சூப்பர் பிராண்ட் நிறுவனமாக இருந்த யுனிடெக் திவாலானது எப்படி?

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் செய்த நிதி மோசடியையும், அதன் உரிமையாளர் ராமலிங்க ராஜூ சிறையில் அடைக்கப்பட்டதையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.  தற்போது சத்யம் கம்ப்யூட்டர்ஸ், டெக் மஹிந்திராவாக மாறி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  ஆனால், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் போலவே பெரும் நிதி மோசடியில் சிக்கியிருக்கிறது யுனிடெக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம்.

யுனிடெக்

ஒருகாலத்தில், ரியல் எஸ்டேட் துறையின் ஜாம்பவான் என்றும், பவர் பிராண்ட் என்றும் புகழப்பட்ட யுனிடெக், இன்று சரமாரியான வசைகளைச் சந்தித்து வருகிறது. இதுதான் இன்று ஊடகங்களின் ஹாட் டாப்பிக். அப்படியென்ன யுனிடெக் ரியல் எஸ்டேட் நிறுவனம் மோசடி செய்தது? 

டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த யுனிடெக் நிறுவனம், ஆரம்பத்தில் மண்வள ஆராய்ச்சி செய்யும் கன்சல்டிங் நிறுவனமாகவே தொடங்கப்பட்டது. இதன் உரிமையாளர் ரமேஷ் சந்திரா, சக ஐ.ஐ.டி நண்பர்களுடன் சேர்ந்து 1972-ல் இந்த நிறுவனத்தைத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகளில் கட்டுமானங்கள் தொடர்பான ஒப்பந்தங்களை நிறைவேற்றும் பணியைச் செய்ய ஆரம்பித்து, அந்த அனுபவத்தின் அடிப்படையில் மக்களின் வீடு வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தின் மீது நம்பிக்கை வைத்து, ரியல் எஸ்டேட் துறைக்குள் நுழைந்து, அபரிமிதமான வளர்ச்சியை அடைந்தது. பங்குச் சந்தையில் பட்டியலான இரண்டாவது ரியல் எஸ்டேட் நிறுவனமும் இதுதான்.

2008-ல் ரியல் எஸ்டேட் துறை உச்சத்தில் இருந்தது. அப்போது இந்த நிறுவனத்தின் பங்கு விலை ரூ.526 ஆக இருந்தது. இதன் சந்தை மதிப்பு ரூ.85,236 கோடியாக இருந்தது. ரமேஷ் சந்திராவின் குடும்பம் கோடீஸ்வரக் குடும்பமாக மாறியது. நிறுவனத்திடம் உபரியாக மட்டுமே சில ஆயிரம் கோடி இருந்தது. ஆனால், இந்த வளர்ச்சி பின்னாளில் பெரும் சிக்கலுக்குள்ளானது. நன்றாக வளர்ந்துகொண்டிருந்த யுனிடெக் நிறுவனத்துக்கு காலம் ஒரு செக் வைத்தது. ரியல் எஸ்டேட் துறை படிப்படியாக, தன் கவர்ச்சியை இழந்தது. 

ரியல் எஸ்டேட் துறை தேக்கம் அடைய ஆரம்பித்த நிலையில் நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கியது இந்நிறுவனம். இதற்காகப் பங்கு விற்பனை மூலம் பல ஆயிரம் கோடியும், வீடு வாங்க விரும்பியவர்களிடமிருந்து பல ஆயிரம் கோடியும் நிதி திரட்டியது. ஆனால், இந்த நிதியை வைத்து அந்நிறுவனத்தினால் வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. கூடவே இன்னொரு பிரச்னையும் உருவானது.

ரமேஷ் சந்திராவின் மகன் சஞ்சய் சந்திரா டெலிநார் என்ற வெளிநாட்டு டெலிகாம் சேவை நிறுவனத்துடன் இணைந்து யுனினார் என்ற டெலிகாம் சேவையைத் தொடங்கினர். அனுபவமில்லாத துறை என்பதால், நிறுவனம் பெரிய அளவில் அடி வாங்கியது. 2 ஜி வழக்கிலும் சஞ்சய் சந்திராவின் பெயர் அடிபட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் யுனினாரை ‛டெலினா’ நிறுவனமே எடுத்துக்கொண்டு இறுதியில் இந்தியாவில் பிசினஸை நிறுத்தியும் விட்டது. 

இதற்கிடையில் வீடு கட்டித் தருவதாகப் பணத்தை வாங்கியவர்களிடம் வீட்டையும் கொடுக்கவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை என்று வழக்குகள் குவிந்தன. பின்னர் நிறுவனத்தின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சமீபத்தில் யுனிடெக் நிறுவனத்தை அரசு கையகப்படுத்திக்கொள்வதற்கான முயற்சி நடந்தது. அதற்கு தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்தது. அந்த ஒப்புதலை அடுத்து, பங்கு விலை உயர்ந்து வர்த்தகமானது. ஆனால், உச்ச நீதிமன்றம் இந்த ஒப்புதலை தள்ளுபடி செய்து தடை விதித்துள்ளது.

இதனால் யுனிடெக் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த வாரத்தில் ஒரே நாளில் 13 சதவிகிதம் விலை குறைந்தது. 2008-ல் ரூ. 500-க்கும் மேல் இருந்த இந்தப் பங்கின் விலை தற்போது வெறும் ரூ. 7-க்கு வர்த்தகமாகிறது. 

மிகப் பெரிய சூப்பர் பிராண்ட் நிறுவனமாக இருந்த யுனிடெக் முற்றிலும் திவாலாகி உள்ளது. வீடு கட்டித் தருவதற்காகப் பணம் கொடுத்தவர்கள் பணத்தை முற்றிலும் பறிகொடுத்துவிட்டு நிர்கதியாக நிற்கின்றனர். அரசு சத்யம் கம்ப்யூட்டர்ஸை கையகப்படுத்தியது போல் இந்த நிறுவனத்தையும் கையகப்படுத்தினால் இவர்களுக்கு ஒரு வழி பிறக்கலாம் என்று நம்பப் படுகிறது. ஆனால், நேற்று சத்யம், இன்று யுனிடெக் என்று  தொடர்ந்தால் நாளை எந்த நிறுவனமும் இதைப் பயன்படுத்திக்கொண்டு மோசடி செய்ய வாய்ப்புள்ளது. எனவே பணத்தை எந்த நிறுவனத்திலும் முதலீடு செய்யும்முன் கவனமாக இருக்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!