வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (22/12/2017)

கடைசி தொடர்பு:16:20 (22/12/2017)

எதிர்கட்சிகள் தொடர் அமளி: ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை!

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றம்

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 15-ம் தேதி கூடியது. இந்தத் தொடரில், குஜராத், இமாசலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது போலவே முதல் நாளிலேயே எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றத்தின் லோக் சபா கூட்டத்தொடர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், நடந்த கூட்டத்தொடரில் ஆளுங்கட்சியினர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்திப் பேசினர். இதனால், கொந்தளித்த எதிர்க்கட்சிகள் பா.ஜ.க-வினர் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கோஷம் எழுப்பினர். ஆனால், முடிவு எட்டாததால் காங்கிரஸ் எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் கூச்சலும் குழப்பமும் தொடர்ந்து நீடித்து வந்தது. இதனால் மீண்டும் அவையை ஒத்திவைப்பதாகச் சபாநாயகர் அறிவித்தார்.

இந்நிலையில் நேற்று மீண்டும் மாநிலங்களவையில் நியமன எம்.பி சச்சின் பேசுகையில் காங்கிரஸ் கட்சியினர் கூச்சல் குழப்பத்தில் ஈடுப்பட்டனர். நாடாளுமன்றத்தில் முதன் முதலாகப் பேச எழுந்த சச்சினின் பேச்சு தடைபட்டு சபை ஒத்திவைக்கப்பட்டது. இன்று மாநிலங்களவைக் கூட்டத்தொடர் ஆரம்பித்தபோது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் சபை வருகிற புதன்கிழமை வரையில் ஒத்திவைக்கப்பட்டது.