வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (28/12/2017)

கடைசி தொடர்பு:19:35 (29/12/2017)

`ஆண் வேடமிட்டு மூன்று பெண்களை மணந்தது எப்படி?' - ஆந்திர இளம்பெண்ணின் மறுபக்கம்

ரமாதேவி

ஆண் என்று நடித்து மூன்று பெண்களைத் திருமணம் செய்த ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண், சென்னையில் கைது செய்யப்பட்டார். 

 ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டம், ஜம்மலமடுகு அருகே உள்ள இடிகலபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமாதேவி. 21 வயதான இவர், ஆண் வேடமிட்டுத் தன்னைத் திருமணம் செய்ததாகப் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் ஆந்திர மாநிலப் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் ரமாதேவியைப் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் ஆண் வேடமிட்டு மூன்று இளம்பெண்களைத் திருமணம் செய்த தகவல் தெரியவந்தது. இது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து ஆந்திர மாநிலப் போலீஸார் கூறுகையில், "கடந்த சில தினங்களுக்கு முன்பு, கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எங்களிடம் ஒரு புகார் கொடுத்தார். ஆண் வேடமிட்ட ரமாதேவி என்ற பெண், என்னை ஏமாற்றி திருமணம் செய்ததாக மீனா கூறியிருந்தார். அவரின் புகார் வித்தியாசமாக இருந்தது. வழக்கமாக ஆண்கள்தான் பல பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றுவார்கள். ஆனால், இந்தப் புகாரில் பெண்ணே ஆண் வேடமிட்டு ஏமாற்றியிருப்பதாகக் கூறியிருந்தால் அதுதொடர்பாக விசாரணை நடத்தினோம். 
 
சம்பந்தப்பட்ட ரமாதேவியைப் பொறிவைத்துப் பிடிக்க முடிவு செய்தோம். புகார் கொடுத்த மீனாவின் உதவியோடு ரமாதேவிக்கு போன் செய்தோம். அப்போது, அவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் தகவல் கிடைத்தது. உடனே, பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்துக்கொண்டு சென்னை வந்தோம். எங்களைப் பார்த்ததும் ரமாதேவி அதிர்ச்சியடைந்தார். அடுத்து, எங்களிடமிருந்து தப்பி ஓடவும் முயன்றார். அவரை மடக்கிப்பிடித்து ஆந்திராவுக்கு அழைத்துவந்தோம். அவரிடம் நடத்திய விசாரணையில், ஆண் வேடமிட்டு மூன்று பெண்களை ரமாதேவி திருமணம் செய்த தகவல் தெரிந்தது. 

ரமாதேவி, புலிவேந்துலாவில் உள்ள நூற்பாலையில் பணியாற்றியபோதுதான் மீனாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ரமாதேவி, சிறுவயதிலிருந்தே தன்னை ஆண்போல பாவித்து ஆண்களுக்குரிய உடைகளையே அணிந்துவந்துள்ளார். மேலும், ஆண்களைப் போலவே சிகை அலங்காரமும் செய்திருக்கிறார். அவரின் நடவடிக்கைகள் அனைத்தும் ஆண்போலவே இருந்துள்ளன. ரமாதேவி, மீனா ஆகியோரின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. மீனாவிடம் ரமாதேவி தன்னுடைய பெயரை ராம் என்றே கூறியிருக்கிறார்.

 
 
 திரிஷாவுடன் ரமாதேவி

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மீனாவை ராம் திருமணம் செய்துள்ளார். முதலிரவு அன்று எதையோ சொல்லி சமாளித்துவிட்டார் ராம். அடுத்த நாள் இரவும் அதே நிலை. இதனால் ராம் மீது மீனாவுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ராமின் நடவடிக்கைகளைக் கண்காணித்த மீனா கடும் அதிர்ச்சியடைந்தார். அதாவது, ராம் ஆண் அல்ல, பெண் என்று தெரிந்தது. இதனால் கனவுகளுடன் தொடங்க இருந்த திருமண வாழ்க்கை கானல் நீராக மாறியதால் மீனா மனவேதனையடைந்தார். அடுத்து, ராம் குறித்த முழுத் தகவலை தன்னுடைய பெற்றோரிடம் அவர் கூறினார். இந்தச் சமயத்தில் ராம், வெளியூருக்கு வேலைக்குச் செல்வதாக அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். 

 எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் ராம் என்ற பெயரில் மீனாவை ஏமாற்றித் திருமணம் செய்த ரமாதேவியைக் கைது செய்தோம். அவரிடம் விசாரித்தபோது, சிறுவயது முதலே ஆண்கள் போலவே வாழ ரமாதேவி விரும்பியுள்ளார். அதற்காக அவர், தன்னுடைய நடை, உடை என அனைத்து நடவடிக்கைகளையும் ஆண்போலவே மாற்றியிருக்கிறார். பெயரையும் மாற்றிய ரமாதேவிக்கு ஏனோ பெண்கள் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்தான் மூன்று பெண்களைத் திருமணம் செய்துள்ளார். மீனாவைபோல் மற்றவர்களையும் காதலித்து திருமணம் செய்திருக்கிறார். ரமாதேவி வலையில் அனந்தபுரம் மாவட்டம், கொத்தச்செருவு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கடப்பா மாவட்டம், பொதட்டூரைச் சேர்ந்த இன்னொரு இளம்பெண்ணையும் வீழ்ந்துள்ளனர். திருமணம் முடிந்த சிலநாள்களிலேயே அவர்களை விட்டுவிட்டுத் தலைமறைவாகிவிடுவது ரமாதேவியின் ஸ்டைலாக இருந்துள்ளது. மீனாவை திருமணம் செய்த இரண்டே நாளில் அங்கிருந்து தலைமறைவாகியிருக்கிறார். இந்த மூன்று பெண்களைத் தவிர வேறு யாராவது ரமாதேவியிடம் ஏமாந்துள்ளார்களா என்று விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர். 

 ரமாதேவியின் இந்த விபரீத ஆசைக்கு என்ன காரணம் என்று போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டோம். "ரமாதேவிக்கு நடந்த கசப்பான அனுபவம்தான் அவரை இந்தளவுக்கு மாற்றியிருக்கிறது. ரமாதேவியின் உடல்நலத்தைக் கருத்தில்கொண்டு அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளோம். உடல்நலம் தேறியவுடன் எங்களது அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும். இதற்கிடையில் மீனாவுக்கு இரண்டு முறை ரமாதேவி மயக்க மருந்து கலந்து கொடுத்ததாகத் தகவல் வெளியானது. அதுதொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. எங்களது முதல்கட்ட விசாரணையில் நகை, பணத்துக்காகத்தான் ரமாதேவி பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. விசாரணை முடிவில்தான் முழுவிவரங்கள் தெரியவரும். மேலும், புகார் கொடுத்த மீனாவிடமும் ரமாதேவியின் முழுவிவரங்களை பெண் போலீஸார் மூலம் சேகரித்துவருகிறோம்" என்றார்.  


டிரெண்டிங் @ விகடன்