`தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை... பா.ஜ.க-வை பின்பற்றிவிடக் கூடாது!' - ராகுல் காந்தி

`பா.ஜ.க பொய்களைப் பிரசாரம் செய்து அரசியல் லாபம் அடையப்பார்க்கிறது. நாம், தேர்தல்களில் தோற்றுக்கூடப் போகலாம். ஆனால், உண்மையை விட்டுக் கொடுக்க கூடாது' என்று பேசியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி

கர்நாடகா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் இணை அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே, `மதச்சார்பற்றவர்களுக்குச் சொந்த அடையாளம் கிடையாது. அவர்களுக்கு தங்கள் பெற்றோர் யார் என்பதுகூட தெரியாது. மதச்சார்பின்மை என்ற வார்த்தை இல்லாதவாறு அரசியல் சட்டத்தை நாங்கள் திருத்துவோம்' என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது. இது இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, நாடாளுமன்றத்தில் இவரின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையொட்டி இன்று டெல்லியில் நடந்த காங்கிரஸின் 133வது ஆண்டு விழாவில் பேசிய ராகுல் காந்தி, `இன்று நம் நாட்டில் நடப்பது வஞ்சகத்துடன் நடத்தப்படும் பிரசாரம். அரசியல் லாபத்துக்காகப் பொய்களைப் பிரசாரம் செய்யலாம் என்று பா.ஜ.க நினைக்கிறது. அதுதான் நமக்கும் அவர்களுக்கும் இருக்கும் முக்கியமான வேறுபாடு. நாம் அரசியல் களத்தில் சில நேரங்களில் நன்றாகச் செயல்படாமல் இருக்கலாம். நாம், தேர்தல்களில் தோற்றுக்கூடப் போகலாம். ஆனால், நாம் உண்மையை விட்டுக் கொடுக்க கூடாது' என்று பா.ஜ.க-வை கடுமையாக விமர்சித்துள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!