2.5 ஏக்கர் இருந்தால் இன்ஜினீயரிங் கல்லூரி தொடங்கலாம்..! புதிய வி(ச)தி

‘இன்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்க இனி கட்டடங்கள் இருந்தால் போதும்’ என ஏ.ஐ.சி.டி.ஐ பிறப்பித்த புதிய விதி, கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இன்ஜினியரிங்

தற்போது இன்ஜினீயரிங் படிப்புக்கான மவுசு குறைந்துவரும் வேளையில், இன்ஜினீயரிங் கல்லூரிகள் கலைக்கல்லூரிகளாக மாறி வருகின்றன. இருக்கும் இன்ஜினீயரிங் சீட் முழுவதும் நிரம்பாத சூழல் காணப்படுகிறது. இந்தநிலையில் எளிதாக இன்ஜினீயரிங் கல்லூரிகளைத் தொடங்க விதிகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன. இதனால், பொறியியல் கல்வியின் தரம் மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது. 

2011-ம் ஆண்டில் இருந்து 2015-ம் ஆண்டு வரை, பெரிய மாநகரங்களில் இரண்டரை ஏக்கர் நிலமிருந்தால் இன்ஜினீயரிங் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த அளவு 2016-ம் ஆண்டில் ஒன்றரை ஏக்கராக மாறியது. தற்போது கட்டடங்கள் இருந்தால் போதும் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கப்படும் என்ற அளவுக்கு விதிமுறை மாற்றப்பட்டிருக்கிறது. இதன்மூலம் சென்னை போன்ற பெருநகரங்களில் வாடகை கட்டடத்தில்கூட பொறியியல் கல்லூரி என்ற பெயர்ப் பலகையை மாற்றிவிட முடியும்.  

இன்ஜினீயரிங் கல்லூரி அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழு தலைவர் அனில்இதற்கான காரணத்தை அறிய ஏ.ஐ.சி.டி.இ-யின் தலைவர் அனில் சஹஸ்ரபுத்தேவிடம் பேசியபோது "மும்பை போன்ற பெருநகரத்தில், இடப்பற்றாக்குறை காரணமாக கல்லூரி ஆரம்பிப்பதற்கும் விரிவாக்கம் செய்வதற்கும் முடிவதில்லை. இதனைக் கருத்தில்கொண்டு பெருநகரத்தில் மட்டும் கல்லூரி கட்டுமளவு இடமிருந்தால் அனுமதி வழங்கப்படும் என்று விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறைந்த நிலப்பரப்பில் உள்ளூர் அமைப்பின் அனுமதியுடன், பல அடுக்கு கொண்ட கட்டடங்கள் அமைத்து, கல்லூரியைத் தொடங்கவும், விரிவாக்கம் செய்துகொள்ளவும் முடியும்" என்றார்.

1984-ம் ஆண்டில் 100 ஏக்கர் நிலமிருந்தால் மட்டுமே பொறியியல் கல்லூரி ஆரம்பிக்க அனுமதி என்று இருந்தது. அதன்பின்பு கால ஓட்டத்தில் 40, 20, 10 என குறைந்துகொண்டே வந்து, தற்போது கட்டடங்கள் இருந்தால் போதும் என்று விதிமுறைகள் மாறி இருக்கின்றன. தற்போது இரண்டாம் கட்ட நகரங்களில் பொறியியல் கல்லூரி ஆரம்பிக்க 2.5 ஏக்கரும், கிராமப்பகுதியாக இருந்தால் 7.5 ஏக்கர் நிலமும் இருக்க வேண்டும். 

பெருநகரங்களில் இரண்டு மனை நிலம் இருந்தாலேயே கல்லூரி தொடங்கிவிட முடியும். ஒரு மனையில் கல்விக் கட்டடங்கள், நிர்வாக அலுவலகம் மற்றும் இதர வசதிகள் இருக்க வேண்டும். இன்னொரு மனையில் விளையாட்டுத் திடல், விடுதி உட்பட இதர வசதிகள் அமைந்திருக்கலாம். இரண்டு மனைகளுக்கு இடைப்பட்ட தொலைவு இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்க வேண்டும் என்கிறது புதிய விதி. மேலும், ஏற்கெனவே உள்ள கல்வி நிறுவனங்களில் அதிக இடமிருந்தால் புதிய கல்லூரிகளைத் தொடங்கவும் புதிய படிப்புகளை ஆரம்பிக்கவும் அனுமதி வழங்கப்படும் என்கிறது ஏ.ஐ.சி.டி.இ. இதன்மூலம், ஏற்கெனவே உள்ள கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்திக்கொள்ள முடியும். 

அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி அமைப்பின் தென்மண்டல அதிகாரி பாலமுருகனிடம் பேசியபோது, "கல்லூரியில் புதிய படிப்பு ஆரம்பிக்க வாய்ப்பு வழங்கும்போது, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்கள்  சேர்க்க அனுமதிப்படுவார்கள். தரமான கல்வி வழங்கவே நாங்கள் அதிகளவில் கவனம் செலுத்துகிறோம்" என்கிறார். 

இன்ஜினீயரிங் கல்லூரி முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமிஅண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, “தனியார் கல்லூரிகளின் நிர்பந்தத்தால் விதிமுறையை தளர்த்தி இருக்கிறார்கள். கல்லூரி ஆரம்பிக்க குறைந்தபட்சம் 2.5 ஏக்கர் என்பது ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. பொறியியல் கல்லூரியில்  செயல்முறை பயிற்சிப் பட்டறைகள், ஆய்வகங்கள் போன்றவற்றை அமைப்பதற்கு அதிக அளவில் இடம்தேவை" என்றார். 

வள்ளியம்மை இன்ஜினீயரிங் கல்லூரியின் முதல்வர் சிதம்பரராஜன், "புதிய விதியால், பெருநகரத்தின் மையத்திலேயே கல்லூரியை ஆரம்பிக்க முடியும். ஆனால், குறைந்த அளவு மாணவர்களையும், குறைந்த படிப்புகளை மட்டுமே அனுமதிப்பதால் இந்த கல்லூரிகள் பயிற்சி நிலையங்களாக மட்டும்  செயல்பட முடியும்" என்றார். இந்த விதிமுறை தளர்வுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் உண்டு. அந்த வகையில்  விதிமுறையை வரவேற்றிருக்கிறார் கல்வியாளர் ஜெய்பிரகாஷ் காந்தி. அவர் கூறுகையில், "கல்லூரிக்கு மாணவர்கள் அதிகளவில் பயணம் செய்ய வேண்டி இருக்கிறது. இனி நகரத்துக்கு அருகில் கல்லூரியை ஏற்படுத்தும்போது பயணிக்கும் நேரம் குறையும். இதனால், மாணவர்கள் படிப்புக்கு அதிக நேரம் செலவழிக்க முடியும்" என்றார். 

ஏற்கெனவே, பொறியியல் கல்லூரியில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் 30 சதவிதத்துக்கு குறைவாக மாணவர் சேர்க்கை கொண்டிருக்கும் பாடப்பிரிவையும் கல்லூரியையும் மூடி விட வேண்டும் என்று விதிமுறை இருக்கிறது. இது ஐந்து வருடங்களாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் மாணவர்கள் சேர்க்கை இல்லை என்றாலும் கல்லூரிகள் தொடர்ந்து செயல்படுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கல்லூரியில் 15 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் என்ற விகிதத்தில் பணியாற்ற வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. தற்போது 20 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் என்று மாற்றிவுள்ளனர். இதன்மூலம், பேராசிரியர்களின் எண்ணிக்கை குறைவதோடு, பலர் வேலையை இழக்கும் அபாயமும் உருவாகி இருக்கிறது.

எல்லோரும் பொறியியல் கல்லூரி தொடங்கிவிடலாம். படிக்கும் மாணவர்களின் எதிர்காலம்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!