முத்தலாக் முறைக்கு முற்றுப்புள்ளியா..? - நாடாளுமன்றத்தில் இன்று மசோதா தாக்கல்!

மும்முறை தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்யும் முத்தலாக் முறையைத் தடை செய்யும் சட்ட மசோதா இன்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத்தால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நாடாளுமன்றம்

இஸ்லாமியர்களிடம் மும்முறை தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்யும் வழக்கம் உள்ளது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தும் விசாரிக்கப்பட்டு வந்தன. பின்னர் அவை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது. ஆகஸ்டு மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. முத்தலாக் முறை அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனத் தீர்ப்பளித்த நீதிபதிகள், அதைத் தடை செய்யும் விதத்தில் 6 மாதகாலத்துக்குள் தனிச்சட்டம் ஒன்றை இயற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். சட்டம் இயற்றும் வரை முத்தலாக் முறைக்கு ஆறுமாத காலத் தடையும் விதித்தனர்.

முத்தலாக் தடைச் சட்டத்தை நடப்பு நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு தீர்மானித்திருந்தது. இந்நிலையில், இன்று அந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!