1.6 கோடி முதலீட்டில் 112 கோடி சம்பாதித்த அமிதாப் பச்சன்..! எப்படி..?!

பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ஒரு காலத்தில் ‘அமிதாப் பச்சன் கார்ப்பரேசன் லிமிடெட்’ என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். அதன் சார்பில் 1996-ம் ஆண்டில் உலக அழகிப் போட்டியை இந்தியாவில் நடத்தியது அனைவருக்கும் நினைவிருக்கலாம். ஆனால், எதிர்பார்த்த அளவு லாபம் ஈட்டாததால், அந்த நிகழ்ச்சிக்கான செலவுத்தொகையைக் கூட கட்ட முடியாமல், நிதி சிக்கலில் சிக்கி, நிறுவனத்தின் பங்குதாரர்கள் மற்றும் வங்கிகளுக்குப் பதில் சொல்லமுடியாத மோசமான சூழலைச் சந்தித்தார். அதன்பின்னர், நடிப்பில் முழுக்கவனம் செலுத்தி, வயதுக்கேற்ற கேரக்டர்களைத் தேர்ந்தெடுத்து நடித்து, முன்னணி நடிகராக மீண்டும் பிரகாசித்து, பட்ட கடனையெல்லாம் அடைத்தார். தொடர்ச்சியாக அவர் நடிப்பில் கவனம் செலுத்தினாலும், இன்னொரு பக்கம், முதலீடுகளிலும் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு வருகிறார். பங்குகளில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவதிலும் தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதை அண்மையில் நிரூபித்துள்ளார். 

கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம், சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் மெரிடியன் டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் அமிதாப் பச்சனும் அவரது மகன் அபிஷேக் பச்சனும் இணைந்து  2,50,000 டாலர்கள் முதலீடு செய்தனர். இந்நிறுவனத்தின் அங்கமான ஜித்து.காம் (ziddu.com), சோசியல் காமர்ஸ்&சோசியல் கேமிங் ப்ளாட்ஃபார்ம் ஸ்டார்ட்அப்  நிறுவனம். வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற பகுதியிலுள்ள நிறுவனங்களுக்கு நிதி நிர்வாகம், விற்பனைக்கான கட்டமைப்பு ப்ளாட்ஃபார்ம்களை உருவாக்கித் தருகின்றது. இந்நிறுவனத்தில், பிட்காய்ன்களைப் போலவே ஜித்து காய்ன்கள் எனும் டிஜிட்டல் கரன்ஸி மூலம் பணப்பரிவர்த்தனை நடைபெறும். இந்த ஜித்து காய்ன்களை பிட்காய்ன்களாக மாற்றிக்கொள்ள இயலும்.  முதலீட்டாளர்கள் மத்தியில் அதிக அறிமுகமில்லாத அந்நிறுவனத்தில் பெரிய தொகையை முதலீடு செய்வதற்கு அசாத்தியத் துணிச்சல் அல்லது அந்நிறுவனத்தின் எதிர்காலம் குறித்த, பிட்காய்ன் பரிவர்த்தனை குறித்த தெளிவான கணக்கீடு இருந்திருக்க வேண்டும். 

அமிதாப் பச்சன்இதில் முதலீடு செய்ததையடுத்து, இரண்டே ஆண்டுகளில் பச்சன்களின் முதலீடுகள், அனைவரும் வியக்குமளவு பெருந்தொகையாக உருவெடுத்தன. ஆம், ரூ.1.6 கோடி முதலீடானது, ரூ.112 கோடியாக உயர்ந்தது. பல ஆண்டுகளாக பங்கு முதலீட்டு வர்த்தகத்தில் ஈடுபடும் நிபுணர்களால்கூட இத்தகைய வருவாயை ஈட்டுவது கடினம். ஆனால், சத்தமில்லாமல் அமிதாப் குடும்பம் இதைச் சாதித்துள்ளது. 

இந்த ஜித்து.காம் நிறுவனத்தை, அமெரிக்காவைத் தலைமையிடமாகக்கொண்ட லாங்ஃபின்(LongFin) நிறுவனமானது, தன் 2.5 மில்லியன் பங்குகளுக்கு ஈடாக விலைக்கு வாங்கியது. அப்படி விலைக்கு வாங்கிய செய்தி தெரிந்ததுமே கடந்த வாரத் தொடங்கத்தில் 1,000 சதவீதம் உயர்ந்திருந்த பங்கின் விலை, 2,500 சதவீதம் வளர்ச்சியடைந்தது. அமிதாப் பச்சன் இந்நிறுவனத்தில் 250,000 பங்குகளை ரூ.1.6 கோடி செலவில் விலைக்கு வாங்கியிருந்தார். இந்நிறுவனப் பங்குகளின் அபரிமித வளர்ச்சியால் ஒரு பங்கின் விலை, தோராயமாக 4,484 ரூபாயாக உயர்ந்தது. ஆக,  அமிதாப்பச்சனின் முதலீடானது தோராயமாக ரூ.112 கோடியாக உயர்ந்தது. 

அமிதாப் பச்சன் இப்போது மட்டுமல்ல, ஏற்கெனவே 2013-ம் ஆண்டில் ஜஸ்ட் டயல் நிறுவனத்தில் முதலீடு செய்து பெருமளவு லாபம் பார்த்தார். இந்நிறுவனத்தில் அவர் முதலீடு செய்த நான்கே மாதத்தில், ஒரு பங்கின் விலையானது 10,190% உயர்ந்தது. அதன் காரணமாக, இவர் முதலீடு செய்திருந்த 6.27 லட்சம் ரூபாயானது, ஏழு கோடி ரூபாயாக உயர்ந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!