வெளியிடப்பட்ட நேரம்: 21:47 (18/12/2017)

கடைசி தொடர்பு:07:57 (19/12/2017)

குஜராத்தில் 99 தொகுதிகளைக் கைப்பற்றிய பா.ஜ.க.! 77 இடங்களில் காங்கிரஸ் வெற்றி

குஜராத் மாநில சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 182 இடங்களுக்குமான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 


குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு இம்மாதம் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இருகட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் 68.41 சதவிகித ஓட்டுகள் பதிவான நிலையில், இன்று வாக்குகள் எண்ணி முடிவுகளைத் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றதாக தகவல்கள் வெளியான நிலையில், மொத்தமுள்ள 182 இடங்களில் 99 இடங்களில் பா.ஜ.க. வென்று 6-வது முறையாக ஆட்சியமைக்கிறது. காங்கிரஸ் கட்சி 77 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும், பாரதிய பழங்குடியினர் கட்சி 2 மற்றும் சுயேச்சைகள் 3 இடங்களிலும் வென்றுள்ளனர். கடந்த 2012 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் பா.ஜ.க. 115 இடங்களில் வென்றது. வாங்கிய ஓட்டுகள் 48.30 சதவிகிதம். காங்கிரஸ் கட்சி 61 இடங்களில் வென்றது. வாங்கிய ஓட்டுகள் 40.59 சதவிகிதமாகும். அதேபோல், இமாசலப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், பா.ஜ.க. 44 இடங்களிலும், காங்கிரஸ் 20 இடங்களிலும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர் ஆகியோர் தலா ஒரு இடத்திலும் வென்றுள்ளனர்.