வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (20/12/2017)

கடைசி தொடர்பு:13:15 (20/12/2017)

ராணி பத்மாவதிக்கு சிலை!- பா.ஜ.க-வின் அடுத்த தேர்தல் வியூகம்?

'ராணி பத்மாவதி-யின் சிலை, விரைவில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூரில் நிர்மானிக்கப்படும் என அம்மாநில உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

பத்மாவதி

Representative image

கடந்த சில மாதங்களாக, பல சர்ச்சைகளையும் விவாதங்களையும் எழுப்பிய பெயர், ‘ராணி பத்மாவதி’. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனின் நடிப்பில் உருவான திரைப்படம், 'பத்மாவதி'. இத்திரைப்படத்தில், ராஜபுத்திரர்களின் மனம் புண்படும்படியான வரலாற்றுத் திரிபுகள், ராணி பத்மாவதி நடனமாடுவது, கில்ஜிக்கும் ராணி பத்மாவதிக்கும் இடையிலான காட்சிகள் ராணியை சிறுமைப்படுத்துகின்றன. அவர், கீழ்த்தரமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளார் போன்ற பல குற்றச்சாட்டுகளுடன், கண்டனங்களும் மிரட்டல்களும் படக் குழுவினருக்கு வந்தன.

இந்நிலையில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநில அரசுகளும் ‘பத்மாவதி’ திரைப்படம் திரையிடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இரு மாநில மக்களும் பயங்கர எதிர்ப்பு தெரிவிப்பதாகவே கூறப்பட்டது. இந்தச் சூழலில், 'ராஜஸ்தானி உதய்பூர் நகரில் ராணி பத்மினி-க்கு சிலை அமைக்கப்படும்' என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ராஜ்ஸ்தான் உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கட்டாரியா கூறுகையில், “ஆறு மாத காலத்துக்கு முன்பே உதய்பூர் நகரில் மாநிலத்தின் உண்மை நாயகர்களின் சிலைகள் வடிவமைக்கப்பட்டு நிர்மானிக்கப்படும் என அறிவித்திருந்தோம்.  அதன்படி ராணி பத்மினிக்கும் ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்” என்று கூறினார்.

’ராஜஸ்தான் மாநில பொதுத்தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருப்பதால், பா.ஜ.க மேவார், ராஜ்தானியர்கள் என உள்ளூர் மக்களின் வாக்குகளைப் பெற ராணி பத்மினிக்கு சிலை அமைக்க முடிவெடுத்துள்ளனர்’ என எதிர்க்கட்சிகள் புலம்பி வருகின்றன.