மாநிலங்களவையில் சச்சினைப் பேசவிடாமல் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள்!

மாநிலங்களவையில், தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பேச எழுந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும் எம்.பி-யுமான சச்சின், எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் அமைதியாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. 

மாநிலங்களவை உறுப்பினராக உள்ள சச்சின், `விளையாடும் உரிமை மற்றும் நாட்டில் விளையாட்டின் எதிர்காலம்’ என்ற தலைப்புகளில் விவாதிக்க நோட்டீஸ் அளித்திருந்தார். கடந்த ஐந்தாண்டுகளாக மாநிலங்களவை எம்.பி-யாக இருக்கும் சச்சின், முதன்முறையாக விவாதம் ஒன்றைத் தொடங்க நோட்டீஸ் அளித்திருந்தார். மதியம் 2 மணியளவில் அவருக்குப் பேச நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த தலைப்பின் கீழ், ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் வகையிலான பயிற்சிகளுக்கு உரிய வசதிகள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பேசுவதாக இருந்தார்.

இந்தநிலையில், சச்சின் பேச எழுந்தபோது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்த பிரதமர் மோடியின் பாகிஸ்தான் விமர்சனத்துக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்தியாவின் புகழை உலகறியச் செய்த ஒரு விளையாட்டு வீரருக்கு நீங்கள் அளிக்கும் மரியாதை இதுதானா என்று அவைத்தலைவர் வெங்கைய நாயுடு சமாதானம் கூறியும் எம்.பி-க்களின் கூச்சல் அடங்காததால், சச்சின் டெண்டுல்கரால் தொடர்ந்து பேச முடியவில்லை. உறுப்பினர்களின் அமளி காரணமாக அவர் அமைதியாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை எம்.பி ஜெயா பச்சான், ‘இந்தியாவின் பெருமையை உலக அளவில் கொண்டு சேர்த்தவர் சச்சின். இன்றைய அவை நடவடிக்கைகளில் அவர் பேசுவது குறித்து உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தும், அவரைப் பேச அனுமதிக்காதது வெட்கக்கேடானது. அரசியல்வாதிகளை மட்டுமே பேச அனுமதிக்க வேண்டுமா’ என்றார் காட்டமாக.   
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!