வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (22/12/2017)

கடைசி தொடர்பு:17:00 (22/12/2017)

``நான் எடுத்த முடிவுகள் சரியானவைதான்” : 2ஜி விவகாரத்தில் ஆ.ராசா விளக்கம்

``2ஜி விவகாரத்தில் தான் எடுத்த முடிவுகள் சரியானவை, சட்டப்படியானவை” என ஆ.ராசா விளக்கமளித்துள்ளார்.

ஆ.ராசா

இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் வழக்கு என்று கூறப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் நேற்றுத் தீர்ப்பு வெளியானது. வழக்கில் தொடர்புடைய அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆ.ராசா, 'தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக நான் இருந்த காலகட்டத்தில் கம்பியில்லா சேவையைப் பொருளாதார அளவிலும் அனைவருக்கும் கிடைக்கும் வகையிலும் கொண்டு செல்ல நான் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் தேசிய தொலைத்தொடர்புத்துறை கொள்கை மற்றும் ட்ராயின் பரிந்துறைகளின்படிதான் செயல்படுத்தினேன். நான், தொலைத்தொடர்புத்துறையில் புரட்சியை ஏற்படுத்தினேன். ஆனால், நான் குற்றவாளியாக்கப்பட்டேன்” என்றிருந்தார்.

இந்நிலையில், இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஆ.ராசா கூறுகையில், “தொலைத்தொடர்புக் கொள்கை, விதி குறித்த சரியான புரிதல் இன்றி சி.பி.ஐ மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் என் மீது குற்றம் சுமத்தினர். ஆனால், 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் நான் எடுத்த அனைத்து முடிவுகளும் சரியானவையே. மேலும், அனைத்து முடிவுகளையும் நான் சட்டப்படியாகவும் சரியாகவே எடுத்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.