வெளியிடப்பட்ட நேரம்: 08:55 (24/12/2017)

கடைசி தொடர்பு:08:55 (24/12/2017)

மம்முட்டி பட வசனம்... கொதித்த பார்வதி... வைரலாகும் ஓரினச்சேர்க்கையாளரின் ஃபேஸ்புக் பதிவு!

சமீபத்தில் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் சினிமாக்கள் அதிகரித்திருந்தாலும், கதைகளை ஆண்களின் கண்கள் வழியாக பேசும் திரைப்படங்களே ஆக்கிரமித்திருக்கின்றன. திருநங்கைகள், திருநம்பிகள், இரு பாலீர்ப்பாளர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள் என அதிகம் பேசப்படாத அல்லது தவறாக சித்தரிக்கப்படும் திரைப்படங்களுக்கும் குறைவில்லை. 

இந்த மாதம் 10-ம் தேதி, கேரள சர்வதேச திரைப்பட விழாவில் நடைபெற்ற விவாதத்தில் பங்கெடுத்த மலையாள நடிகர் பார்வதி, “திரைப்படங்கள் பெண்களின் தரப்பைப் பேசாமல் போவதாலும், அல்லது புரிந்துகொள்ளப்படாமல் தவறாக சித்தரிக்கப்படுவதாலும், பலரும் சித்ரவதைக்குள்ளாக்கும் உறவுகளில் சிக்கிக்கொள்கிறார்கள். ஆண் என்றால் பெண்ணை அடிப்பதும், சாதாரணம் என்றும், வன்முறை கூட அன்பின் பிரதிபலிப்பு என்பதாகவும் காட்டப்படுகிறது. நான் நடிக்கும் திரைப்படங்களில், அத்தகைய பாத்திரங்களை நான் ஏற்கமாட்டேன். என் திரைப்படங்களில் எந்தப் பெண்ணும் வன்முறைக்கு ஆளாவது இயல்புதான் என்னும் மனநிலைக்கு வரக்கூடாது. பெண்களை மதிப்புடன் நடத்தும் திரைக்கதையைத் தேர்வு செய்யவேண்டுமென்பதில் கவனமாக இருக்கிறேன். பிரபல நடிகர் மம்முட்டி நடித்திருந்த ’கஸாபா’ திரைப்படத்தில், அவர் ஒரு பெண்ணை நோக்கி பேசும் வசனங்கள் கீழ்த்தரமானவை. இளைஞர்கள் இதைப் பார்த்துதானே வளர்கிறார்கள்?” என்று விமர்சித்திருந்தார்.

பார்வதி

மலையாள சூப்பர் ஸ்டார் நடித்த படத்தை விமர்சித்ததால், ’கீழ்த்தரமான பெண்ணியவாதி’, ’ஆன்ட்டி’, ’குரங்கு’.. பின்பு பார்வதியின் ஒழுக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கும் வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருக்கிறார்கள் சமூக வலைதள சினிமா ரசிகர்கள். பெண் வெறுப்பை ஊக்குவிக்கும் சினிமாக்களை எடுக்கக்கூடாது என்னும் கருத்திற்காக தொடர்ச்சியாக சமூக வலைதளவாசிகளாலும்,  கேரள திரைத்துறையைச் சார்ந்த சிலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார் நடிகர் பார்வதி. ’ஒரு திரைப்படம் குறித்து பேசும்போது, அந்தப் படத்தில் நடித்த நடிகர்களை புண்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் பேசவில்லை. என்னை வருத்திய சில விஷயங்களைத்தான் பேசினேன். என் துறை சார்ந்த சீனியர்களையும், அவர்களின் திறமையையும் மிகவும் மதிக்கிறேன். தனி நபர்களை நான் விமர்சிக்கவில்லை’ என்று தன் ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்த பிறகும், பார்வதியின் மீதான ட்ரோல்கள் குறையவில்லை.

Muhammed Yunusகேரளாவைச் சேர்ந்த ஓரினச்சேர்க்கையாளர் முஹமது உனைஸ், பார்வதியின் கருத்துகளை ஆதரித்து மலையாளத்தில் எழுதியுள்ள பதிவு பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அந்தப் பதிவில், ‘2005-ம் ஆண்டு, நடிகர் திலீப் நடித்த ‘சாந்துப்பொட்டு’ என்ற திரைப்படம் வெளியாச்சு. பாட்டியால வளர்க்கப்படுற திலீப், பெண் மாதிரியே பழகுவார். பெண்களுடைய குணநலன்களோடு இருப்பார். கடைசியா அவருடைய ஆண்மையை உணர்வார். மாநில விருது வாங்கின அந்தப்படம் அப்போ பெரிய ஹிட் கொடுத்துச்சு. ஆனா, இந்தப் படத்துல, திருநர்கள் சமூகத்த கேலிப்பொருளா மாத்தி, நகைச்சுவைக்காக பயன்படுத்திக்கிட்டாங்க. நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது, என்னுடைய நடை, பேச்சு, பாவனைகள் காரணமா, என்னுடைய வகுப்புல நான் வித்தியாசமானவா தெரிஞ்சேன்.

சாந்துபொட்டு கேரக்டர் மாதிரிதான் நானும்னு, என்னுடைய மலையாள ஆசிரியர், என்னைக் குறிப்பிட்டு பேசினப்ப, க்ளாஸ்ல எல்லோரும் என்னைப் பார்த்து சிரிச்சாங்க. பகல் நேரத்துல நான் ஒரு கேலிப்பொருள். என் நிலைமைய நினைச்சு நைட்டு முழுக்க அழுவேன். தற்கொலை பண்ணிக்கலாம்னு நெனச்சேன். தற்கொலை பண்ணிக்கிறவங்க நரகத்துல சேர்வாங்கன்னு என்னுடைய மத நம்பிக்கை காரணமா, நான் அந்த முடிவை எடுக்கல. ஒன்பதாவது வகுப்பு படிக்கறப்போ, மனநல மருத்துவர ஆலோசிக்க போனேன். பூட்டின அந்த அறைக்குள்ள, அவர்கிட்ட எல்லாத்தையும் சொல்லி அழுதேன். அதுக்கு பிறகு எடுத்துக்கிட்ட மருந்துகள்லதான் குணமானேன். ஸ்கூல்ல, என்னுடைய ஆண் ஆசிரியர்கள் என்ன மாதிரியே நடந்து காட்டுவாங்க. இதையேதான் பிரபலமான, வெகுஜன சினிமாக்களும் செய்யுது. ஒரு வேளை அந்த ஏழாவது வகுப்பு படித்த முஹமது, ‘சாந்துப்பொட்டு’ படம் வெளியானப்ப, தற்கொலை பண்ணியிருந்தா, சினிமாக்கள்ல காட்டப்படற இந்த பாகுபாடு குறித்து, வெளிப்படையான இந்த பெண் (பார்வதி) பேசுறதை பாக்கமுடியாம போயிருக்கும். பார்வதி, சிறுபான்மையினர் எல்லோருக்காகவும் பேசியிருக்காங்க. அவங்க ஏற்கெனவே ஜெயிச்சிட்டாங்க. பார்வதி நம்பிக்கை கீற்று” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார். 

உனைஸின் பதிவுக்கு ட்விட்டரில் பதிலளித்திருக்கும் பார்வதி, ”உங்களின் மேல் மதிப்பு ஏற்படுகிறது. மிகக் கடினமான காலங்களை கடந்திருக்கிறீர்கள். இந்த வலியை உங்களுக்கும், உங்களைப் போன்ற மற்றவர்களுக்கும் கொடுத்ததற்காக, நான் சார்ந்திருக்கும் துறையின் சார்பாக மன்னிப்பு கோருகிறேன். சினிமா, சமூகத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று சொல்பவர்களின் கவனத்துக்கு இது செல்லட்டும். இத்தகைய துன்பங்களை அளித்துவிட்டு, இவர்களை சிறுபான்மையினர் எனக் குறிப்பிடாதீர்கள். கண்ணைத் திறந்து சுற்றிப் பார்த்தால், இதுதான் எங்கும் நடந்துகொண்டிருக்கிறது என்பதை உணரமுடியும். குருட்டுத்தனமாக பேசுவதை நிறுத்துங்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்