உடல் ஒரு தடையில்லை... இது ப்ளஸ் சைஸ் நடிகர்களின் அரங்கம்!

`அவுட்லுக்' பிசினஸ் இதழ், கடந்த மாதம் பல்வேறு துறைகளைச் சார்ந்த இந்தியப் பெண்களுக்கு `women of worth' விருதுகளை வழங்கி கெளரவித்தது. விருது பெற்றவர்களுள் ஒருவரான நடிகை வித்யாபாலனிடம், ஒரு செய்தியாளர் இப்படி ஒரு கேள்வியை எழுப்பினார். ``பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் கதைகளாகத் தேர்வுசெய்து நடித்துவருகிறீர்கள். மற்ற படங்களில் நடிப்பதற்கு உங்களின் உடல் எடையைக் குறைக்கும் நோக்கம் இருக்கிறதா?''.

இந்தக் கேள்வியால் சில விநாடி நேரம் அதிர்ந்த வித்யா, ``நான் விதவிதமான கதாபாத்திரங்களில் நடிப்பதுகுறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இத்தகைய கேள்விகளைக் கேட்கும் உங்களைப் போன்றோர், தங்களின் கண்ணோட்டத்தை மாற்றிக்கொண்டால் நன்றாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

``என்னது பிரைஸா... பிரஷர் குக்கர் குடுக்கிறீங்களா! உங்க ரேடியோவுல குக்கருக்குப் பதில் டி.வி கேட்டா குடுப்பாங்களா!'' - சிறியது, பெரியது என்றில்லாமல், போட்டிகளில் கலந்துகொண்டு எதையும் ஒரு கை பார்த்துவிடும் ஆக்டிவான குடும்பப் பெண் சுலு. தும்ஹாரி சுலு... சமீபத்தில் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வித்யா பாலன் நடித்திருக்கும் திரைப்படம் இது. இத்தகைய பெண் மைய கதாபாத்திரங்கள்கொண்ட திரைப்படத்தில், உடல் எடையைத் தவிர விவாதிக்க வேறு எதுவும் இல்லையா என்பதுதான் வித்யாபாலனின் கேள்வி.

உடல் தடையல்ல...

உடல் எடை, தோலின் நிறம் ஆகியவற்றை வைத்து மனிதர்களை எடைபோடும், கேலிக்குள்ளாக்கும் மனநிலைக்கான வித்யாபாலனின் பதிலாக சமூக வலைதளங்களில் இது விவாதிக்கப்பட்டது. பணியிடங்களில், பொது இடங்களில் சாமான்யர் முதல் பிரபலங்கள் வரை, உடலைக் கேலிக்குள்ளாக்கும் மனநிலையை நோக்கி சமீபகாலமாக விவாதங்கள் எழத் தொடங்கியுள்ளன.

Anuradha`ஜீரோ சைஸ்' எனப்படும் பார்பி டைப் உடல்தான் அழகு, மெல்லிடை அழகு போன்ற ஃபார்முலாக்களை உடைத்து, உடல்வாகுக்கும் திறமைக்கும் தொடர்பில்லை என்பதை உரைக்கத் தொடங்கியிருக்கிறது பெங்களூரின் தியேட்டர் குழு ஒன்று.

பிக் ஃபேட் (Big fat Company) தியேட்டர் நிறுவனத்தின் இயக்குநரான அனுராதா இதுகுறித்து பேசும்போது,

``எனது உடல் எடை காரணமாக 19 வயதில் நான் பாட்டியாக நடித்திருக்கிறேன். நல்ல நடிப்புத்திறன் இருந்தும், குறிப்பிட்ட மிகச்சில கதாபாத்திரங்களுக்கு மட்டுமே நான் தேர்வுசெய்யப்படுவதை நினைத்து மனஉளைச்சலில் இருந்தேன். எவ்வளவு திறமை இருந்தாலும், மாமியாராகவும் வீட்டு வேலைகளைச் செய்யும் பாவப்பட்ட பெண்ணாகவும் மட்டுமே நடிப்பதற்கு வாய்ப்புகள் அமையும். அத்தகைய தொடர்ச்சியான மன உளைச்சலின் காரணமாகவே இந்த நிறுவனத்தைத் தொடங்கினேன். தொலைக்காட்சி, சினிமா, தியேட்டர் எனப் பல பின்னணிகொண்ட, உடல் எடை அதிகம் உள்ள நடிகர்கள்தான் எனது குழுவினர்” என்றார். கன்னடத்திலும் ஆங்கிலத்திலும், பிக் ஃபேட் கம்பெனி நடத்தும் நாடகங்களுக்குக் கூட்டம் குவிகிறது. 

`இங்கே ஒருசில ஃபார்முலாக்கள் இருக்கின்றன. அவை நன்றாகவே வேலை செய்கின்றன. அதனால், யாரும் அதை மாற்ற விரும்பவில்லை. இத்தகைய இமேஜ் சிக்கல்கள், பலரையும் சொந்த வீட்டுக்குள்ளும், பணி இடங்களிலுமே மனஉளைச்சலுக்கு உள்ளாக்குகின்றன. இந்த ஸ்டீரியோ டைப்பை உடைக்கும் வேலையில்தான் ஈடுபட்டுள்ளோம். இந்த மனநிலையை அடைவதற்கு, இந்தச் சமூகத்துக்கு நீண்டகாலம் ஆகலாம். கலை வழியாக அதற்கு பங்களிக்கிறோம்” என்றார் அனுராதா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!