வெளியிடப்பட்ட நேரம்: 18:06 (22/12/2017)

கடைசி தொடர்பு:18:43 (22/12/2017)

அனுஷ்காவின் பனாரஸ் சேலை, விராட் அணிந்த தங்க பட்டன், பிரதமர் வருகை - விருஷ்கா திருமண வரவேற்பு ஹைலைட்ஸ்! #VirushkaReception

விருஷ்கா

ந்த ஆண்டு முடியவிருக்கும் நிலையில், ஆன் -லைன் ரசிகர்கள் மிகவும் கொண்டாடியது, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் முன்னணி நடிகை அனுஷ்கா ஷர்மா திருமணம்தான். கடந்த 11ம் தேதி, முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ, இத்தாலியில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் நான்கு ஆண்டுகள் காதலித்து வந்தது உலகமறிந்த விஷயம். திருமணம் முடிந்து, இருவரும் ஃபின்லாந்தில் (Finland) ஒரு குட்டி ஹனிமூனுக்குச் சென்று திரும்பினர். இருவரும் ஹனிமூனில் இருக்கும் புகைப்படத்தை, அனுஷ்கா ஷர்மா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சொர்க்கத்தில் இருக்கிறேன்” எனக் குறிப்பிட்டு பகிர்ந்துகொண்டது வைரலானது. 

விருஷ்கா


இந்த நிலையில், டெல்லியில் இவர்களின் திருமண வரவேற்பு விழா நேற்று நடந்தது. அங்குள்ள தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற இந்தத் திருமண வரவேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர். இருவரின் திருமண வரவேற்பு ஆடைகளை வடிவமைத்தது பிரபல ஆடை வடிவமைப்பாளர் சபயாஷாச்சி முகர்ஜி. அனுஷ்கா ஷர்மா அணிந்திருந்த பனாரஸ் சேலை குறித்து, சபயாஷாச்சி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “அனுஷ்கா தன் திருமண வரவேற்பு விழாவில் சிவப்பு நிற பனாராஸ் சேலை அணிய விரும்பினார். இந்தியாவில் மணமகள்கள் ஏதேனும் ஒரு நிகழ்விற்காவது சிவப்பு நிறத்தில் ஆடைகள் அணிய விரும்புவார்கள். தங்கச் சரிகை வேலைப்பாடுகள் கொண்ட சிவப்பு பனாரஸ் சேலை அணிந்திருந்த அனுஷ்கா தேவதைபோல் காட்சியளித்தார். அந்தச் சேலைக்குப் பொருத்தமான வைர நெக்லஸ் மற்றும் ஜிமிக்கி கம்மல் அணிந்திருந்தார். இந்திய ஆடைகளைப் பிரபலப்படுத்துவதில் பாலிவுட்டிற்கு முக்கியப்பங்கு இருக்கிறது. இன்னும் சில மாதங்களில், அனுஷ்கா அணிந்திருக்கும் பனாரஸ் ரக சேலைகளை இந்தியா முழுவதும் பிரபலமாவதற்கு வாய்ப்புண்டு. நன்றி, அனுஷ்கா”, என்று பதிவிட்டிருந்தார்.

விருஷ்கா


அதேபோல், புது மணமகன் தோற்றத்தில் விராட் கோலி, கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் ‘பந்த்காலா’ (Bandhgala) என்னும் ஜோத்பூர் ரக கோட்-சூட் அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த கறுப்பு நிற சில்க் கோட்டில், 18 காரடிலானா தங்க பட்டன்கள் தைக்கப்பட்டு ஆடை வடிவமைக்கப்பட்டிருந்தது. கறுப்பு கோட்டுக்கு ஏற்ப, வெள்ளை நிற சில்க் குர்தா அணிந்திருந்தார். இந்த ஆடையில் விராட்டை கம்பீரமாகக் காட்டியது, எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பஷ்மீனா ஷால்தான். இந்த ஆடையில், விராட் கோலி ராயல் லுக்கில் இருந்தார் என்றும் சபயாஷாச்சி குறிப்பிட்டிருந்தார்.

இதற்குமுன், இத்தாலியில் நடந்த இவர்களின் திருமணம் ஆடைகளையும் வடிவமைத்தது இவர்தாம். அனுஷ்கா நிச்சயதார்த்த நிகழ்ச்சியில், வெல்வட் சேலையும், திருமணத்திற்கு பிங்க், ஆரெஞ்சு நிறம் கலந்த லெஹங்காவும் அணிந்திருந்தார். விராட் பிங்க் நிற குர்தாவை அணிந்திருந்தார்.

விருஷ்கா

டெல்லியில் நடந்த திருமண வரவேற்பு விழாவில், விராட்டும் அனுஷ்காவும் சேர்ந்து நடனமாடியது, ஷிகர் தவானின் நடனம் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. டெல்லியை அடுத்து, மும்பை பிரபலங்களுக்காக வரும் 26ம் தேதி ரிசப்ஷன் விழாவை நடத்தவிருக்கிறார்கள் விராட் - அனுஷ்கா தம்பதி. அதற்காக இன்று காலை இருவரும் மும்பை விமான நிலையத்துக்குச் சென்றடைந்தனர். இருவரையும் மீண்டும் ஒரு முறை திருமண உடையில் பார்க்க, இருவரின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கின்றனர். மும்பையில் இருவரும் என்ன மாதிரியான உடைகளில் தோன்றபோகிறார்கள் என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ் என்கிறார் அதை வடிவமைத்த சபயாஷச்சி. மொத்தத்தில் விராட் - அனுஷ்காவின் பிரம்மாண்ட விழாவுக்கு பார்த்துப் பார்த்து உடைகளைத் தேர்வு செய்திருக்கிறார் சபயாஷாச்சி! ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு உடை... அத்தனையும் ஆன்லைனில் ஆண்கள் மற்றும் பெண்களைக் கவர்ந்திழுத்திருக்கிறது.

இந்தக் கொண்டாட்டங்கள் முடிந்து, வரும் ஜனவரி 5ம் தேதி, தென்னாப்பரிக்காவில் நடக்கவிருக்கும் இந்தியா-தென்னாப்பரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டியில், விராட் கோலி  விளையாடவிருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்