வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (28/12/2017)

கடைசி தொடர்பு:12:45 (28/12/2017)

`அரசியல் சட்ட சாசனம்தான் எனக்கு எல்லாமே...' - பல்டியடித்த அனந்த குமார் ஹெக்டே

கர்நாடகா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவோர் இணை அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே, `மதச்சார்பற்றவர்களுக்குச் சொந்த அடையாளம் கிடையாது. அவர்களுக்கு தங்கள் பெற்றோர் யார் என்பதுகூட தெரியாது. மதச்சார்பின்மை என்ற வார்த்தை இல்லாதவாறு அரசியல் சட்டத்தை நாங்கள் திருத்துவோம்' என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நாடாளுமன்றத்தில் இவரின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

அனந்த குமார் ஹெக்டே


பூதாகரமாகியுள்ள இந்த விஷயத்தைப் பற்றி இன்று பேசிய ஹெக்டே, `நான் கூறிய கருத்துக்காக மக்களவை மற்றும் மாநிலங்களவை முடக்கப்பட்டுள்ளது. என் சகாக்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அரசியல் சட்ட சாசனம்தான் எனக்கு மிக உயர்வானது. என் கருத்தால் யாராவது புண்பட்டிருந்தால், மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்திய அரசியல் சட்டம், நாடாளுமன்றம், பாபா சாகேப் அம்பேத்கரை நான் மிகவும் மதிப்பவன். சட்ட சாசனம்குறித்து எந்தக் கேள்வியையும் எழுப்ப முடியாது. நாட்டின் குடிமகனாக அதற்கு எதிராக நான் எப்போதும் செயல்பட முடியாது' என்று தெரிவித்துள்ளார்.