வெளியிடப்பட்ட நேரம்: 16:26 (21/12/2017)

கடைசி தொடர்பு:16:26 (21/12/2017)

ஜிமிக்கி கம்மல் ஷெரில், பத்மாவதி தீபிகா, சங்கர் கௌசல்யா - 2017-ன் வைரல் பெண்கள்! #2017Rewind

மாத இறுதி நாள்களில் மிகுந்திருக்கும் பணத்தை எண்ணுவது, ஸ்வைப் செய்த க்ரெடிட், டெபிட் கார்டுகளின் பில்களை ஆராய்வதுமாகக் கழியும். அதுவே வருட இறுதியாக இருந்தால்... அந்த வருடத்தில் நமக்குச் சாதகமாக நடந்தது முதல் பாதகமாக போய் முடிந்தது வரை அத்தனையையும் நினைவுக்குக் கொண்டு வருவோம். இந்த வருட மிக முக்கியமான நிகழ்வுகளில் தோன்றிய முக்கால்வாசி பெண்கள் எளிய மனிதிகள். இந்த வருட வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த பத்து பெண்களைப் பற்றிய தகவல்கள் ரீவைண்டு...

கௌசல்யா சங்கர்

கௌசல்யா - டாப் 10 பெண்கள்கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சாதி மறுப்புத் திருமணம் செய்ததற்காக சங்கர் ஜாதி வெறியர்களால் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டார். தாக்குதலில் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார் சங்கரின் மனைவி கௌசல்யா. சங்கர் குடும்பமே என் குடும்பம் என்கிற தீர்க்கத்தோடு சங்கர் வீட்டில் வசித்து வந்தார் கெளசல்யா. இதற்கிடையில் தற்கொலை முயற்சி, அதன்பிறகான கவுன்சிலிங்குகுப் பிறகு புதுமனிதியாக மாறினார் கெளசல்யா. அரசு வேலை, நடை, உடை பாவனை, பேச்சு என தன்னை மாற்றிக்கொண்டதோடு, தன் அன்பு கணவரின் கனவுகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். இந்த வருடம் நாட்டையே திரும்பி பார்க்க வைத்திருக்கும், சங்கர் ஆணவக்கொலை வழக்கில் தொடர்புடைய கௌசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்குத் தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. சமூகப் போராட்டம் தாண்டி சட்டப்போராட்டத்திலும் முன் நின்று, இந்த வருடத்தின் தலைப்புச் செய்திகளில் தவிர்க்க முடியாதவராகியிருக்கிறார்.

அனிதாடாக்டர் அனிதா - டாப் 10 பெண்கள்

சென்ற கல்வியாண்டில் தன் மருத்துவக் கனவை நிறைவேற்றத் துடித்தவர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா. தேர்வு முடிவில் 1,176 மதிப்பெண்கள் பெற்றவருக்கு இடியாய் இறங்கியது நீட் தேர்வு முடிவு. உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடினார். மத்திய மாநில அரசுகளின் பந்து மாற்றிப் போட்டு விளையாட்டில் பாழானது அனிதாவின் வாழ்க்கை. விளைவு செப்டம்பர் ஒன்றாம் தேதி தற்கொலை செய்துகொண்டார் அனிதா. அவரின் மரணம் ’நீட்’ தேர்விற்கு எதிராகத் தமிழக அளவில் மிகப்பெரிய எழுச்சியைக் கல்லூரி, பள்ளி மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் ஏற்படுத்தியது.

ஓவியாஓவியா - டாப் 10 பெண்கள்

படங்களுக்காக ரூம் போட்டு யோசித்திருந்தால்கூட சினிமா டயலாக்ஸ் நேஷனல் டிரெண்டிங்கில் வந்திருக்காது. ஆனால், தான் யோசிக்காமல் பேசிய டயலாக்குகளால் ரசிகர்கள் மத்தியில் 'ஓவர் நைட் ஒபாமா' ஆனார் நடிகை ஓவியா. 'பிக் பாஸ்' ரியாலிட்டி ஷோவில் தொடர் கலாய்ப்புகளுக்கு ஆளாகிக்கொண்டிருந்த ஓவியாவின் தொடர் இயல்புத்தன்மையோ, இயல்பான நடிப்போ 'ஓவியா ஆர்மியைக் கட்டமைக்கும்' அளவுக்குத் தமிழக இளைஞர்களை உசுப்பிவிட்டிருந்தது. ஓவியா கேரக்டர் அனாலிசிஸ், ’ஓவியா பொன்மொழிகள்’ என்று இந்த வருடம் தவிர்க்க முடியாத ஆன்லைன், ஆஃப்லைன் டாப்பிக்கானவர் ஓவியா.

ஜிமிக்கி கம்மல் ஷெரில் ஜிமிக்கி கம்மல் ஷெரில்

’வெளிப்படிண்டே புஸ்தஹம்’ என்கிற படத்தின் பெயர் தெரியாதவர்களுக்கெல்லாம், ‘எண்டம்மேட ஜிமிக்கி கம்மல்’ பாடல் நிச்சயம் பரிச்சயம். ’ஓணம்’ கொண்டாட்டத்திற்காக கேரளாவிலுள்ள ’பி’ (பிசினஸ்) ஸ்கூலைச் சேர்ந்த மாணவர்கள், அவர்கள் ஆசிரியர் ஷெரிலுடன் அந்தப் பாடலுக்கு ஆட, ஆட்டம் கண்டது இளைஞர் பட்டாளம். வீடியோ வியூஸ் மில்லியனைத் தொட்டது. அதில் ஆடிய ஷெரிலுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைக்க, எல்லா இடமும் ‘ஜிமிக்கி கம்மல்’ தான். எதுகை மோனையாக உச்சரிப்பு வருகிறது என்கிற ஒரே காரணத்துக்காக அமெரிக்க டிவியின் தொகுப்பாளர் 'ஜிம்மி கேமல்லை'யும் ’விடாது கருப்பு’ என்று கருத்து சொல்லவைத்ததது ஜிமிக்கி கம்மல்!

வளர்மதி - டாப் 10 பெண்கள்வளர்மதி

நெடுவாசல் கதிராமங்கலத்தில் நடைபெற்று வந்த போராட்டங்களுக்கு ஆதரவாக துண்டுப் பிரச்சாரங்களைக் கொடுத்ததற்காக இந்த வருடம் ஜூலை 13 ஆம் தேதி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இதழியல் மாணவி வளர்மதி கைது செய்யப்பட்டார். சில நாள்களிலேயே அவர்மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. செப்டம்பர் மாதம் அவர் மீதான குண்டர் சட்டம் ( செப்டம்பர் 7) நீக்கப்பட்டது. சிறையிலிருந்து வெளியில் வந்தபிறகும் போராட்டங்களின் தொடர்ந்து பங்கேற்று வருகிறார் மாணவி வளர்மதி.

ஹதியா

ஹதியாகேரளாவைச் சேர்ந்த அகிலா தமிழகத்தில் படிக்கும் போது, சக தோழியின் மதம் மீதான ஈடுபாடு காரணமாக 'மதம் மாறி' ஹதியாவானார். இது அவருடைய குடும்பத்தினருக்கு பிடிக்காத நிலையில், மேட்ரிமோனி மூலமாக இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒருவருடன் ஹதியாவுக்கு நடந்த திருமண ஏற்பாடு நடக்க... இது 'லவ் ஜிஹாத்' என்று ஹதியாவின் தந்தை வழக்குத் தொடர்ந்தார். இதற்கிடையில் ஹதியாவுக்கு நடந்த திருமணத்தை ரத்து செய்வதாக அறிவித்தது கேரள உயர் நீதிமன்றம். வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார் ஹதியா. 'என் உயிருக்கு ஆபத்து' என்று வீட்டுச் சிறையிலிருந்த அவர் பேசிய வீடியோ பெரிய போராட்டங்களைக் கிளப்ப, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் ஹதியாவின் கணவர். 'என் விருப்பப்படியே மதம் மாறினேன்... யாரும் கட்டாயப்படுத்தவில்லை' என்றார். உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தற்போது சேலத்தில் உள்ள கல்லூரியில் டீன் கண்காணிப்பில் தன் படிப்பைத் தொடர்ந்து வருகிறார் ஹதியா.

சைரா வாசிம்சைரா வாசிம்

'தங்கல்' பட நாயகி சைரா வாசிம் கடந்த 10-ம் தேதி டெல்லியிலிருந்து மும்பை சென்றபோது, விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் தனக்குப் பின்னால் அமர்ந்திருந்த தொழில் அதிபர் ஒருவரால் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக, அழுதுகொண்டே இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றைப் பதிவுசெய்தார். இந்த வீடியோ வைரலானது. சைரா வாசிமின் வயது 17 என்பதால், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் (போக்சோ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார். உடனே, சமூக வலைத்தளத்தில் உள்ளவர்கள் 'சைரா தனக்கு நடந்ததை ஏன் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தார், உடனடியாக சம்பந்தப்பட்ட ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கோ, அந்த ஸ்பாட்டிலோ தெரியப்படுத்தியிருக்கலாமே' என்ற கேள்விக்கணைகளை வீச ஆரம்பித்தார்கள். இதுபோன்ற கமெண்டுகளுக்கு எதிராக மும்பை காவல்துறை ’விக்டிம் ஷேமிங்’ என்ற ஹேஷ்டேகில் ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். அதற்கும், சாதாரண நபருக்கு நடந்திருந்தால் காவல்துறை இப்படி ஒரு ட்வீட் செய்திருப்பார்களா என்று கேட்டது வேறு ரகம்.

மனுஷி சில்லார்மனுஷி சில்லர்

108 நாடுகளைச் சேர்ந்த அழகிகளுக்கு நடுவே, 2017 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி சீனாவின் சன்யா நகரில் நடைபெற்றது. இதில் இறுதிச் சுற்றுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா, கென்யா மற்றும் மெக்சிகோ நாட்டு அழகிகள் தேர்வாகினர். இறுதிச் சுற்றில் கேட்கப்பட்ட, உலகிலேயே எந்த வேலைக்கு அதிகமான சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்ற கேள்விக்கு, ’தாய்மை’ என்று பதிலளித்தார். 2017 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தையும் வென்றார். 20 வயதான மனுஷி சில்லர் ஒரு மருத்துவமாணவி. மீண்டும் படிப்பினை தொடர விரும்புவதாகக் கூறி இருக்கிறார். இதுவரை நான்கு பெண்கள் ஏற்கனவே உலக அழகிப் பட்டம் வாங்கி இருந்த நிலையில், 17 வருடங்கள் கழித்து மனுஷி சில்லர் வாங்கியிருக்கிறார். ’இது பெருமையா’ என்று உலக அழகிப் போட்டியின் பின் செயல்படும் சர்வதேச சந்தையை சுட்டிக்காட்டிப் பேசுபவர்களின் விமர்சனங்களும் இருக்கத் தான் செய்கிறது.

தீபிகா படுகோன்தீபிகா படுகோனே

இந்த வருடம் முழுவதுமே தொடர்ந்து ட்ரெண்டு ஆனவர் தீபிகாதான். தீபிகாவின் முதல் ஹாலிவுட் பட ரிலீஸ், ரன்வீருடனான காதல் பற்றி கிசுகிசு, ட்விட்டரில் அதிக ஃபாலோயர்களை பெற்றது, பத்மாவதி பட சர்ச்சை என தொடர்ந்து பத்திரிகையின் முதல் பக்கத்திலேயோ கடைசி பக்கத்திலேயோ இடம்பெற்றுக்கொண்டிருந்தார்.

 

பிவி சிந்துபிவி சிந்து

பிவி சிந்துவுக்கு 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் மைல் கல். அதன்பிறகான அவருடைய வெற்றி ஒவ்வொன்றும் சரித்திரத்தில் இடம்பெற்றவை. பிஎம்எஃப் மகளிர் ஒற்றை பாட்மின்டன் போட்டியில் வெள்ளி பதக்கம், கொரியா ஓப்பன் தொடரைக் கைப்பற்றிய முதல் இந்திய என்கிற பெருமை என்று இந்த வருடத்தில் அடித்து ஆட ஆரம்பித்தார் சிந்து. இவரை மேலும் கெளரவப்படுத்த நினைத்த ஆந்திர அரசு, கிருஷ்ணா மாவட்டத்துக்கான டெபூட்டி கலெக்டராக சிந்துவை நியமித்திருக்கிறது. வெல்டன் கேர்ள்.


டிரெண்டிங் @ விகடன்