ஒகி புயல் பாதிப்பால் கரைதிரும்பாத 275 மீனவர்களைத் தேடும்பணி தீவிரம்: அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

வங்காள விரிகுடா கடலில் உருவான ஒகிபுயல் தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவுகளைக் கடந்த மாதம் 30-ம் தேதி தாக்கியது. 


புயலுக்கு முன்னதாகவே கடலுக்குச் சென்ற மீனவர்கள் பலர் புயலில் சிக்கி கரைதிரும்ப முடியாமல் தவித்தனர். அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி கன்னியாகுமரி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. மீனவர்களை மீட்பதில் அரசுகள் அலட்சியம் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. புயல் பாதித்த பகுதிகளில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். 

இந்தநிலையில், ஒகி புயல் மீட்புப் பணிகள் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்தார். அவர் பேசுகையில், ``புயல் பாதிப்பு ஏற்பட்டபோது 433 மீனவர்கள் காணாமல்போனது தெரியவந்தது. பலர் கரைதிரும்பிய நிலையில், மீதமுள்ள 275 மீனவர்களைத் தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 22 வது நாளாக நடைபெறும் மீட்புப் பணிகளில் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையைச் சேர்ந்த 18 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன'' என்றார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!