”தோல்வியைக் கொண்டாடும் மோடி” : ராகுல் பாய்ச்சல்

”குஜராத் தேர்தலில், மோடி தனது தோல்வியை வெற்றி எனக் கொண்டாடிவருகிறார்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி

குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு, இம்மாதம் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் 68.41 சதவிகித ஓட்டுகள் பதிவான நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து முடிவுகள் வெளியிடப்பட்டன.  அதில், மொத்தமுள்ள 182 இடங்களில் 99 இடங்களை பா.ஜ.க வென்று, 6-வது முறையாக ஆட்சியமைக்கிறது. காங்கிரஸ் கட்சி 77 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும், பாரதிய பழங்குடியினர் கட்சி 2 மற்றும் சுயேச்சைகள் 3 இடங்களிலும் வென்றுள்ளன. கடந்த 2012 சட்டமன்றப் பொதுத்தேர்தலில், பா.ஜ.க. 115 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கட்சி 61 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது.

மொத்தத்தில், பா.ஜ.க 99 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளதால், இரண்டு எம்.பி-க்களை இழக்கும் அபாயத்தில் அக்கட்சி உள்ளது. 2018 ஏப்ரல் 2-ம் தேதியுடன் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, பர்சோத்தம் ரூபாலா, சங்கர் பாய் வேகாத், மன்சுக் மண்டாவியா ஆகியோரின் பதவிக்காலம் நிறைவுபெறுகிறது. இதனால், அடுத்து நடக்கும் எம்.பி பதவிக்கான தேர்ந்தெடுப்பில் பா.ஜ.க இரண்டு இடங்களை இழக்கிறது.

இந்நிலையில், குஜராத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் ராகுல் காந்தி கூறுகையில், “குஜராத் தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க வெற்றி பெற்றாலும் மோடி தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். தோல்வியை வெற்றி என நினைத்துக்கொண்டாடிவரும் மோடி, மக்கள் தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இன்னும் உணரவில்லை” எனக் கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!