`அந்த 1,000 கோடி ரூபாய்க்கு என்ன கணக்கு?' - கூடங்குளத்தை வறுத்தெடுத்த சி.ஏ.ஜி! | CAG’s Performance Audit Report on Kudankulam Nuclear Power Project, Units I & II

வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (27/12/2017)

கடைசி தொடர்பு:20:25 (27/12/2017)

`அந்த 1,000 கோடி ரூபாய்க்கு என்ன கணக்கு?' - கூடங்குளத்தை வறுத்தெடுத்த சி.ஏ.ஜி!

கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள 1 மற்றும் 2-ம் அணு உலைகளின் செயல்பாடு குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டு நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது சி.ஏ.ஜி. 

கூடங்குளம்


இந்த ஆய்வின் முடிவில், கூடங்குளம் அணு உலைகளின் 1 மற்றும் 2-ம் யூனிட்டுகள் நிறுவப்பட்ட விதம் குறித்தும், செயல்பாடு குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. கடன் வாங்கியதில் வெளிப்படைத்தன்மை இல்லாமை, வெளிநாட்டில் இருக்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகள், போதுமான மேற்பார்வை செய்யாதது என்று பல்வேறு குறைபாடுகள் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

குறிப்பாக, கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்துக்கு வங்கியில் ரூ.1,000 கோடி கடன் வாங்கியதில் விதிகள் மீறப்பட்டுள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1, 2 வது அணு உலைகள் அமைக்க தாமதமானதால் அரசுக்கு பல ரூபாய் கோடி கூடுதல் வட்டி செலுத்த நேரிட்டது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டவோ சரிசெய்யவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பன போன்ற குற்றச்சாட்டுகள் ஆதாரபூர்வமாக முன்வைக்கப்பட்டுள்ளன. 

இது குறித்து, `சி.ஏ.ஜி-யின் அறிக்கை, கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடும் மக்களின் அச்சத்தை உறுதிபடுத்தியுள்ளது. அந்த அறிக்கையில் ரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்ட தரக்குறைவான பொருள்கள் குறித்தும், வடிவமைப்பில் செய்த மாறுதல்கள், நிதி சார்ந்த ஒழங்கற்றத்தன்மைகள் மற்றும் பல விஷயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அணுசக்தி கார்பரேஷன், முறையான அனுமதி வாங்கமலேயே மின் உற்பத்தியை ஆரம்பித்தது சி.ஏ.ஜி ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. பல்வேறு வல்லுநர்களும் கூடங்களும் தென்னிந்தியாவுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தல் என கூறி வருகின்றனர். எனவே, கூடங்குளம் 1 மற்றும் 2-ம் யூனிட்டுகளில் சுதந்திரமான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திச் சொல்லிக் கொள்கிறோம். கூடங்குளத்தில் மேலும், எந்தவொரு விரிவாக்கப் பணிகளும் செய்யப்படக் கூடாது' என்று பூவுலகு அமைப்பின் சார்பில் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் பொறியாளர் சுந்தர்ராஜன்.