மருந்து விலையில் கட்டுப்பாடு... மருத்துவமனை முறைகேடுகளுக்குத் தீர்வு கிடைக்குமா?!

மருத்துவத் துறை, நாளுக்கு நாள் அச்சுறுத்துகிறது. சிகிச்சைக்கான செலவுகளைவிட சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் பொருள்கள், மருந்துகள் மற்றும் உபகரணங்களின் செலவுகளே அதிகம். முழுக்க முழுக்க லாபத்தை மட்டுமே நோக்கமாகக்கொண்டு செயல்படும் பல மருத்துவமனைகளில், முறைகேடுகள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. 

மருந்து

சமீபத்தில் குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் டெங்குக் காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்றுவந்த ஏழு வயதுச் சிறுமி, சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். இவருடைய சிகிச்சைக்காக 1,600 கையுறைகளும் 660 சிரிஞ்சுகளும் பயன்படுத்தப்பட்டதாக அந்த மருத்துவமனை கட்டணம் வசூலித்துள்ளது. இதில் ஒரு சிரிஞ்சியின் விலை 70 ரூபாய் என்ற விகிதத்தில் கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதன் கொள்முதல் 15 ரூபாய் மட்டுமே. இதை தேசிய மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் விலை நிர்ணய ஆணையம் ஆய்வுசெய்து கண்டுபிடித்துள்ளது. இதுபோன்ற முறைகேடுகள் இந்த மருத்துவமனையில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இதனால் ஏழைகள் பெரும்பாதிப்புக்குள்ளாகின்றனர். விலை நிர்ணயங்களில் கட்டுப்பாடுகள் இல்லாததே, இதற்கு முக்கியக் காரணம்.

இந்த குர்கான் சம்பவத்துக்குப் பிறகு, தேசிய மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் விலை நிர்ணய ஆணையம், அதிரடி நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது. இதற்கு முன்னரே சில மருத்துவக் கருவிகளுக்கு விலை நிர்ணயம் செய்துள்ள நிலையில், தற்போது மருத்துவச் சிகிச்சையின்போது பயன்படுத்தும் பொருள்களுக்கும் விலை நிர்ணயம் செய்ய முயற்சி எடுத்துவருகிறது. அந்தப் பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், அவற்றின் மீது விலையை பிரின்ட் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறது. முக்கியமாக, ஊசிகள், கையுறைகள் போன்றவற்றுக்கான விலையை நிர்ணயம் செய்வதில் தீவிரம் காட்டிவருகிறது. இதனால் இவற்றின் விலை இனி கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது. மேலும், சில மருத்துவ உபகரணங்கள் மீது விலை நிர்ணய நடவடிக்கை தொடர வாய்ப்புள்ளது. ஆனால், தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு, பெரு நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன. 

மருந்து

இதுகுறித்து மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் விற்பனை பிரதிநிதிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது... “இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, நாங்கள் விலை குறைப்பு செய்துவருகிறோம். தற்போது இருப்பில் உள்ள பொருள்களில் விலையை அச்சடித்தும் வருகிறோம். என்னதான் விலைக் கட்டுப்பாடு கொண்டுவந்தாலும், நாங்களும் விலையைக் குறைத்தாலும் சில மருத்துவமனைகளில் முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க முடியாது. ஏனெனில், லாப நோக்கில் செயல்படும் சில மருத்துவமனைகள்  நோயாளிகளின் கணக்கில் மருந்துகளையும் மருத்துவ உபகரணங்களையும் இஷ்டத்துக்குச் சேர்த்து கட்டணம் வசூலிக்கின்றன. மருத்துவமனைகள் எங்களிடம் எவ்வளவு பேரம் பேசி விலை குறைப்பு செய்து பொருள்களை எவ்வளவு குறைவாக வாங்க முடியுமோ அந்த அளவுக்கு வாங்கி, அதிக லாபத்துக்கு விற்கின்றன. இதை யார் தடுப்பது?" என்கின்றனர்.    

மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் இந்த நடவடிக்கை, மிகவும் அவசியமானது. அதே சமயம் மருத்துவமனைகளும் அதை உணர்ந்து மருத்துவச் சிகிச்சையை நேர்மையாகச் செய்ய வேண்டும். பணம் வைத்திருப்பவர்களுக்கு, ‘கூடுதல் கட்டணம்’ பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் ஏழைகளுக்கு, அவர்களின் உயிரே பறிபோகும் நிலைகூட ஏற்படலாம். அதுமட்டுமல்லாமல் இறந்துபோன நோயாளிகளின் கணக்கில் முறைகேடாகக் கணக்குக் காட்டி, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் போக்கும் குறைய வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!