பசுப் பாதுகாப்பின் பெயரில் தாக்குதல்... வெறுப்பு வன்முறைகளில் முதலிடம் வகிக்கிறது 2017! #2017Rewind

ராஜஸ்தான் - ஹரியானா எல்லையில் கடந்த மாதம் சுட்டுக்கொல்லப்பட்ட உமர்கான் உள்பட, `பசுப் பாதுகாப்பு' என்ற பெயரில் இந்த வருடம் மட்டும் கொலை செய்யப்பட்டவர்கள் 11 பேர். 2010-ம் ஆண்டிலிருந்து பசுக்களை முன்வைத்து நடத்தப்படும் வன்முறைகள், இந்த ஆண்டுதான் (2017) அதிகளவு நடத்தப்பட்டுள்ளன. பசுக்களை முன்வைத்து நடத்தப்படும் வெறுப்பு வன்முறைகளின் புள்ளிவிவரத்தை, ஆண்டுவாரியாக வெளியிட்டிருக்கிறது இந்தியா ஸ்பெண்ட். 2010-ம் ஆண்டிலிருந்து இதுவரை நிகழ்த்தப்பட்ட வன்முறைகளில், மொத்தம் 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 25 பேர் இஸ்லாமியர்கள். 

வன்முறை

உள்துறை அமைச்சகத் தகவலின்படி, பசுக்களை முன்வைத்து நடத்தப்படும் வெறுப்பு வன்முறைத் தகவல்களை, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சேகரிக்கவில்லை. வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை, படுகாயமடைந்தவர்கள், சிறு காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள், இடம், ஆண்டு, மாநிலம், வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தபோது ஆட்சியிலிருந்த கட்சி ஆகிய பல தகவல்களையும் பட்டியலிட்டிருக்கிறது இந்தியா ஸ்பெண்ட்.

Harsh manderஎழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான ஹர்ஷ் மண்டெரிடம் `கெளரக்‌ஷா' என்னும் பெயரில் நடத்தப்படும் வன்முறை குறித்துக் கேட்டபோது,

``ஊடகத்தின் கவனத்துக்கு வராத வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம். சமீபத்திய வருடங்களில், இதன் எண்ணிக்கை வேகமாக வளர்ந்திருப்பதை நம்மால் பார்க்க முடியும். வன்முறைகளை நிகழ்த்துபவர்கள், அனுமதிக்கப்பட்ட சூழல் கிடைத்திருப்பதால் மட்டுமே இதை தொடர்ச்சியாகச் செய்கிறார்கள். இதுமட்டுமல்ல, வழிபாட்டுத்தலங்களில் குறிப்பாக தேவாலயங்களில் தொடுக்கப்படும் தாக்குதல்கள், தலித்துகள், முஸ்லிம்களின் மீதும் நடத்தப்படும் தாக்குதல்கள் ஆகியவற்றின் மூலம் சகிப்பின்மையாளர்களின் வக்கிரத்தைக் காண முடிகிறது. பசுப் பாதுகாப்பின் பெயரில் நடத்தப்படும் கொலைகள், சிறுபான்மையினர் மீது நடக்கும் தாக்குதல்கள் - இவை அனைத்துக்கும் நோக்கம் மத சகிப்பின்மையும் மதவெறியும்தான்” என்றார்.

2017-ம் ஆண்டில் நடத்தப்பட்ட வெறுப்பு வன்முறைகளின் விவரம்:

ஏப்ரல் 1, 2017 - ராஜஸ்தான், ஜெய்ப்பூரில் சனிக்கிழமை சந்தையிலிருந்து 75,000 ரூபாய் மதிப்புள்ள இரு பசுக்களை வாங்கிக்கொண்டு திரும்பும்போது, ஆறு பேர், பஜ்ரங் தள் மற்றும் விஷ்வ இந்து பரிக்‌ஷத் உறுப்பினர்களால் வழிமறிக்கப்பட்டனர். பசுவை சட்டபூர்வமாக வாங்கியதற்கான ஆவணங்கள் காட்டப்பட்டப் பிறகும், அந்த ஆறு பேரில், அர்ஜுன் எனும் பெயர்கொண்ட ஒருவரை மட்டும் தவிர்த்து, மற்ற ஐந்து பேரும் கடுமையான தாக்குதலுக்குள்ளானார்கள். அடுத்த இரண்டு நாளில், ஐவரில் ஒருவரான 55 வயது பெஹ்லூ கான் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ஈத் பண்டிகைக்கு மூன்று நாள்கள் முன்பாக (ஜூன் 22, 2017), மஸ்ஜித்துக்குச் சென்று புது உடைகள் வாங்கிக்கொண்டு மதுரா ரயிலில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார் ஜுனைத். `தேச விரோதி’ என்றும், `மாட்டிறைச்சி சாப்பிடுபவன்’ என்றும் வன்முறையாளர்கள் அவதூறு பேசியதால், அங்கிருந்து அகல நினைத்த 16 வயது சிறுவன் ஜுனைத் கொல்லப்பட்டார். ``ஜுனைத் என் குழந்தை, 16 வயதுதான் ஆகிறது. ஏன் எங்களை இப்படி வெறுக்கிறார்கள்? அந்த இடத்துக்கு நான் பதறிச் சென்று சேர்ந்தபோது, எனது மகன் ஹாஷிம், ஜூனைத்தைத் தனது மடியில் ரத்த வெள்ளத்தில் கிடத்தி வைத்திருந்தான்” என்றார் ஜூனைத்தின் தந்தை ஜலாலுதீன்.

ஆகஸ்ட் 27, 2017 -  மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நஸ்ருல் இஸ்லாம் (25), அன்வர் ஹுசைன் (19) மற்றும் ஹஃபிசுல் ஷேக் (19) பசுக்களுடன் பயணித்தபோது, பசுப் பாதுகாவலர் என்னும் பெயரிலான கும்பல், அவர்களை வழிமறித்து 50,000 ரூபாய் அளித்தால் விட்டுவிடுவதாகக் கூறியுள்ளனர். பணம் தர மறுத்த அவர்களை, கிராம மக்கள் முன்னிலையில் தாக்கியுள்ளனர். அன்வர் ஹுசைனும் ஹஃபிசுல் ஷேக்கும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

டிசம்பர் 6,  2017 - லவ் ஜிகாத்தில் ஈடுபட்டார் எனக் குற்றம்சாட்டி,  முகமது அப்ரசூல் என்கிற கூலித் தொழிலாளியை சம்புலால் ரேகர் எனும் நபர் கோடரியால் வெட்டி, மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்தார். இஸ்லாமியர்களுக்கு எதிரான பேச்சுடன் இந்தச் சம்பவத்தைப் படம் பிடித்து ஆன்லைனில் பதிவேற்றப்பட்ட வீடியோ, நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!