வெளியிடப்பட்ட நேரம்: 11:51 (22/12/2017)

கடைசி தொடர்பு:12:50 (22/12/2017)

முதல் சித்த மருத்துவ திருநங்கை மாணவி முதல் பீரியட்ஸ்க்கு லீவ் வரை - வாடி ராசாத்தி நிகழ்வுகள்! #2017Rewind

2017-ம் ஆண்டு பெண்களுக்கு முக்கியமான ஆண்டு. ‘வாடி ராசாத்தி’ என்று பல்வேறு ’முதல் முறையாக' நிகழ்வுகளின் தொகுப்பாக, புதுமைகளின் தொகுப்பாக 2017 வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. அவற்றில் சில...

பீரியட்ஸ் லீவ்: 

கடந்த ஜூலையில் மும்பையில் இருக்கும் ஒரு நிறுவனம், மாதவிடாயின் முதல் நாள், பெண்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது, பெரும் வரவேற்பைப் பெற்றது. இன்றைக்கும் பேருந்தில் 'பொம்பளை சீட்டில் போய் உட்காரும்மா' என்றும், ‘அதென்ன பொம்பைளைக்கு தனிச் சீட்டு’ என்றும், இடம் கொடுக்க வீம்பு செய்யும் ஆண்கள் மத்தியில், மாதவிடாயின்போது விடுமுறை என்பது மிகப்பெரிய விஷயம். மும்பை நிறுவனத்தின் அறிவிப்பு, கேரளாவில் சில தனியார் பள்ளிகளிலும் இன்னும் சில இடங்களிலும் எதிரொலித்தது. முரசு கொட்டி வரவேற்க வேண்டிய விஷயம். 

சங்கர் கொலை வழக்கு: 

சங்கர் ஆணவக்கொலை வழக்கில், கௌசல்யாவின் தொடர் நீதிப் போராட்டத்தின் பயனாக, 6 பேருக்குத் தூக்கு என்ற தீர்ப்பு, நாட்டையே திரும்பி பார்க்கவைத்துள்ளது. இதில், தீர்ப்பு வழங்கிய நீதிபதி, அலமேலு நடராஜன் என்கிற பெண் என்பது சிறப்பான விஷயம். 

உயர்ந்த உயர் நீதிமன்றம்! மீ டூ

சென்னை உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உள்பட 7 பெண் நீதிபதிகள் ஏற்கெனவே பணியாற்றி வந்தநிலையில், புதிதாக 4 பெண் நீதிபதிகள் டிசம்பரில் நியமிக்கப்பட்டனர். தற்போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கும் 60 நீதிபதிகளில் 11 பேர் பெண்கள். இதற்கு முன்பு மும்பை உயர் நீதிமன்றத்தில் 11 பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். 

மைனர் மனைவி: 

திருமணம் செய்த கணவராகவே இருந்தாலும், 18 வயதுக்குட்பட்ட பெண்ணுடன் உடலுறவுகொள்வது பாலியல் வன்கொடுமையாகவே கருதப்படும் என்று தீர்ப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது. அதேநேரம், சமூக ஆர்வலர்கள் 'இந்தியாவில் பதினெட்டு வயதுக்குட்பட்டு திருமணங்கள் நடைபெறுகின்றன என்பதை நீதிமன்றமே ஒப்புக்கொண்டுள்ளது. தீர்ப்பில் நிறையக் குளறுபடிகள் உள்ளன' என்று விமர்சித்துள்ளார்கள். 

போராட்டங்களில் பெண்கள்: 

ஜல்லிக்கட்டுப் போராட்டம் தொடங்கி, குமரி மீனவர்களை மீட்கக் கோரி நடைபெறும் போராட்டம் வரை, பெண்களின் ஈடுபாடு அதிகமாகி இருப்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். போராட்டம் என்றாலே, அங்கொன்றும் இங்கொன்றுமாக காணமுடிந்த பெண்கள், இன்று குடும்பத்துடன், நண்பர்களுடன் சேர்ந்து களத்தில் இறங்கியிருப்பது மாபெரும் மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. 

நமக்கு நாமே: 

'மீ டூ Me too' என்கிற கேம்பைன் மூலமும் மற்றும் பல இடங்களில் வேறு யாரையும் எதிர்பார்க்காமல், தங்கள் பிரச்னைகளுக்கு தாங்களே குரல் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள் பெண்கள். டெல்லியில் ஒரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தில், தங்கள் உறுதியினால், ஒழுங்கு கண்காணிப்பாளராக ஒரு பெண்ணை நியமிக்க வைத்துள்ளார்கள். தாங்கள் சந்தித்த பாலியல் வன்முறைகளைப் பேசவும், எழுதவும் தொடங்கியுள்ளார்கள். 

புதுமைப் பெண்கள் - Women in Cinema Collective

சினிமாக்களில் பெண்கள்: 

சினிமாவில் எப்போதும் இருக்கும் ‘மாஸ்’ ஹீரோக்களுக்கான வரவேற்புக்கு இணையாக 'மாஸ்' ஹீரோயின்கள் உருவாக ஆரம்பித்துள்ளார்கள். 'அறம்', 'அருவி' என்று பெண்களை மையப்படுத்தி வெளியாகும் படங்கள் வசூலைக் குவிக்கிறது. தமிழ் சினிமா, இந்திய சினிமா, ஹாலிவுட் என எல்லாவற்றிலும் நாயகிகளின் கொடி உயரப் பறக்கிறது. 

யூனியன் அமைத்த பெண்கள்: 

நடிகை பாவனா பிரச்னைக்குப் பிறகு, Women in Cinema Collective என்கிற பெயரில், கேரள சினிமா துறையில் பெண்களுக்கான அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் இருகும் பெண்கள், கேரள சினிமாவின் ஆணாதிக்கத் தன்மைக்கு எதிராகவும் பேசி வருகிறார்கள். அப்படி அங்கே கலகத்தை மிகத் தீவிரமாக செய்துவருகிறார் நடிகை பார்வதி. தமிழிலும் உதவி பெண் இயக்குநர்கள் அவர்களுக்கான சங்கத்தை தொடங்கி இருக்கிறார்கள்!

வளர்மதி

நெடுவாசல் கதிராமங்கலத்தில் நடைபெற்று வந்த போராட்டங்களுக்கு ஆதரவாக துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்ததற்காக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இதழியல் மாணவி வளர்மதி கைதுசெய்யப்பட்டு அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. கிட்டத்தட்ட 52 நாள்கள் சிறையில் கழித்த மாணவி வளர்மதி, செப்டம்பர் 7-ம் தேதி விடுதலை செய்யப்பட்டு, இன்றும் எல்லாப் போராட்டக்களங்களிலும் நிற்கிறார்.

மதிப்பிற்குரிய திருநங்கை 

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, இந்த ஆண்டு இந்தியாவின் முதல் திருநங்கை உதவி ஆய்வாளராகப் பொறுப்பேற்றுள்ளார் ப்ரித்திகா யாசினி. முதல் திருநங்கை சித்த மருத்துவ மாணவி ஆகியிருக்கிறார் தாரிகா பானு.


டிரெண்டிங் @ விகடன்