களமிறக்கப்பட்ட காங்கிரஸின் அல்பேஷ் தாகூர், சுயேச்சை வேட்பாளரான ஜிக்னேஷ் மெவானி மற்றும் பட்டேல் சமூகத்தைச் சேர்ந்த ஹர்திக் பட்டேல் ஆகியோர்களின் பங்கு இதில் அதிகம். ஹர்திக் பட்டேல் தோல்வியைத் தழுவினாலும் அல்பேஷ் தாகூரும் ஜிக்னேஷ் மெவானியும் வெற்றியடைந்துள்ளார்கள். குறிப்பாகச் சுயேச்சை வேட்பாளரான ஜிக்னேஷ் மெவானி 63,000 வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றிபெற்றுள்ளார். சுயேச்சை வேட்பாளர் என்பதைக் கடந்து ஜிக்னேஷ் மெவானிக்குப் பல சுவாரஸ்ய முகங்கள் உண்டு. ஊடகங்களும் மற்ற அரசியல்வாதிகளும் விமர்சிப்பதற்கு இடமளிக்காமல், “நான் ரொமான்டிக், கவிஞன் கூடவே கொஞ்சம் படாடோபக்காரன்” எனத் தன்னைத்தானே விமர்சித்துக்கொண்டவர். 

ஜிக்னேஷ் மெவானி

சரி, இதில் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப்போகிறது? இது மட்டுமே சுவாரஸ்யம் இல்லை. 2017 தேர்தலுக்கான பிரசாரத்தை மேற்கொண்டவரின் பிரசார யுக்தியே மற்ற வேட்பாளர்களைக் காட்டிலும் வித்தியாசமாக இருந்தது. 

பார்த்தாலே மதிப்பை ஏற்படுத்தும் வெள்ளைக் குர்தா, அதற்கேற்ப கம்பீரமான ஒரு குஜராத்தி வகையறா முண்டாசு என வலம்வந்து வாக்குச் சேகரித்த வேட்பாளர்களிடையே, பச்சை கலர் ஷர்ட், அதற்கு ஏற்றது மாதிரி ஒரு கறுப்பு ட்ரவுசர், காலில் ஸ்போர்ட்ஸ் ஷூவுடன் தான் போட்டியிட்ட வத்காம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். மெவானி போட்டியிடுகிறார் என்பதற்காகவே அந்தத் தொகுதியில் தனது வேட்பாளர்களை அறிவிக்காமல் விட்டுக்கொடுத்தது காங்கிரஸ் தரப்பு. தேர்தல் நடந்த அன்று... மெவானிக்கு எதிராகச் செயல்பட்ட எதிர்தரப்பு, வாக்களிக்கும் இயந்திரத்தில் அவரது சின்னமான தையல் இயந்திரத்திலும் அவரது புகைப்படத்தின்மீதும் மை ஊற்றி இருந்தது. “இத்தனைக்கும் இயந்திரத்தைச் சுத்தப்படுத்தித்தானே வைத்திருந்தேன். எப்படி மை வந்தது” என்று கேள்வி எழுப்பினார் தேர்தல் அதிகாரி. ஆனால், அதற்குள் 700-க்கும் மேற்பட்ட வாக்குகள் அங்கே பதிவாகி இருந்தன. அதனால் தற்காலிகமாக அங்கே தேர்தலும் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. 2.42 லட்சம் மக்களுடைய இந்த வத்காம் தொகுதியில் 74,000 இஸ்லாமியர்களும், 42,000 தலித்களும் அடங்குவர். தேர்தல் நிறுத்தப்பட்ட சிலமணி நேரங்களில்கூட அங்கே குழுமியிருந்த வாக்காளர்கள், “இயந்திரத்தில் ஜிக்னேஷின் முகத்தின்மீது மை பூசப்பட்டிருப்பது அவருக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் களங்கம். இவர்கள் நேர்மையாகத் தேர்தலை நடத்தட்டும். நாங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இங்கே காத்துக் கொண்டிருக்கிறோம்” என்று குறிப்பிட்டனர். மக்கள் இப்படி வெளிப்படையாகவே ஜிக்னேஷுக்கு ஆதரவளிக்க... அங்கே காங்கிரஸ் இளைஞர்களும் சேர்ந்து தீவிரமாக அவருக்காக வாக்குச் சேகரித்தார்கள் என்பதும் ஒரு காரணம்.     

காங்கிரஸ் சொன்னால் அங்கே வத்காம் தொகுதி மக்கள் கேட்பார்களா என்கிற சந்தேகம் உங்களுக்கு எழலாம்? உண்மையில், வத்காம் காங்கிரஸின் பாதுகாப்பான தொகுதி எனலாம். கடந்த முறையும், அதற்கு முந்தைய 2007 தேர்தலிலும் காங்கிரஸ் மட்டுமே அங்கு வெற்றிபெற்றும் வந்திருக்கிறது. தனது வெற்றித் தொகுதியை விட்டுக்கொடுத்த காங்கிரஸ், அதோடு மட்டுமல்லாமல் அங்கே ஜிக்னேஷ் மெவானி போட்டி அறிவிப்புக்கு முன்பாகவே அவருக்கான பிரசாரத்தைத் தொடங்கியிருந்தது. இந்த பலம்தான், ‘தேர்தலில் போட்டியிடவே மாட்டேன்’ என்று அறிவித்த ஜிக்னேஷை, அங்கே போட்டியிட வைத்தது. தற்போது வெற்றியும் பெறவைத்திருக்கிறது. 

‘ராஷ்ட்ரிய தலித் அதிகார் மன்ச்’ என்கிற ஒடுக்கப்பட்டோருக்கான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜிக்னேஷ். 2016-ல் குஜராத் மாநிலம் உனாவில், இறந்த மாட்டை தோலுரித்ததற்காக நான்கு தலித் இளைஞர்களைப் பசுப் பாதுகாவலர்கள் சிலர் கட்டிவைத்து இரும்புக் கம்பியாலும் மாட்டை அடிக்கும் சாட்டையாலும் தாக்கினார்கள். சமூக வலைதளம் எங்கும் பரவிய அந்தச் சம்பவத்தின் வீடியோவால் நாடெங்கிலும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்துதான் ஜிக்னேஷ் மெவானி 20,000 தலித் இளைஞர்கள் புடைசூழ அகமதாபாத்திலிருந்து உனாவுக்குப் பயணம் சென்றார். பசுத்தோல் உரிப்பதை பரம்பரைத் தொழிலாகச் செய்ய வேண்டாம் என்பதும் தலித்களுக்கு நில உரிமை வேண்டும் என்பதும் அந்தப் பயணத்தின் முக்கியக் கோரிக்கையாக இருந்தது. இதையடுத்துதான் ஜிக்னேஷ் மக்களிடையே குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினரிடையே பெரிதும் பேசப்பட்டார்.  

ஜிக்னேஷ் மெவானி

தேர்தல் முடிவுகள் அறிவிப்புக்கு முன்பு, ‘ஹஃபிங்டன் போஸ்ட்’ என்னும் ஆன்லைன் இதழுக்கு ஒரு சுவாரஸ்யப் பேட்டியை அளித்திருந்தார் ஜிக்னேஷ் மெவானி, அதில்.. “ 18-ம் தேதி அறிவிக்கப்படும் முடிவுகள் எனக்கு ஆதரவாகவும் இருக்கலாம் அல்லது எதிராகவும் மாறலாம். நான் ஜெயிக்கும் நிலையில், எனது தொகுதியிலிருந்து எண்ணற்ற இளைஞர்களைச் சமூகப் பணிகளுக்காக ஈடுபடுத்த முடியும். இவர்கள் என்மீது கொண்டிருக்கும் அன்பினால் அதைச் செய்வார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஒருவேளை நான் தோற்றால், வீதியில் இறங்கி மீண்டும் மக்களுக்காக எனது பணியைத் தொடருவேன். ஏனென்றால் அரசியல் என்பது வெறும் தேர்தலோடு நின்றுவிடுவதில்லை” என்றார்.

“தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு உங்களது அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்” என்று அந்த நேர்காணலில் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “எனக்குத் தேவை 160 தலித் இளைஞர்கள். அவர்களது வாழ்நாளில் வெறும் 15 நாள்களை மட்டும் எனக்காகச் செலவிடச் சொல்வேன். அந்த 15 நாள்களில் அவர்கள் என் தொகுதியில் இருக்கும் 160 நகராட்சிகளுக்குச் செல்லச் சொல்வேன். இந்த நகராட்சிகளில் இருக்கும் அத்தனை துப்புரவுத் தொழிலாளர்களுக்கும் அவர்களது அடிப்படைச் சம்பளம்கூட மறுக்கப்படுகிறது. இந்த 160 இளைஞர்களின் ஒருங்கிணைப்பில் அவர்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்துவேன். எனது திட்டத்தில் நான்கில் ஒருபகுதி வெற்றியடையும் சூழலில்கூடக் குறைந்தபட்சமாக 15,000 பணியாளர்களுக்குச் சரிவரச் சம்பளம் கிடைக்கும். மேலும் தலித் இஸ்லாமியர்கள் ஒற்றுமைக்காகவும், தலித்களிலும் ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கும் வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த தலித்களை முன்னேற்றுவதற்கும் உழைப்பேன். சட்டமன்றத்துக்குச் சென்று பேச வேண்டியவன் போராடலாமா என நீங்கள் கேட்கலாம். நான் 90 சதவிகித போராட்டவாதிதான்” என்றார்.

90 சதவிகித போராட்டவாதிக்கு வாழ்த்துகள்!        

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்